இனியொரு விதைப்பந்து செய்வோம்

விளை நிலங்கள் எல்லாம் ‘விலை’ நிலங்களாக மாறுவதாலும் காடுகள் எல்லாம் கான்கிரீட் கற்களாக மாறுவதாலும் காற்றை தேடி அலையும் அவலத்தை உருவாக்கி கொண்டிருக்கிறான் மனிதன்.
உலகின் அனைத்து ஜீவராசிகளும் உயிர் வாழ அவசியமானது காற்று. மனிதனை தவிர  காற்றின் அவசியத்தை அனைத்து உயிரினங்களும் உணர்ந்து இருக்கின்றன. ஆனால் மனிதன் ஏன் உணர மறுக்கிறான். அதனால் விளையும் விளைவுகள் பற்றியதுதான் இந்த பகிர்தல்.
 காற்றின் ஆதாரங்களாக திகழும் மரங்களையும், அதன் இருப்பிடமாக இருக்கும் மலைகளையும் சுயநலத்தால் அழித்து கொண்டும், அறுத்துக் கொண்டும் திரியும் மனிதர்களால் காற்றையும் குடிநீரையும் காசு கொடுத்து விலைக்கு வாங்கும் அவல சூழல் நம்மிடையே பரவியிருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை, நாம் குடிநீரை விலை கொடுத்து வாங்குவோம் என கனவிலும் நினைத்திருக்க மாட்டோம். அவற்றுக்கு மாறாக இன்று வீட்டுக்கு வீடு வாட்டர் கேன்களும், பியூரிஃபை மிஷின்களுமாக மாட்டிக் கொண்டிருக்கிறோம். மரங்களின் மதிப்பை உணராததால், மரங்களை நடுவதை விட்டு விட்டு சுவாசிக்கும் காற்றை காசு கொடுத்து வாங்க திரியும் நிலைக்குள் சிக்கி கொண்டிருக்கிறோம்.

 

மரங்கள் வளர, விதைகளை பரப்பி வந்த பறவைகளை எல்லாம் கதிர்வீச்சு கோபுரங்களின் துணை கொண்டு விரட்டி விட்ட நிலையில், சுயம்பாக எழுந்த மரங்களும் இன்று இல்லாமல் போய்விட்டன. இது தவிர விதையில்லா பழங்களையும், முளைப்பு திறன் அற்ற விதைகளையும் பயன்படுத்தி மரங்களின் வளர்ச்சியை சுருக்கிவிட்டோம். இதன் மூலம் இயற்கையின் சுழற்சியாக பின்னிக்கிடந்த சங்கிலியில் இருந்து ஒவ்வொரு கன்னியாக அறுத்து வருகிறோம். இந்நிலை தொடர்ந்தால் இந்த இயற்கைக்கு மாறான சூழலில் சிக்கி மறையும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
நம் மண்ணிற்கு உகந்த மரங்களுக்கான விதைகளை, நாம் பொருட்செலவு ஏதும் இன்றி உருவாக்க முடியும்.
நம் வீடுகளில் உள்ள கால்நடைகளின் சாணத்தினை மணலுடன் கலந்து,  அதில் விதைகளை கொண்ட சிறு சிறு பந்துகளாக உருட்டி விதை பந்துகளாக மாற்ற வேண்டும். அவ்வாறு உருவாக்கப்பட்ட விதை பந்துகளை நம்வீட்டு பிள்ளைகள் பிறந்த நாள், திருமண விழாக்கள் போன்றவற்றில் கொடுத்து,  அவற்றை அவரவர் வீட்டை சுற்றியுள்ள காலி நிலங்களில் வீசச் செய்தால் நாளைய சமுதாயத்திற்கான நன்மை கொண்ட பூமியையும், சுத்தமான காற்றையும், காசு இல்லா நல்ல குடிநீரையும் பெற முடியும்.  முயன்றால் முடியாதது ஏதுமல்ல. முயற்சியால் விளையாததும் ஏதுமில்லை.
விதை பந்து செய்வது பற்றிய ஒரு வீடியோ..

மேலும் தெரிந்து -கொள்ள  விதைப்பந்து முகநூல் பக்கம் 

நன்றி: விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *