மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு வலுக்கிறது எதிர்ப்பு

மரபணு மாற்று பயிர்களை, சோதனை முறையில் பயிர் செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், இத்திட்டத்தை, மாநில முதல்வர்கள் மூலம் எதிர்க்க, இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

‘மரபணு மாற்று பயிர்களை, பரிசோதனை முறையில் சாகுபடி செய்யலாம்’ என, மத்திய அரசு அனுமதி வழங்கிஉள்ளது. இது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக விவசாயிகள் பலரும், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் அளித்த பேட்டி:

  • மரபணு மாற்று பயிர்களை சாகுபடி செய்ய எந்த நாடும், இதுவரை, 100 சதவீத அளவிற்கு அனுமதி அளிக்கவில்லை.
  • அப்படி இருக்கும் போது, மத்திய அரசு, இவ்விஷயத்தில் அவசர அவசரமாக அனுமதி வழங்கியது, யாரை திருப்திப்படுத்துவதற்கு என்று தெரியவில்லை.
  • மரபணு மாற்று பயிர்கள் மூலம் உற்பத்தியான பொருட்களை கொண்டு, விலங்குகளுக்குத்தான் சோதனை நடத்தப்பட்டது.
  • இப்போது, மனிதர்களுக்கு சோதனை நடத்தும் வகையில், வயல்வெளி பரிசோதனைக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
  • இவ்வாறு உற்பத்திசெய்த பொருட்களை சாப்பிட்டால், பெண்களுக்கு குறை பிரசவம் நேர வாய்ப்பு உள்ளது. மலட்டுத் தன்மை ஏற்படவும், கர்ப்பத்திலேயே குழந்தைகள் இறக்கவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
  • எனவே, மனிதனுக்கு கேடு விளைவிக்கும் மரபணு மாற்று பயிர்களை, இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது. இவ்விஷயத்தை, அனைத்து மாநில முதல்வர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம்.
  • அவர்கள் மூலம், எம்.பி.,க்களிடம் பேசி, பார்லிமென்டில், இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளோம். எங்கள் கூட்டமைப்பு, இந்த மரபணு மாற்று பயிர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடுமையாக போராட்டம் நடத்தும்.

அரச்சலூர் செல்வம், ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு:

  • ‘மனிதர்கள், கால்நடைகள், இயற்கைக்கு பாதிப்பு இல்லை என்பதை முழுமையாக ஆய்வு செய்த பிறகே, மரபணு மாற்று பயிர்களுக்கு அனுமதி வழங்கப்படும்’ என, பா.ஜ., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
  • இப்போது, திடீரென மரபணு மாற்று பயிர்களை வயல்வெளி பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு, ஆய்வு நடந்தால், காற்று, நுண்ணுயிரிகள், பூச்சிகள், மகரந்தத் தூள் மூலம், அவை மற்ற பயிர்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்தும்.
  • கடந்த 2006ல், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், மரபணு மாற்று நெல் உற்பத்தி செய்யப்பட்டு, ஜப்பானுக்கு அனுப்பப்பட்டது. அங்கு, ஆறு ஆண்டுகளுக்கு முன் நடந்த வயல்வெளி பரிசோதனை மூலம், இந்த கலப்படம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
  • மரபணு மாற்று பயிர்கள் தொடர்பாக, அறிக்கை தயாரிப்பதற்காக, தலை சிறந்த உயிரியல் விஞ்ஞானிகள் அடங்கிய தொழில்நுட்ப வல்லுனர் குழுவை, சுப்ரீம் கோர்ட் அமைத்தது.
  • ஓராண்டுக்கு முன், இக்குழு தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில், ‘இந்தியாவில், மரபணு மாற்று பயிர்களை சோதனை செய்வதற்கு தேவையான ஆய்வுக் கூடமும், நுணுக்கமாக சோதிக்க, வல்லுனர்களும் இல்லை. எனவே, 10 ஆண்டுகளுக்கு, இந்தியாவில், மரபணு மாற்று பயிர்களை அனுமதிக்கக் கூடாது’ என, தெரிவிக்கப்பட்டது. ‘உலகின் பல நாடுகளில் நடத்தப்பட்ட வயல்வெளி சோதனை மூலம், மற்ற பயிர்களில் கலப்படம் நடந்துஉள்ளது. எனவே, இந்தியாவில் வயல்வெளி சோதனைக்கு அனுமதிக்கக் கூடாது’ என, இறுதி அறிக்கையும், கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பானவழக்கு, தற்போது கோர்ட்டில் உள்ளது.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *