மரபணு மாற்ற பயிர்: கள ஆய்வுக்கு தடை விதிக்க முடியாது – பவார்

மரபணு மாற்ற பயிர் தொடர்பான அனைத்து கள ஆய்வுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில்
தொடரப்பட்ட மனுவின் மீது விசாரித்த நீதிபதிகள், நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்தனர்
இந்த குழு மரபணு மாற்றப்பட்ட எல்லா பயிர்களின் கள ஆய்வுகளுக்கும் 10 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என்று இடைகால
அறிக்கை தந்ததை
நாம் படித்தோம்.

இந்த குழுவை உச்ச நீதி மன்றம் முழு அறிக்கையை மூன்று மாதங்களில் கொடுக்க வேண்டும்  என்று கூறி உள்ளது. இன்னும் 2 மாதங்களில் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வரும்

அதற்கு முன்னே, ஒரு மனு உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு இருக்கும் போது  நம் மாண்புமிகு விவசாய மந்திரி இதை பற்றி
தன் கருத்தை தெரிவித்து உள்ளார்:
மரபணு மாற்ற பயிர் தொடர்பான அனைத்து கள ஆய்வுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையை ஏற்க முடியாது என மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், வாசுதேவ் ஆச்சார்யா தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு (வேளாண்மை) மத்திய அரசிடம் தனது பரிந்துரையை சமர்ப்பித்தது. சிறப்பான கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் உருவாக்கப்படும் வரை, அனைத்து மரபணு மாற்ற பயிர்களுக்கான திறந்தவெளி கள ஆய்வுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சரத் பவார் பி.டி.ஐ.க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையை நாங்கள் ஆதரிக்கவில்லை. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

இத்தகைய சூழ்நிலையில் மரபணு மாற்ற பயிர்கள் மற்றும் அது தொடர்பான ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற வேண்டும். இது தொடர்பான கள ஆய்வுகளுக்கு தடை விதிக்க முடியாது. அதேநேரம், மரபணு மாற்ற பயிர்களை வணிக ரீதியில் பயிரிட அனுமதிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக, சுற்றுச்சூழல், மற்ற பயிர்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களின் உடல்நலம் ஆகியவற்றுக்கு தீங்கு நேராதவாறு பாதுகாப்பை உறுதி செய்த பிறகே வணிக ரீதியில் பயிரிட இத்தகைய பயிர்களை அனுமதிக்க வேண்டும். இது விஷயத்தில் மிகுந்த கவனம் இருக்க வேண்டும் என்றார் பவார்.

இந்த பரிந்துரை மீதான “நடவடிக்கை அறிக்கையை’ வேளாண் அமைச்சகம் தயாரித்துள்ளது. அதை கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் வழங்கி உள்ளது. நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டு கள ஆய்வை தடை செய்தால், மரபணு மாற்ற பயிர்களின் பாதுகாப்பு சோதனை நடைமுறை தடைபடும். இது நாட்டு நலனுக்கு எதிரானதாக அமையும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *