விரைவில் மரபணு மாற்ற கடுகு?

மரபணு மாற்ற பயிர்களுக்கான அனுமதி அளிக்கும் குழு (GEAC) கடந்த வாரத்தில் மிக முக்கியமான முடிவை வெளியிட்டு இந்திய விவசாயிகளுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை பயிர் செய்ய சுற்றுச் சூழல் அமைச்சக அனுமதி கிடைத்துள்ளதை இந்தக் குழு உறுதி செய்துள்ளது. இதனால் மரபணு மாற்ற கடுகு விதை விரைவில் விளைநிலங்களுக்கு வரலாம் என்கிற நிலை உருவாகியுள்ளது. ஆனாலும் இதற்கான இறுதி அனுமதி சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் இறுதி முடிவுக்கு உட்பட்டது என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது.

முக்கியமாக இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அமைச்சரின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மத்திய அரசின் இறுதி முடிவு இந்தியாவின் உணவுத் தொழிலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவதாக இருக்கும். இதற்கு அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில் உணவு பொருள் உற்பத்தியில் வர்த்தக ரீதியாக அனுமதிக்கப்பட்ட முதல் மரபணு மாற்ற பயிராக கடுகு இருக்கும். முக்கியமாக இதைத் தொடர்ந்து வர உள்ள மரபணு மாற்ற உணவு பயிர்களுக்கு தொடக்கமாகவும் இது அமையும்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போதும் மரபணு மாற்ற கத்தரிக்காய்க்கு இந்த கமிட்டி அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக அப்போது சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் இதற்குத் தடை விதித்தார்.

தற்போதும் இந்த கமிட்டிதான் மரபணு மாற்ற கடுகை அனுமதிக்க அமைச்சகத்தின் அனுமதியை பெற்றுள்ளது. அமைச்சர் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.

Courtesy: Hindu

“கடந்த நான்கு வருடங்களாக நீடித்து வந்த பிரச்சினையை முடிவு செய்துள்ளோம் என்று குறிப்பிடுகிறார் ஜிஇஏசி குழுவின் தலைவர் அமிதா பிரசாத். மரபணு மாற்ற பயிர் சாகுபடி சிறந்த முடிவாக இருக்கும், இதர உயிரி பாதுகாப்பு அம்சங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளோம். இந்தியா போன்ற நாடுகளின் உணவுத் தேவைகளை ஈடு செய்ய மரபணு மாற்ற பயிர்கள் அவசியமாக உள்ளன. குறிப்பாக மழை, வெயில் காலங்களுக்கு ஏற்ற வகையில், இதன் விதைகள் பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு தற்போது கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் அமிதா பிரசாத் கூறியுள்ளார்.

சாதாரண ரகங்களைவிட மரபணு மாற்றப்பட்ட கடுகு விதை 30 சதவீதம் அதிக மகசூலை தருவதாகவும் இதனால் இந்தியாவின் உணவு எண்ணெய் இறக்குமதியை குறைக்க முடியும். ஏனென்றால் உணவு எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா ஆண்டுக்கு 120 கோடி டாலர் செலவழிகிறது. இதை குறைக்க முடியும் என்கின்றனர் இந்த பயிரை ஆதரிப்பவர்கள். மேலும் இதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த முடியும். குறைந்த செலவில் அதிக மகசூல் அடையலாம் என்பது இவர்களின் வாதமாக உள்ளது.

ஆனால் மரபணு மாற்றத்தை எதிர்ப்பவர்களின் வாதமோ, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மரபணு மாற்ற உணவுப் பயிர்கள் ஏற்றது அல்ல. இப்போது அனுமதி அளித்தால் அது இதர பயிர்களுக்கும் தொடக்கமாக அமையும் என்று அச்சம் கொள்கின்றனர். இந்த மரபணு கடுகு தொடர்பாக கிடைக்கும் விவரங்கள் அடிப்படையில் பார்க்கும்போது, பாரம்பரிய ரகங்களிலிருந்து இது எந்த வகையிலும் வேறுபட்டதாக இருக்காது என்று இவர்கள் கூறுகின்றனர்.

கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்த மரபணு மாற்ற சோதனையின் மொத்த விவரங்களையும் ஆராய்கிறபோது இது பெரிய மோசடி திட்டம் என்பது தெளிவாகிறது என்று ‘மரபணு மாற்றமில்லா இந்தியா’ கூட்டமைப்பு கூறியுள்ளது. கடந்த ஆண்டே இது தொடர்பாக பிரதமரை சந்தித்து தங்களது கவலைகளை இவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியான புஷ்பா எம் பார்கவா கூறும்போது, இந்தியாவில் மரபணு உணவுப் பயிர்களை அனுமதிப்பது பேரழிவையே தரும் என்று அச்சம் கொள்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்திய விவசாயத்தை பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்துவதற்கு பாதை உருவாக்கிக் கொடுப்பதாகவும் இது இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஏனென்றால் மரபணு மாற்ற விதைகளை ஒவ்வொரு முறையும் விவசாயிகள் விலை கொடுத்து வாங்க வேண்டும். தற்போது உலக அளவில் விதைச் சந்தையை கட்டுப்படுத்தும் நிறுவனங்களாக டூபாண்ட், பேயர் கிராப் சயின்ஸ், மான்சான்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள்தான் உள்ளன. ஏற்கெனவே மரபணு மாற்ற பருத்தி விதைகளால் இந்திய விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாத நிலையில் உள்ளது என்று வந்தனா சிவா உள்ளிட்ட ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய விதைச் சந்தையை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகளோடுதான் அரசு இதற்கு அனுமதிக்கும். இதற்கேற்ப உள்நாட்டு விதை ரகங்களில் மட்டுமே மரபணு மாற்றங்களை மேற் கொள்ள அரசு அனுமதிக்கும் என்பது ஆதரிக்கும் வல்லுநர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மரபணு மாற்ற கத்தரிக்காயை இந்தியாவில் அனுமதிப்பது பாதுகாப்பனதல்ல மற்றும் பொறுப்பற்ற செயல் என்று முந்தைய அரசின் மீது குற்றச் சாட்டாக விவசாயிகள் முன் வைத்து போராடினர். அதே போன்றதொரு சூழல் இப்போது உருவாகியுள்ளது. இப்போது கடுகு விதையில் மேற்கொள்ளும் மாற்றமும் அபாயகரமனதுதான். இது நேரடியாக பெருவரியான விவசாயிகளை பாதிக்கும். இதனையொட்டிய விவசாய தொழிலாளர்கள், நுகர்வோர்களுக்கும் மிகப் பெரிய பாதிப்புகளை உருவாக்கும் என்று விதை உரிமைகள் குறித்த விழிப்புணர்வை மேற்கொள்ளும் ‘சர்சன் சத்யாகிரகா’ என்கிற அமைப்பு கூறியுள்ளது.

இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையான வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் சமீப காலங்களில் இந்தியாவின் பாரம்பரிய விவசாய அறிவை பசுமைப் புரட்சி கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவற்றுக்கு திரும்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

பல்வேறு அமைப்புகளும் நபர்களும் எதிர்க்கும் நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை அமைப்பான சுதேதி ஜக்ரான் மஞ்ச்-சும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அஸ்வனி மஹராஜன், இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் அனில் மாதவ் தேவ் ஆகியோரை சந்திக்க உள்ளதாகக் கூறியுள்ளார். இதை வர்த்தக ரீதியாக பயிரிட அனுமதிக்கக்கூடாது என கோரிக்கை வைக்க உள்ளோம் என்று கூறுகிறார். ஆனால் 2014-ம் ஆண்டு தனது தேர்தல் அறிக்கையில் மரபணு மாற்ற கடுகை அனுமதிப்பது தொடர்பான கருத்தை பாஜக குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக முறையான அறிவியல் பூர்வமாக ஆராயாமல் அனுமதிக்க மாட்டோம் என்று அதில் கூறியுள்ளது.

விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், விவசாயிகளின் வருமானம் உயர வேண்டும் என்று தொடர்ந்து பேசிவரும் பிரதமர், மரபணு மாற்ற கடுகு விஷயத்தில் எடுக்கப்போகும் முடிவு என்ன என்பது இப்போது மிக முக்கியமான கேள்வியாக உள்ளது.

maheswaran.p@thehindutamil.co.in

நன்றி: ஹிந்து

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

மரபணு மாற்றுப்பயிர்: வயல்வெளி சோதனைக்கு நிரந்தரத் தடை?... மரபணு மாற்றுப் பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனைகளை ந...
மரபணு மாற்றப்பட்ட பருத்தியும் வானம் பார்த்த விவசாயமும்... மரபணு மாற்றப்பட்ட பருத்தியை பற்றிய சர்ச்சைகள் பற்ற...
மோடியின் அமரிக்க பயணமும் மரபணு மாற்ற பயிர்களும்... UPA அரசாங்கத்தில் அமெரிக்க அரசும் இந்திய அரசும் Kn...
அவசரம் ஏன்? மரபணு மாற்று பயிர்களுக்கு வயல்வெளி ஆய்வு நடத்துவதி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *