பணம் காய்க்கும் மரங்கள்

பச்சைப் பசேல் என்று மனதை மயக்கும் மரம், செடி, கொடிகளால்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். மனிதர்கள் மூச்சு விடுவதன் மூலம் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறார்கள். மரமோ மனிதனுக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. ஆக்சிஜனைத் தேவையான அளவு பெற்றுக்கொண்டு ஆரோக்கிய வாழ்வு வாழ மனிதனைச் சுற்றி நலம் பயக்கும் மரங்கள் அவசியம்.

அவை பணம் தரும் மரங்களாகவும் இருந்தால் இன்னும் கூடுதல் பயன். ஐம்பது ஆண்டு வளர்ந்த மரங்கள் மட்டுமல்ல பத்து ஆண்டுகள் வளர்ந்த மரங்கள்கூட பணங்காய்ச்சி மரங்கள் எனப் பெயர் பெறுவது உண்டு. பத்துக்குப் பத்து அடியில்கூட மரங்களை வளர்க்க முடியும். சொந்த வீட்டைச் சுற்றி மரங்கள் வளர்க்கும் முறை பற்றித் தோட்டக்கலை வல்லுநர் அந்தோணி ராஜ் தெரிவித்ததாவது:

வீட்டிற்குக் குளிர்ச்சியையும் அழகையும் தரவல்ல மரங்களை நிழல், பயன் மற்றும் பணம் தரும் மரங்கள் என மூன்று வகைகளாகப் பிரித்துக் கொள்ளலாம். இதில் நிழல் தரும் மரங்கள்: வேப்ப மரம், புங்க மரம், சரக் கொன்றை (சரம் போல மஞ்சள் பூக்களைக் கொண்டவை), பூவரசு, செர்க்கோலியா, மந்தாரை, மரமல்லி, நாகலிங்கம் மற்றும் வில்வம்.

பயன் தரும் மரம்: மா, பலா, வாழை, தென்னை, கொய்யா, சப்போட்டா, மாதுளை, எலுமிச்சை, சாத்துக்குடி, சீதாப்பழம், அரை நெல்லி, முழு நெல்லி, பப்பாளி.

பணம் தரும் மரங்கள்: தேக்கு, சந்தனம், சிவப்பு சந்தனம், மகாகனி, இறக்குமதி சவுக்கு, பில்லா ஓக்.

மரங்கள் நடும் முறை

கோடைகாலமே மரங்கள் நடத் தகுந்த காலம். இங்குக் குறிப்பிட்டுள்ள மரக் கன்றுகள் அரசுத் தோட்டக் கலை வாரியத்திலும், தனியார் நர்சரிகளிலும் கிடைக்கும். மரக்கன்றுகள் வாங்கும்போதே குறைந்தபட்சம் நாலடி உயரமாவது இருக்க வேண்டும். இவ்வாறு நாலடிக்கு மேல் வளர்ந்த மரங்கள்தான் பக்குவப்பட்ட மரங்கள்.

இரண்டடிக்கு இரண்டடி சதுரப் பள்ளத்தில் ஆழமும் இரண்டடி இருக்குமாறு தோண்ட வேண்டும். இதில் ஒரு பங்கு மணலை முதலில் கொட்ட வேண்டும். இதற்கு மேலேயே எரு இரண்டு பங்கு, செம்மண் மூன்று பங்கு இடுதல் அவசியம். ஒரு கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கு அவசியம் போட வேண்டும். முன்னதாக வெட்டிய குழியை ஆறு மணி நேரம் அப்படியே காலியாக விட்டுவிட வேண்டும். இதனால் பள்ளத்தில் உள்ள பூமிச் சூடு எல்லாம் வெளியேறி செடி பசுமையாக இருக்க உதவும்.

இவ்வாறு தயாரான குழியில் மரக்கன்றுகளைக் காலை அல்லது மாலை வேளையில்தான் நட வேண்டும். வழக்கம் போல் மரம் நட்டவுடன் தண்ணீர் ஊற்ற வேண்டும். நிழல் தரும் மரங்களுக்குப் பராமரிப்பு செலவு கிடையாது. பழம் தரும் மரங்களுக்குப் பராமரிப்பு கூடும். இவை இரண்டு மூன்று ஆண்டுகளில் பயனளிக்கத் தொடங்கிவிடும். ஆனால் பணம் தரும் மரங்கள் பலனளிக்கக் குறைந்தபட்சம் பத்தாண்டுகள் தேவை. இம்மரங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு உயரமாக வளருகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பயனைப் பணமாகத் தரும். இம்மரங்களின் கிளைகளை வெட்டிவிட்டு நேர்குத்தாக வளருமாறு செய்தால் தண்டு தடித்து தரம் உயர்ந்ததாக அமையும். ஒரு சந்தன மரம் மட்டும் ரூபாய் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை பணமாகவே பயன் அளிக்கும். இதை வெட்டுவதற்குத் தோட்டக்கலை வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். நிழல் மற்றும் பயன் தரும் ஒரு மரம் வளர்க்க 10 அடி நிலமும், பணம் தரும் மரத்திற்குப் பதினைந்து அடி நிலமும் தேவை.

நகரத்தில் வளர்ந்தாலும் மரம் மகத்தான பயனையே தரும்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *