சொட்டு நீர்ப் பாசனத்தில் செழிக்கும் வாழை!

பட்டம் படித்திருந்தாலும் விவசாயத்தைத் தொழிலாகத் தேர்வு செய்து, சுய ஆர்வத்தால் நீர் பாசனத் தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற்றுச் சாதித்திருக்கிறார் புதுச்சேரி விவசாயி முத்து வெங்கடபதி. இதற்காகத் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் விருதையும் அவர் பெற்றிருக்கிறார்.

புதுச்சேரி பண்டசோழநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து வெங்கடபதி (47). பி.எஸ்சி. கணிதப் பட்டதாரி. கடந்த பத்து ஆண்டுகளாக வாழை விவசாயம் செய்து வருகிறார்.

புதிய தொழில்நுட்பம்

“எங்கள் குடும்பம் விவசாயக் குடும்பம். பட்டப் படிப்பு முடித்திருந்தாலும் எனக்கு விவசாயத்துலதான் ஆர்வம். கத்தரி, மிளகாய், அவரை, தர்பூசணி, கிர்ணி, வாழை என்று பல பயிர்களை விளைவிக்கிறேன்.

பத்திரிகைகள்ல விவசாயம் தொடர்பா வரும் செய்திகளைப் பார்த்து, சம்பந்தப்பட்ட இடத்துக்குப் போய்ப் பார்ப்பேன். கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி எனப் பல இடங்களுக்குப் போய் விவசாயிகளோட அனுபவங்களை நேரடியாகக் கற்று, புதிய தொழில்நுட்பத்தை தைரியமாகத் தேர்வு செய்தேன்” என்கிறார் முத்து வெங்கடபதி.

புதுச்சேரி அரசின் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி வாழை சாகுபடியில் சொட்டு நீர் பாசனத் தொழில்நுட்பத்தை கடந்த 2008-ல் புகுத்தினார். சொட்டு நீர் பாசனத்தில் நீரைச் சிறப்பாக நிர்வகிக்க முடிந்தது.

சொட்டு நீர் பாசனத்துக்குத் தேவையான சாதனங்கள் ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வீதம், 3 ஏக்கருக்கு ரூ. 1.20 லட்சம் செலவாகியிருக்கிறது. சொட்டு நீர்ப் பாசன வசதி செய்தவுடன், அதற்கான நிதியுதவி கேட்டு அரசிடம் விண்ணப்பித்தார். இதையடுத்துக் காமராஜர் வேளாண் அறிவியல் மையத்தில் இருந்து ஆய்வு செய்து, நூறு சதவீத மானியமாக முழு தொகையும் தரப்பட்டது. சொட்டு நீர் பாசனத்துக்குத் தேவையான சாதனங்களைப் பொருத்த ரூ. 5,000 மட்டும் செலவானது. சொட்டு நீர் பாசனத்தில் குழாய் முனைகளில் மண் அடைக்காமலும் தூய்மையாகவும் பராமரித்தால் போதும். இம்முறை பொருத்தப்பட்டு ஆறாண்டுகள் ஆகின்றன. எந்தப் பெரிய பிரச்சினையும் இல்லை, தண்ணீர் செலவும் குறைவு என்கிறார்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

அத்துடன் உர மேலாண்மையும் செய்கிறார். நீரில் கரையும் உரங்களை மட்டுமே பயன்படுத்தத் தொடங்கினார். நுண்ணூட்ட சத்து பயன்பாடு, ஸ்பிரே பயன்பாடு என ஒவ்வொரு புதிய முறையையும் ஆர்வமாகச் செயல்படுத்தினார்.

சொட்டு நீர் பாசனத்தால் வாழை குலை முன்னதாக வரத் தொடங்கியிருக்கிறது. வழக்கமாக 210 நாட்களில்தான் குலை தள்ளும். ஆனால், 190 நாட்களில் வரத் தொடங்கியது. வாழைத் தாரின் நீளமும் 5 அடிக்கு மேல் இருந்தது.

தொடர் முயற்சி, உழைப்பு, ஆர்வத்தால் திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் சிறந்த வாழை விவசாயிக்கான விருது இந்த ஆண்டு அவருக்குக் கிடைத்துள்ளது.

அமோக லாபம்

“புயல், மழையால் பாதிப்பு ஏற்பட்டது. இப்படி வாழையால் பாதிப்பு ஏற்பட்டாலும்கூட அதில் சாதிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதற்குக் காய்கறிகளும் பழங்களும் கைகொடுத்துவிடும்.

முதலில் மொந்தன் பயிரிட்டேன். இப்போ முதல்முறையா கற்பூரவல்லி போட்டிருக்கேன். தார்கள் நீளமாகவும் பழங்கள் ருசியாகவும் இருக்கின்றன. நவீனத் தொழில்நுட்பத்தால் கற்பூரவல்லியில் ஒவ்வொரு தாரிலும் 10 முதல் 14 சீப்புகள்வரை கிடைத்தன. நல்ல லாபமும் கிடைத்தது.

குறைந்த நீர், குறைந்த ஆள், குறைந்த உரம் ஆகியவற்றின் மூலம் அதிக உற்பத்தியும், வருவாயும் பெற முடிகிறது. ஒரு ஏக்கரில் கற்பூரவல்லி 32 டன் மகசூல் தந்தது. ஏக்கருக்கு ரூ. 2.70 லட்சம் கிடைத்தது. செலவு ரூ. 65 ஆயிரம் போக, லாபம் ரூ. 2.05 லட்சம்” என்கிறார் முத்து வெங்கடபதி.

Courtesy: Hindu
Courtesy: Hindu

கடலோரப் பகுதியில் இவற்றைச் செய்துள்ளதால், கோவையிலிருந்து வேளாண் பல்கலைக்கழகத்தினர் நேரடியாக வந்து பார்த்துள்ளனர். திருச்சி வாழை ஆராய்ச்சி மையம் சொன்னபடி வாழையில் அடர் நடவு முறையையும் பயன்படுத்த இருக்கிறார். பல புதிய எண்ணங்கள் உள்ளன. எதிர்காலத்தில் செயல்படுத்துவேன் என்கிறார்.

முத்து வெங்கடபதி, தொடர்புக்கு: 09786852535

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *