வாழையில் நூற்புழு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள்

நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்:

தற்பொழுது வாழை சாகுபடியில் இரசாயனம் அல்லாத மேலாண்மை முறைகள் பெரும்பாலான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏனென்றால், இரசாயன முறைகள் அதிக விலையுடையவையாகவும் மண்ணில் தங்கி தீங்கு ஏற்படுத்துபவையாகவும் உள்ளன. நோய் எதிர்ப்பு திறன், உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் ஆகியவை நூற்புழுக்கட்டுப்பாட்டில் அதிக பலனைத் தருவதில்லை. நோய் தாக்கப்பட்ட வயல்களிலிருந்து விதைக்கன்றுகளை எடுத்து நடும்பொழுது பாதிப்பிற்கு உள்ளாகின்றன. எனவே, நூற்புழு தாக்காத விதைக்கன்றுகளை பயன்படுத்துவது நூற்புழு மேலாண்மையில் ஒரு சிறந்த முறையாகும். உழவியல் மற்றும் இரசாயன முறைகளும் நூற்புழுக்களால் ஏற்படும் இழப்பைக் குறைக்க உதவுகின்றன.

உழவியல் முறைகள்:

  • வயலை மூன்று மாதங்கள் வரை தரிசாக வைத்தும், கோடை உழவு செய்தும், நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
  • வாழை விதைக்கன்றுகளை வேர் நீக்கி, மேல்தோல் சீவி, 55°செல்சியஸ் வெந்நீரில் அரை மணி நேரம் மூழ்க வைத்து நடுவதால் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
  • வேர் நீக்கிய விதைக்கன்றுகளை, வேப்பம் கரைசலான நிம்பிசிடின் அல்லது நீவின் (15 மில்லி/ லிட்டர்) தண்ணீரில் கலந்து அரை மணி நேரம் மூழ்க வைத்து நடலாம். பின்பு 3 மற்றும் 6 மாதங்களில் மரத்திற்கு, 250 கிராம் வேப்பம்புண்ணாக்கு மற்றும் எதிர் நுண் உயிரிகளான பேசிலோமைசிஸ் லிலாசின்ஸ் 30 கிராம் வீதம் இடுவதால் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
  • இரசாயன முறைகளைப் பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம். விதைக்கன்றுகளின் வேரை நீக்கி, கிழங்கின் மேற்பரப்பை சீவி, பின்பு 30 கிராம் கார்போஃப்யூரான் மருந்தைத்தூவி நிழலில் உலர்த்தி நடவு செய்யலாம்.
  • திசு வளர்ப்பு வாழையில் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த திசு வாழை நடவு செய்யும் முன்பு, நடவுக்குழிகளில் 20 கிராம் கார்போஃப்யூரான்  என்ற குருணை மருந்தையோ அல்லது 10 கிராம் கார்டாப் ஹைட்ரோகுளோரைடையோ இட்டு நட வேண்டும். கன்று நட்டு 3 மற்றும் 6வது மாதங்களில் 40 கிராம் கார்போஃப்யூரான்  குருணை மருந்தையோ அல்லது 500 கிராம் வேப்பம்புண்ணாக்கையோ, வாழை மரத்தை சுற்றி வேர் பாகத்தில் இட்டு பிறகு மண் அணைக்க வேண்டும். இப்படி செய்தோமானால், திசு வளர்ப்பு வாழையில் நூற்புழுக்கள் தாக்குதலும் குறைந்து வாழைத்தார்கள் குறித்த காலத்தில் ஈன்று அதிகமான மகசூலைப் பெறலாம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
  • மூன்று மற்றும் 6வது மாதங்களில், கார்போஃப்யூரான் 40 கிராம் அல்லது கால்டான்(10 கிராம்) அல்லது கார்டாப்(10 கிராம்)
  • உளுந்து, நெல், சணப்பை, கரும்பு போன்றவற்றுடன் பயிர் சுழற்சி செய்வதன் மூலம் நூற்புழுக்களை வெகுவாக கட்டுப்படுத்தலாம்.
  • சாமந்திப்பூ (படம்-5), கொத்தமல்லி, தட்டைபயிறு, பச்சைபயறு, சேனை, சேம்பு போன்ற பயிர்களை ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் நூற்புழுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து அதிக மகசூலை அதிகரிக்கலாம்.
  • நூற்புழுவிற்கு எதிர்ப்பு சக்தி கொண்ட கற்பூரவள்ளி, மொந்தன், நாட்டுப்பூவன், குன்னன், பேய் குன்னன் மற்றும் பிடிமொந்தன் ஆகிய வாழைகளை சாகுபடி செய்யலாம்.
 

திசு வளர்ப்பு வாழை

ஒருங்கிணைந்த நூற்புழு மேலாண்மை

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு மேலாண்மை முறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுவதே பொருளாதார ரீதியாக அதிக மகசூலை பெற்று தருகிற எளிய செயல்பாட்டு முறையாகும்.எனவே, இந்த முறைப்படி, வாழை விதைக்கன்றுகளின் வேரை நீக்கி, கிழங்கின் மேல்தோலை நீக்கி, பின்பு நிம்பிசிடின் அல்லது நீவின் என்ற வேப்பம் கரைசலில்(15 மில்லி/ லிட்டர் தண்ணீர்) ½ மணி நேரம் மூழ்க வைத்து, பின்பு நிழலில் உலர்த்தி, வாழை கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

அதன் பிறகு, 3 மற்றும் 6வது மாதங்களில், கார்போ பியூரான் குருணை மருந்து(40 கிராம்) அல்லது கால்டான்(10 கிராம்) இவற்றில் ஏதாவது ஒன்றை மரத்தைச்சுற்றி இட வேண்டும் அல்லது வேப்பம்புண்ணாக்குடன்(250 கிராம்) எதிர் நுண்ணுயிரிகளான பெசிலோமைசிஸ் லிலாசினஸ் மற்றும் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் ஆகியவற்றை 30 கிராம் வீதம் இடுவதன் மூலம் மண்ணிலும் வேரிலும் உள்ள வேர் அழுகல் மற்றும் வேர் முச்சு நூற்புழுக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைவதுடன் வாழைத்தார்களின் உற்பத்தியும் அதிகரிக்கிறது.

நன்றி: தமிழ் நாடு வேளாண் பலகலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *