வீட்டுத்தோட்டத்தில் வளர்க்க வாழை டிப்ஸ்!

முக்கனிகளுள் ஒன்றும், முதன்மையான கனிகளுள் ஒன்றும் என மனிதனின் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த கனி வாழை. தென்கிழக்கு ஆசியாவில் வாழை முதன் முதலாகப் பயிர் செய்யப்பட்டது. மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூ கினியா ஆகிய நாடுகளில் பாரம்பர்ய ரக காட்டு வாழைகளை இப்போதும் காணமுடியும். நியூ கினியாவின் குக் சகதிப் பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சி முடிவுப்படி அங்கே வாழை கி.மு 5000 முதலோ அல்லது கி.மு 8000 ஆண்டுகளுக்கு முதலோ பயிரிடப்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த பழைமையானதும் மருத்துவ குணம் அதிகமாகக் கொண்டதுமான வாழையை தமிழ்நாட்டில் விவசாயிகள் அதிகமான அளவில் பயிரிட்டு வருகிறார்கள்.

பாரம்பர்ய வாழைகள் 10 அடிக்கும் மேல் உயரம் கொண்டதாக இருந்துள்ளன. இன்றளவில் அங்கங்கே 10 அடி உயரத்துக்கும் அதிகமான பாரம்பர்ய வாழை மரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் 10 முதல் 12 அடி வளரும் ஈரோடு வாழையை காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகிலுள்ள முன்னோடி விவசாயி சுப்பு தனது வீட்டில் வளர்த்துவருகிறார்.

வாழை

ஈரோடு வாழையைப் பற்றி இயற்கை விவசாயி சுப்புவிடம் பேசினோம்.

“இந்த வாழையை ஈரோட்டிலிருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கி வந்தேன். அப்போது எனக்கு இவ்வளவு உயரம் வளரும் என எனக்குத் தெரியாது. இந்த வாழையின் ரகம் சரியாக தெரியவில்லை. இதை எல்லோரும் ஈரோடு வாழை என்று சொல்கிறார்கள். முன்பெல்லாம் அவரவர்களின் வீடுகளில் உள்ளேயே சிறிய தோட்டம் வளர்ப்பது வழக்கமாக இருந்தது.

வீடுகளில் குப்பைகளும், கழிவுநீரும் தேங்காமல் அங்கு வளரும் செடிகள் பார்த்துக்கொண்டது. அதன் பின்னர் வளர்ச்சி என்ற பெயரில் விவசாயம் மறையத் துவங்கியதும் வீட்டுத்தோட்டம் அழிவுக்கு முக்கியக் காரணம். இப்போதுதான் இயற்கையை நோக்கித் திரும்பிய மக்கள் வீட்டுத் தோட்டத்தை வளர்க்க ஆரம்பித்துள்ளனர். இவ்வாழைக்குக் கொடுக்கப்படும் பராமரிப்புகள் குறைவாகவே இருக்கின்றன. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த வாழைக்குச் செல்கிறது.

நான் தயாரிக்கும் மண்புழு உரத்தில் மீதமாகும் கழிவுகளை கொட்டுவேன். அதேபோல நான் தயாரிக்கும் பஞ்சகவ்யத்தில் மீதமாகும் கழிவுகளை தண்ணீருடன் கலந்து கொடுப்பேன். இதனாலேயே இவ்வாழை எப்போதுமே செழிப்பாக இருக்கிறது. இப்போது தார்விட்டிருக்கும் இந்த வாழையில் முழுமையாக 8 சீப்புகள் இருக்கும். ஒரு சீப்புக்கு 10 முதல் 13 காய்கள் வரைக்கும் இருக்கிறது.

தோராயமாக 80 முதல் 100 வாழைக்காய்கள் வரை இருக்கின்றன. ஒரு மரம் பழம் கொடுத்துவிட்டு சாயும்போது அதன் பக்கக் கன்று காய்ப்புக்கு வந்துவிடும். இதனால் எப்போதுமே பழம் பெறும் வகையில் பயன் பெற்று வருகிறேன். அந்த மரத்தில் பெறும் பழங்கள் சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கின்றன. இன்றளவில் இதுபோல பாரம்பர்ய வாழை ரகங்கள் பரவலாகவே இருக்கிறது.

அதிலும் பழங்களின் நடுவே காணப்படும் விதைகளுடைய காட்டு வாழைப்பழங்கள் கிட்டத்தட்ட அழிந்துவிட்டன” என்றார்.

ஈரோடு வாழை

காய், பழம், தண்டு, பூ, மட்டை, இலை எனப் பல வடிவங்களில் ஆரோக்கியம் தரும் பாரம்பர்ய ரக வாழைகள் அழிவின் விளிம்பில் உள்ளன. இயற்கை இடுபொருள்களை சரியான முறையில் பயன்படுத்தினால் பாரம்பர்ய வாழை நல்ல மகசூலைக் கொடுக்கும். இதுபோல ஆங்காங்கே உள்ள பாரம்பர்ய ரக வாழைகளைக் காக்க விவசாயிகள் முன்வர வேண்டும்

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *