வீழ்ச்சிக்கு வழி – தினமணி தலையங்கம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் நல்ல எண்ணத்தோடு ஆரம்பித்தாலும் அதனில் உள்ள கோளாறுகளால் விவசாயத்தை பெரிதும் பாதித்து உள்ளது.
விவசாய தொழில் செய்ய ஆட்கள் பற்றாக்குறை தலை விரித்து ஆடுகிறது. இதை பற்றிய தினமணி தலையங்கம்

வீழ்ச்சிக்கு வழி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தினால் வேளாண் பணிகள் செய்வதற்கு விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. ஆகவே, இத்திட்டத்தின் நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்று கோரி, பொதுநல வழக்குத் தொடுத்த பெரியசாமி (76) என்பவரின் மனுவை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு ஏற்காமல் தள்ளுபடி செய்துவிட்டது.  இத்திட்ட நடைமுறைகளில் முறைகேடு இருக்குமானால் மனுதாரர் இது குறித்துத் தொடர்புடைய அதிகாரிகளிடம் முறையிடலாம். மாறாக, மத்திய அரசின் திட்டத்தின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  சில நேரங்களில் ஒரு பிரச்னையை எவ்வாறு எடுத்துச் சொல்வது என்று தெரியாத காரணத்தாலேயே காரியம் கெட்டுப்போவது உண்டு. அந்த ரகம்தான் இதுவும். பெரியசாமி இந்த மனுவில் விவசாயத் தொழிலாளர் தட்டுப்பாட்டை மட்டுமே முன்னிலைப்படுத்தியிருக்கலாம். இத்திட்டத்தில் முறைகேடுகள் குறித்து அவர் அதிகம் பேசியதால், இந்த முறைகேடுகளை அதிகாரிகளிடம் தெரிவியுங்கள் என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.  பெரியசாமி குறிப்பிட்டிருப்பதைப்போல, கிராமப்புறங்களில் பண்ணைத் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருக்கிறது. வழக்கமாகவே கிராமங்களில் வேலையாள் தட்டுப்பாடு பிரச்னை கடந்த இருபது ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றது. லாபகரமாக இல்லாததால் விளைநிலங்களின் பரப்பளவு குறைந்து வருவதும், பாசன வசதி இல்லாமல் விவசாயம் தடைபடுவதும் அதிகரித்துவிட்ட நிலையில் கிராம மக்கள் நகர்ப்புறங்களில் கட்டட வேலைகளுக்குச் செல்வது அதிகரித்துக்கொண்டே வருகிறது.  கேரளம் மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள தமிழக கிராமங்களில் இந்தப் பிரச்னை மேலதிகமாக உள்ளது. இந்நிலையில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமும் சேர்ந்து கொண்டதில் விவசாயத் தொழிலாளர் தட்டுப்பாடு மிகமிக மோசமாகியிருப்பது உண்மை.  இதற்கு அடிப்படைக் காரணம், விவசாயப் பணிகள் காத்துக்கொண்டிருக்கும்போது அரசு அலுவலர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதுதான். இந்தத் திட்டத்தில் பணியாற்றும் யாருக்கும் எந்தவித வேலைப்பளு அல்லது குறிப்பிட்ட பணியை முடிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அலுவலர்களுக்கும் முடித்த பணிகளுக்கு பொறுப்பேற்பு கட்டாயமில்லை. இத்திட்டப் பணிகளுக்குத் தணிக்கை முறை வரும் என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தாலும், இதுநாள்வரை தணிக்கை இல்லை என்பதே இத்திட்டத்தில் முறைகேடுகள் நடக்கக் காரணமாக இருக்கிறது.  குறைந்த வேலை, போதுமான ஊதியம் என்கிறபோது, விவசாயத் தொழிலாளியாக ஒரு நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டுமா என்று சோம்பல்கொண்டு விடுகின்றனர் கிராம மக்கள். கிராமங்களில் காணப்படும் உண்மை நிலவரம் இதுதான்.  இத்திட்டதை மத்திய அரசு தொடங்கியதன் நோக்கம், விவசாயப் பணிகள் இல்லாத நாள்களில் இந்தக் கிராம மக்கள் கையில் பணம் இல்லாமல் வறுமையில் வாடக்கூடாது என்பதுதான். விவசாயப் பணிகள் இல்லாத நாள்களில் மட்டுமே இந்த 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் அமைய வேண்டும். அதுதான் அரசின் கொள்கையும், நோக்கமும்!  ஆனால், அரசு அதிகாரிகளின் மெத்தனமும், கிராம மக்கள் எளிய உழைப்பில் ஊதியம் காணலாம் என்கிற உந்துதலும், உள்ளூர் அரசியலும் சேர்ந்து இத்திட்டத்தைப் பாழ்படுத்திக்கொண்டிருக்கின்றன. விளைவு, நாளுக்கு நாள் விவசாயத் தொழிலாளர் கிடைப்பது அரிதாகிக்கொண்டே போகின்றது.  கரும்பு வெட்ட, நெல் அறுவடை செய்ய, பருத்தி எடுக்க என விவசாய வேலைகள் இருக்கும் நாள்களில், ஏன் இத்திட்டத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் பெரியசாமியின் நியாயமான கேள்வி. நாங்கள் அதிகக் கூலி தரத் தயாராக இருக்கும்போது வேலை செய்யாமல் கூலி தருகிறோம் என்று அவர்களைத் திசைதிருப்புவது என்ன நியாயம் என்று கேட்கிறார் அவர்.  மத்திய அரசு நிகழ் நிதிநிலை அறிக்கையில், ரூ. 38,000 கோடியை இத்திட்டத்துக்காக ஒதுக்கியுள்ளது. இதில் தமிழக அரசுக்குக் கிடைத்திருக்கும் ஒதுக்கீடு ரூ. 5,000 கோடி. இத்திட்டத்தில் வேலை செய்வோருக்கு சம்பளம் பாதிதான் தரப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தபின்னர், தற்போது வங்கிகள் மூலமாக இந்த நிதியை வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் பணியாற்றவுள்ள, முன்வந்துள்ள அனைவருக்கும் வங்கிக் கணக்குகள் தொடங்கும் பணியை தமிழக அரசு முடுக்கியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இரு நாள்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டதைப் போன்று, இதுவரை தமிழகத்தில் 94,12,948 பேருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுவிட்டன. இது பதிவு செய்துள்ள விவசாயத் தொழிலாளர்களில் 82 விழுக்காடு.  தமிழ்நாட்டில் உள்ள 4,446 பஞ்சாயத்துகளிலும் இத்திட்டத்தின் கீழ் வரும் அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, இவர்கள் அனைவருக்கும் 100 நாள் வேலை வாய்ப்பு வழங்குவதை யாரும் எதிர்க்கவில்லை. நெல்அறுவடை, கரும்புவெட்டு, பருத்தி எடுத்தல், கடலை பிடுங்குதல், ஏரோட்டம், களைப்பறிப்பு, உரம் தெளிப்பு என விவசாயப் பணிகள் காத்துக்கிடக்கும்போது, இதற்கு வரக்கூடிய தொழிலாளர்களை ஏன் திசை திருப்புகிறீர்கள் என்பதுதான், பெரியசாமிக்கு மட்டுமல்ல, வேளாண்மை செய்யும் அனைவருக்கும் உள்ள நியாயமான கேள்வி.  நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்றாலும்கூட, தமிழக அரசு தன்னிச்சையாக இது பற்றிய ஆய்வை நடத்த முன்வர வேண்டும். இத்திட்டம் மேற்கொள்ளப்படும்போது, விவசாயத் தொழிலாளர் தட்டுப்பாட்டால் வேளாண் பணிகள் பாதிக்கப்படுகின்றதா, அதற்கு தமிழ்நாட்டில் எத்தகைய நடைமுறை சரியான தீர்வாக இருக்கும் என்பதை ஒரு குழு மூலம் ஆய்வு நடத்திப் பார்ப்பதில் தவறில்லை.

விவசாயிகள் வெறுத்துப்போய் விவசாயத்தைக் கைவிடுவதும், விளைநிலங்கள் வீடுகளாக மாறுவதும் வளர்ச்சியின் அறிகுறி அல்ல, வீழ்ச்சிக்கு வழி!

நன்றி: தினமணி

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

தமிழ் நாட்டில் அரிசி புதிய மகசூல் சாதனை... ஒரு பக்கம் விவசாயிகளின் பிரச்சினைகளான மின் தட்டுப்...
திருச்சியில் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு... திருச்சியில் இரண்டு நாட்கள் நடக்கவுள்ள வேளாண் கண்க...
பலன் தரும் பசுமைக் கூடாரம் வேளாண்மைத் தொழில்நுட்பத்தில் 200 ஆண்டுகள் பழ...
பாரம்பரிய விவசாயத்தை காப்பற்ற போராட்டம்... திருத்துறைப்பூண்டி: ""இந்திய பாரம்பரிய விவசாயத்தை ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *