குறு விவசாயிகளுக்கு ஏற்ற வெள்ளரி சாகுபடி

  • கோடைப் பட்டத்தில் நல்ல வருவாயினை தருவது வெள்ளரி சாகுபடி ஆகும்.
  • இந்தப் பயிர் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மிகவும் ஏற்றது.
  • இந்த விவசாயிகளுக்கு அதிக நிலப்பரப்பு இருக்காது. இவர்கள் வெள்ளரி சாகுபடியை அரை ஏக்கர் அல்லது ஒரு ஏக்கர் தான் செய்ய இயலும்.
  • கிணற்றுப் பாசனம் இருந்தால் டீசல் இன்ஜின் கொண்டு பாசனம் செய்யும் வசதி தான் இருக்கும்.
  • கிணற்றில் தண்ணீர் இல்லை என்றால் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயப் பணிகளை தொடரலாம்.
  • வெள்ளரி சாகுபடி காலம் 90 நாட்கள் ஆகும்.
  • பிஞ்சினை அப்படியே விட்டால் அது மிகப்பெரிய காயாக மாறி அதிக விதைகளைக் கொண்டு இருக்கும். இதனை விற்று லாபம் எடுக்க முடியாது.
  • நுகர்வோர்கள் இக்கட்டத்திலுள்ள காய்களை விரும்புவதில்லை.இந்தக் காய்கள் சுவைப்பதற்கு ஏற்று வராது.
  • ஆனால் இதில் அதிசயம் என்னவென்றால் வெள்ளரி காய்த்து பிஞ்சாக இருக்கும்போது அது சுவைமிக்கதாக இருக்கும்.
  • பிஞ்சு வெள்ளரி மூன்று தரம் கொண்டதாக இருக்கும்.
  • மிகச் சிறிய பிஞ்சுகள் நீளம் ஆறு அங்குலத்திற்குள் இருக்கும். இவைகள் மிகச் சுவை கொண்டதாக இருக்கும். ஒருவிதை கூட காயில் இருக்காது.
  • இத்தகைய காய்களை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கிலோ ரூ.8 கொடுத்து வாங்கி பின்னால் தாங்கள் காய்களை கிலோ ரூ.25 வரை விற்கின்றனர்.
  • இரண்டாம் தரக்காய்கள் இவைகள் 9 அங்குலம் நீளம் வரை இருக்கும். இதன் விலை ரூ.15 வரை இருக்கும். பெரிய பிஞ்சுகள் இவைகளின் நீளம் 10 – 11 அங்குலம் இருக்கும். இதன் விலை கிலோவிற்கு ரூபாய் 10 வரை இருக்கும்.
  • முதல் இரண்டு தரம் கொண்ட காய்கள் சிரமம் இன்றி விற்பனையாகி விடும். மூன்றாம் தரக்காயில் விற்பனை சில சமயம் பிரச்னையாக இருப்பதுண்டு.
  • பிஞ்சு வெள்ளரி தமிழ்நாட்டில் சிறப்பாக சாகுபடி செய்யப்படுகின்றது. சொட்டுநீர் பாசனத்திலும் சாகுபடி செய்யப்படுகின்றது.
  • மார்க்கெட்டில் இருந்து வியாபாரிகள் வண்டியில் கிராமத்திலுள்ள விவசாயிகள் நிலங்களுக்கு நேரில் சென்று பிஞ்சு வெள்ளரியை விலைக்கு வாங்குகின்றனர். விவசாயிகளுக்கும் மார்க்கெட்டிற்கு எடுத்துச் சென்று விற்கின்றனர்.

சாகுபடி விவரங்கள் :

  • விவசாயிகள் தனது டீசல் ஆயில் இன்ஜின் செட்டினை உபயோகித்து பாசனம் செய்து வெள்ளரி சாகுபடி செய்கின்றனர்.
  • விவசாயி ஒரு ஏக்கரில் வெள்ளரி சாகுபடி செய்ய தேவையான விதையினை தயார் செய்து கொள்கிறார்.
  • ஏக்கருக்கு 150 கிராம் விதையினை உபயோகப்படுத்த வேண்டும்.
  • விவசாயி தனது நிலத்தை டிராக்டர் கொண்டு ஒரு உழவு இட்டு அதனை வயல் பூராவும் மண்ணோடு சீராக கலந்து உழுது கொள்ள வேண்டும்.
  • பிறகு ஏக்கரில் 600 குழிகள் போட வேண்டும்.
  • நிலத்திற்கு அடியுரமாக 1-1/2 மூட்டை பேக்ட் அம்மோபாஸ் உரத்தைப் போட்டு மண்ணோடு கலக்க வேண்டும்.
  • நிலத்திலுள்ள குழிகளில் இயற்கை உரமும், ரசாயன உரமும் உள்ளது. உடனே குழிக்கு மூன்று விதைகள் விதைத்து தண்ணீர் விடுகின்றார்.
  • இவ்வாறு 15 நாட்கள் செய்து விட்டு பிறகு நிலத்தில் கால்வாய் போட்டு பாசனம் செய்ய வேண்டும்.
  • குழிகள் அனைத்திற்கும் ஏக்கருக்கு 1-1/2 மூட்டை பாரமாபாஸ் 20:20 உரம் இட வேண்டும்.
  • குழிகளில் களைச்செடிகளை குச்சிகளை உபயோகித்து அகற்ற வேண்டும்.
  • செடிகள் நன்கு பூக்கள் பிடித்து காய்கள் காய்க்கத் தொடங்கும்.
  • சாகுபடி சமயம் விவசாயி தனது பயிரினை பூச்சிகள், பூஞ்சாளங்கள் தாக்காமல் இருக்க தக்க பயிர் பாதுகாப்பு முறைகளை அனுசரிக்க வேண்டும்.
  • வெள்ளரி சாகுபடியில் பயிரில் விதைத்த 45-வது நாளிலிருந்து ஒரு நாள் விட்டு ஒருநாள் அறுவடையில் வருமானம் கிடைக்கின்றது.

எஸ்.எஸ்.நாகராஜன்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *