25 சென்ட் நிலத்தில் 60 நாளில் 8 டன் வெள்ளரி!

சுற்றிலும் வீடுகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த மதுரை வீரபாஞ்சான் பகுதியில் 25 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தில் அழகான பங்களா கட்டலாம் அல்லது குடோன் நடத்த வாடகைக்கு விடலாம். வேறென்ன செய்ய முடியும்? என கேட்கலாம்.

சிறிய அந்த இடத்தில் “பசுமை குடில்’ அமைத்து 60 நாட்களுக்கு ஒருமுறை 8 டன் வெள்ளரியை அள்ளுகிறார் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி லோகேஷ்,27, என்றால் நம்ப முடிகிறதா?

  • இஸ்ரேல் தொழில் நுட்ப உதவியுடன் வெள்ளரிக்காய் உற்பத்தி செய்கிறார். தோட்டக்கலைத்துறை 50 சதவீதம் மானியம் வழங்கியது. இஸ்ரேல் வெள்ளரி விதை ஒன்றின் விலை ரூ.7.
  • தனது 25 சென்ட் நிலத்தில் 1000 சதுர மீட்டர் அளவில் “பசுமை குடில்’ அமைத்தார். இதற்குள் 28 டிகிரி வெப்பம் நிலவ வேண்டும். தட்பவெப்ப நிலை வெப்பமானி மூலம் அறியப் படுகிறது. வெப்பம் கூடினால் தானியங்கி மூலம் தண்ணீர் தெளித்து கட்டுப்படுத்துகின்றனர்.
  • பசுமை குடிலில் 4,500 விதைப்பைகளில் தலா ஒரு விதை மூலம் வெள்ளரி செடி வளர்க்கப்படுகிறது. விதை பையில் மண்ணிற்கு பதில் தென்னை நார் மட்டுமே இருக்கும்.
  • பசுமை குடிலுக்குள் பூச்சிகள் நுழைய இயலாது.
  • சொட்டுநீர் பாசனம் மூலம் அனைத்து விதைப்பைகளுக்கும் சமச்சீராக தண்ணீர் பாய்ச்சப்படும்.
  • தேவைக்கு ஏற்ப “இயற்கை சத்து டானிக்’ தெளிக்கப்படுகிறது.
  • விதை விதைத்து 46வது நாளில் இருந்து தொடர்ந்து 60 நாட்களுக்கு பலன் கிடைக்கிறது.
  • நாள் ஒன்றுக்கு சராசரியாக 250 கிலோ வெள்ளரி கிடைக்கிறது.
  • ஏஜென்டுகள் மூலம் மொத்தமாக கொள்முதல் செய்து அரபு நாடுகளுக்கு கிலோ ரூ.250 விலையில் பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

 

 

 

 

 

 

 

 

இன்ஜினியரிங் விவசாயி லோகேஷ் கூறியதாவது:

  • “ஏ.எஸ். பார்ம்’ என்ற பெயரில் “ஹைடெக் ஹார்ட்டிகல்சுரல்’ மூலம் வெள்ளரி உற்பத்தி செய்கிறேன். மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜெயசிங்ஞானதுரை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தேன்மொழி ஆகியோரின் வழிகாட்டுதல் தொடர்கிறது.
  • இரண்டரை ஏக்கர் நிலத்தில் விளையும் வெள்ளரியை வெறும் 25 சென்ட் நிலத்தில் விதைத்து லாபம் ஈட்டி வருகிறேன்.
  • பிஞ்சு இருக்காது; பழமும் வராது. வெள்ளரி ஒன்று தலா 110 கிராம் எடையில் இருக்கும். செடி ஒன்றுக்கு 60 நாட்களுக்கு 300 மில்லி தண்ணீர் மட்டும் போதும்.
  • காயின் தண்ணீர் சத்து குறித்து தினமும் ரசாயன முறையில் பரிசோதனை செய்து அதற்கு ஏற்ப சத்துக்கள் செலுத்தப்படுகிறது. இதனால் சுவை, மணம், சத்து மாறாது. கடந்த முறை 7 டன் வெள்ளரி எடுத்தேன். இந்த முறை 8 டன் கிடைத்தது. பசுமை குடிலை இத்தாலி, இஸ்ரேல் விஞ்ஞானிகள் பார்வையிட்டுள்ளனர்.
  • அடுத்ததாக வெற்றிலை, இஞ்சி, மல்லியை உற்பத்தி செய்யவுள்ளேன். விதையை இங்கேயே உற்பத்தி செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றார். 09362444441ல் தொடர்பு கொள்ளலாம்.

கா.சுப்பிரமணியன், மதுரை.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “25 சென்ட் நிலத்தில் 60 நாளில் 8 டன் வெள்ளரி!

  1. Nandha says:

    பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?

    மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.

    ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் – இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது” என்கிறார் ஆலன்.

    புத்திசாலி நாடுகள்!

    நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.

    இது இந்திய நிலவரம்!

    முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.

    மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்

    வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.

    சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

    அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.

    ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.

    பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.

    தண்ணீருக்கு எங்கு கணக்கு?

    ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.

    இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.

    மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *