காட்டுப் பன்றிகளிடமிருந்து விளை பயிர்களைக் காக்கும் வழிமுறைகள்

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காட்டுப் பன்றிகளினால் விளை நிலங்கள் அதிக அளவு சேதமடைகின்றன. இதனால் விவசாயிகள் இழப்பைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நிலங்களில் காட்டுப் பன்றிகளினால் தாக்கம் அதிக அளவு உள்ளது.
காட்டுப் பன்றிகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தி பயிர்களைக் காக்க, பாலக்கோடு
வேளாண் உதவி இயக்குநர் (பொ) மு.இளங்கோவன், வேளாண் அலுவலர் வி.குணசேகரன் ஆகியோர் கூறும் வழிமுறைகள்:

  • காட்டுப் பன்றிகள் வேர்கள், கிழங்குகள், பூச்சிகள், பாம்புகள் மற்றும் சிறு விலங்குகள் என அனைத்தையும் உண்ணும்.
  • பொதுவாக, 15 முதல் 30 எண்ணிக்கை அளவில் காட்டுப் பன்றிகள் குழுவாகச் செல்லும் திறன் கொண்டவை.
  • இவை, காட்டில் உள்ள இயற்கையான உணவைக் காட்டிலும், நெல், சோளம், மக்காச் சோளம், பயறு வகைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிக அளவில் நாடுகின்றன.
  • இவை, உண்பதைக் காட்டிலும், சேதம் செய்வதே அதிகமாகும். பொதுவாக, மாலை மற்றும் விடியற்காலை வேளைகளில் இவை வெளியே செல்லும். இவற்றுக்கு கண் பார்வை சற்றுக் குறைவு, ஆனால், நுகர்வுத் திறன் அதிகம். இதனால் பயிர்களை வெகு தொலைவிலேயே கண்டறிந்து விடுகின்றன.
  • காட்டுப் பன்றிகள் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் பட்டியல் 3-இல் இருப்பதால், இவற்றின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது.
    எனவே, இவற்றை தாக்காமல், அவற்றிடமிருந்து பயிர்களைக் காக்க விவசாயிகள் நடவடிக்கை மேற்கொள்ளாலாம்.

முள்கம்பி வேலி அமைத்தல்:

வயலைச் சுற்றி முள் கம்பி வேலி நிலத்திலிருந்து ஓர் அடி உயரத்தில் ஒரு கம்பியும், மேலும், ஒவ்வோர் அடி தொலைவில் ஒரு கம்பியுமாக மொத்தம் மூன்று கம்பிகள் அமைத்து கட்டுப்படுத்தலாம்.
சுருள் கம்பி வேலி:

சுருள் கம்பி வேலியும் ஓர் அடி தொலைவு இடைவெளியில் அமைக்கலாம். இதில், உள்ள கூரான முனைகள் காட்டுப் பன்றிகளை அச்சம்கொள்ளச் செய்யும். சில சமயம் மாட்டிக் கொண்டு, அவை எச்சரிக்கை ஒலி எழுப்பும். இதனால் மற்ற பன்றிகள் வராமல் இருக்கும்.
கம்பி வலை வேலி: மண்ணிலிருந்து 3 அடி உயரம் கம்பி வலை வேலி எழுப்பினால், பயிருக்குப் பாதுகாப்பாக இருக்கும். இந்த வகை வேலிகள் பயிரிலிருந்து ஓர் அடி தொலைவு தள்ளி அமைக்க வேண்டும்.
சூரிய மின் வேலிகள்:

மிகவும் விலை உயர்ந்த பயிராக இருந்தால், இந்த வகை வேலிகளை அமைக்கலாம். இந்த மின் வேலியில் 12 வோல்ட் மின்சாரம் எப்போதும் பாய்ந்து கொண்டே இருக்கும். இதனால், வயலுக்குள் பன்றிகள் நுழையும்போது, வேலியில் சிக்கி அதிர்வு உண்டாகும். அதிர்வில் சிக்கும் பன்றிகள் எழுப்பும் ஒலியால், மற்ற பன்றிகள் நிலத்துக்குள் வராது.
கால்வாய் அமைத்தல்:

விவசாய நிலமும் காடும் சேரும் இடத்தில் விவசாயிகள் இரண்டு அடி அகலம் ஒன்றரை அடி ஆழமும் கொண்ட கால்வாய் அமைக்கலாம். பன்றிகளின் கால்கள் குட்டையாக இருப்பதால், இக் கால்வாய்களை தாண்டி உள்ளே வர முடியாது.
வரப்பில் ஆமணக்கு:

வரப்பினைச் சுற்றி 4 வரி ஆமணக்கு பயிரிடும்போது, இதன் வாசம் மற்ற பயிரின் வாசத்தை மறைத்துவிடும். ஆமணக்கில் அதிக அளவு ஆல்காய்டுகள் இருப்பதாலும், அவை சுவையின்றி இருப்பதாலும், காட்டுப் பன்றிகளுக்குப் பிடிக்காது.
ரசாயன முறை:

போராட் அல்லது திம்மட் குருணை மருந்து 200 கிராம் 1 கிலோ மணலுடன் கலந்து சிறு துளைகள் இடப்பட்ட பாலிதீன் கவரில் கட்டி, காட்டுப் பன்றிகள் வரும் திசையில் 3 மீட்டர் தொலைவுக்கு ஒன்று என்ற அளவில் குச்சியில் கட்டி ஒரு மீட்டர் உயரத்தில் தொங்கவிடலாம். இந்த மருந்தில் வரும் துர்நாற்றம் பயிரின் வாசனையை முற்றிலும் மறைத்து விடுவதால், பன்றிகள் எளிதில் பயிரை கண்டுபிடிக்க முடியாது.
காட்டுப் பன்றிகள் மூக்கின் மூலம் நுகர்ந்து சென்றே பயிர்களையும் வழித்தடத்தினையும் கண்டறிகிறது.
எனவே, வயலைச் சுற்றி முடி திருத்தகத்தில் கிடைக்கும் மனித தலைமுடியினைப் பரப்புவது மற்றும் பழைய கிழிந்த வண்ணப் புடவைகளைக் கட்டுவதன் மூலம் மனித நடமாட்டம் இருப்பதாகக் கருதி காட்டுப் பன்றிகள் வருவதில்லை.
மேலும், காட்டுப் பன்றிகளின் இயற்கை எதிரிகளான புலி, சிறுத்தை, ஓநாய் ஆகியவற்றின் ஒலிப் பதிவு செய்யுப்புட்டு குறிப்பிட்ட அளவில் கலந்து ஒலிக்கலவையினை எழுப்பும் நவீன கருவிகளை வைத்தும் பன்றிகள் வராமல் தடுக்கலாம்.
எனவே, விவசாயிகள் இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றி காட்டுப் பன்றிகளின் தாக்குதலில் இருந்து விளைநிலங்களைக் காத்து மகசூல் இழப்பைத் தடுத்து லாபம் ஈட்டலாம் என்றனர்.

நன்றி: தினமணி 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *