மழையே துணை – தினமணி தலையங்கம்

இந்தியாவில் அதிக உணவு தானிய உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு “கிருஷி கர்மன்’ விருது வழங்கப்படுகிறது. கடந்த இரு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற இதற்கான விழாவில் 18 மாநிலங்கள் பல்வேறு பிரிவுகளில் முதன்மை பெற்று, பரிசுகள் பெற்றன. இதில் தமிழ்நாட்டுக்கும் பரிசு கிடைத்தது என்று மகிழ்ச்சி கொள்ளலாம். அதே நேரத்தில் பெருமை கொள்ள முடியாது.

இந்த விருதுகள் 2011-12-ஆம் ஆண்டு ஒரு மாநிலத்தின் மொத்த உணவு தானிய உற்பத்தி அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது.

முதல் பிரிவு ஒரு கோடி டன்னுக்கும் அதிகமாக உணவு தானியம் உற்பத்தி செய்த மாநிலங்களுக்கானது. இதில் மத்தியப் பிரதேசம் 190 லட்சம் டன் உற்பத்தி செய்துள்ளது. இது இதற்கு முந்தைய சாதனை அளவைக் காட்டிலும் 18.91% அதிகம். அடுத்ததாக பஞ்சாப் மாநிலம் 283 லட்சம் டன் உற்பத்தி செய்தாலும் அதன் வளர்ச்சி விகிதம் 1.74% மட்டுமே. மூன்றாவதாக ராஜஸ்தான். இம்மாநிலம் 189 லட்சம் டன் உற்பத்தி செய்துள்ளது. முந்தைய அதிகபட்ச உற்பத்தியைக் காட்டிலும் 0.70% மட்டுமே சாதனை புரிந்துள்ளது.

உணவு தானிய உற்பத்தி அளவு 100 லட்சம் டன்னுக்கும் குறைவான மாநிலங்களின் பட்டியலில் தமிழக அரசுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. அதாவது 96.4 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தி செய்துள்ளோம். முந்தைய ஐந்து ஆண்டுகளில் அதிகபட்ச சாதனை அளவாக 2006-07-ஆம் ஆண்டில் 82.63 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தியைக் கணக்கிட்டால், நாம் 2011-12-ஆம் ஆண்டில் 16.67% அதிக உற்பத்தி செய்துள்ளோம். இதற்காக நாம் நிச்சயம் மகிழ்ச்சி கொள்ளலாம்.

இந்த விருதுகள், அந்தந்த மாநிலம் அதனதன் சாதனையை விஞ்சிய அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன என்றாலும், முதல் பிரிவில் உள்ள மாநிலங்களின் மொத்த உணவு தானிய உற்பத்தியைக் கணக்கிட்டுப் பார்த்தால் நாம் பெருமை கொள்ள ஒன்றுமில்லை என்பது தெரியும். உற்பத்தியில் நம்மைவிட ஒரு கோடி டன் அதிகமாக இருக்கிறார்கள்.

நெல் உற்பத்தியில்கூட, பிகார் மாநிலம்தான் அதிக உற்பத்தி செய்து பரிசு பெற்றது. 2011-12 ஆண்டில் 72 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்துள்ளனர். முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் 28.8% அதிக உற்பத்தி செய்துள்ளது. நாம் பிகாரைவிட அதிகமாக நெல் உற்பத்தி செய்தாலும், உற்பத்தியில் சாதனை செய்யவில்லை என்பதற்கு அடிப்படைக் காரணம், காவிரி நீர் பிரச்னை மட்டுமே. தேவையான பாசன நீர், தேவைப்படும் காலத்தில் கிடைக்கவில்லை என்பதாலேயே, பலர் நெற்பயிரைச் சாகுபடி செய்யவில்லை.

தமிழகம் 96.4 லட்சம் டன் மட்டும்தான் உணவு தானியம் உற்பத்தி செய்ய முடிந்தது என்றால், அதற்குக் காரணம், போதிய நீர் இல்லாததால் தமிழக விவசாயிகள் எண்ணெய் வித்துகள் உற்பத்திக்கும், கரும்பு போன்ற பணப்பயிர் சாகுபடிக்கும் அதிகமாக மாறிவிட்டார்கள் என்பதுதான்.

தமிழகத்துக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரைத் தராமல் தானே வேளாண்மை செய்யும் கர்நாடக மாநிலம் உணவு தானிய உற்பத்தியிலோ, நெல் உற்பத்தியிலோ சாதனை எதையும் செய்யவில்லை. இதற்குக் காரணம், காவிரி நீர் பயன்பாட்டில் நெல்சாகுபடி செய்யும் வயல்களில் ஒரு ஏக்கருக்கு உற்பத்தியாகும் நெல் அளவு, தமிழ்நாட்டை ஒப்பிடும்போது மிகவும் குறைவு. கர்நாடகம் அதிக நீரைப் பயன்படுத்தி, ஏக்கருக்கு குறைவான நெல் உற்பத்தியைத்தான் காட்டுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் உற்பத்திக்கான மண்வளம், சாகுபடி பரப்பு இருந்தபோதிலும், சாகுபடி செய்யாததாலும், மாற்றுப்பயிர்களுக்கு மாறியதாலும், நெல் உற்பத்தியில் சாதனை நிகழ்த்த முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாகும் என்ற நம்பிக்கை இல்லை. காவிரி கண்காணிப்பு ஆணையமும் தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரை அளிக்கும் என்ற நம்பிக்கையும் இல்லாமல் ஆகிவிட்டது. இந்நிலையில் நாம் விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டிய மாற்று நடைமுறைகளைப் பற்றி யோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளோம்.

இனி யாரை நம்பியும் பயன் இல்லை என்பதால், மழை நீருக்கும் கிணற்றுப்பாசனம் மற்றும் ஏரிப்பாசனத்துக்கும் அதிக முக்கியத்துவம் தரவும், ஏரிகளை முழுமையாகப் பயன்படுத்தவும் வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மழை நீரைத் துளியும் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டிய காலகட்டத்துக்கு தமிழகம் வந்துள்ளது. நெல் சாகுபடியிலும்கூட நீர்மேலாண்மை இல்லை என்றும், அதிக நீரை வீணடிக்கிறோம் என்றோம் தமிழக விவசாயிகள் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு.

கம்பு, சோளம், கேழ்வரகு ஆகிய பயிர்கள் தமிழகத்தில் மிக அதிகமாக விளைந்த காலமும் உண்டு. ஆனால் இவற்றுக்குச் சந்தை இல்லை என்ற காரணத்தாலும், தமிழர்கள் இந்த சிறுதானிய உணவுகளைக் கைவிட்டு, முழுக்க முழுக்க அரிசி உணவுக்கு மாறியதாலும் இவற்றின் உற்பத்தி படிப்படியாக குறைந்தது. இனி இத்தகைய குறைந்த நீர்த்தேவை உள்ள பயிர்களுக்கும் மானாவாரி பயிர்களுக்கும் அதிக முக்கியத்துவம் தருவதுடன், அதன் சந்தையை அதிகரிக்க நம் உணவுப் பழக்கத்தில் கம்பு, சோளம், கேழ்வரகுக்கு அதிக முக்கியத்துவம் தருவதும் அவசியமாகிறது.

தமிழகத்தின் உணவு தானிய உற்பத்திக்கு மழைநீர் மட்டுமே உதவும். அண்டை மாநிலங்களோ மத்திய அரசோ நிச்சயம் உதவி செய்யப்போவதில்லை. மழை பெய்யாமல் போகும் காலங்களும் உண்டுதான்…இருப்பினும், மழை பொய்த்தாலும் மனிதர்களைப்போல பொய்ப்பதில்லை.

நன்றி: தினமணி

Related Posts

செயற்கை வேளாண்மையே நோய்களுக்கு காரணம்... பல்வேறு நோய்களுக்குச் செயற்கை வேளாண்மையே காரணம...
பாரம்பரிய தானியங்களில் சத்துக்கள் ஏராளம்... ""நமது பாரம்பரிய தானியங்களை பயிரிட வேண்டும்,' என ப...
விவசாயிகளுக்கான கால் சென்டர் (call center)... மத்ய அரசாங்கமும், தமிழ் நாடு அரசாங்கமும் சேர்ந்து,...
பசுமை தமிழகம் Android app பசுமை தமிழகம் மொபைல் Android app இதுவரை 5000 ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *