கை இல்லாதவரும் கண் தெரியாதவரும் வளர்த்த காடு!

“உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்; ஓடமுடியாவிட்டால் நடந்துசெல்லுங்கள்; நடக்கவும் முடியாவிட்டால் தவழ்ந்து செல்லுங்கள். ஆனால், எதைச் செய்தாலும் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டே இருங்கள்”- மிகவும் பிரபலமான வரிகள் இவை. தன்னம்பிகையை தட்டிக்கொடுத்து வளர்க்கும் இந்த வரிகளுக்கு வாழும் சாட்சிகளாக இரண்டு பேர் சீனாவில் இருக்கிறார்கள். பார்வை இல்லாத ஒருவரும், இரு கைகளை இழந்த ஒருவரும் சேர்ந்து  பத்தாயிரம் மரங்களை வளர்த்திருக்கிறார்கள்.

மரம் நண்பர்கள்  கை

புற்கள், மரங்கள் என பச்சைப் பசுமையாய் இருந்த வடகிழக்கு சீனாவின் ஏலி என்கிற கிராமத்துக்கு குவாரி ஒன்று  செயல்பட ஆரம்பித்திருக்கிறது. குவாரியின் வருகைக்குப் பின் சுற்றி இருக்கிற இடங்கள் எல்லாம் மாசுப்படுகின்றன. ஆற்றில் கழிவுகள் கலக்கின்றன. அதனால் ஆற்றில் இருக்கிற மீன்கள் இறக்கின்றன. அதேபகுதியில் ஜியா ஹைக்சியா என்பவர் வசித்து வருகிறார். 2000-வது வருடத்தில் குவாரியில் நடைபெற்ற ஒரு வெடி விபத்தில் ஜியா ஹைக்சியா சிக்கிக்கொள்கிறார். விபத்தின் விளைவால் தனது கண் பார்வையை நிரந்தரமாக இழக்கிறார். திடீரென பார்வை இழந்ததும், விபத்துக்கு முன்னர்தான் பார்த்த இடங்களை, மனிதர்களை, நினைத்து நினைத்து உடைந்து போகிறார். பிறவியில் பார்வை இல்லாமல் இருந்திருந்தால் வாழப் பழகி இருக்கும் என நினைக்கிற வெங்க்யூ ஒரு கட்டத்தில்  தற்கொலைக்கு முயல்கிறார்.

 

மரம் நண்பர்கள்

அதே கிராமத்தில் ஜியா வேங்க்யூ  என்கிற நபர் வசித்து வருகிறார். அவர் 3 வயதாக இருக்கும்போது மின்சாரம் தாக்கிய விபத்தில் தனது இரு கைகளையும் இழக்கிறார். கைகளை இழந்தவர் துவண்டுபோகாமல் தனது கால்களைப் பயன்படுத்தி எல்லா வேலைகளையும் செய்துவருகிறார். கிராமத்தில் இருக்கிற ஊனமுற்ற பாடல் குழுவில் இணைந்து, பாடல்கள்  பாடுவதை தொழிலாகக் கொள்கிறார். ஜியா வேங்க்யூவின்  பால்ய காலங்களில் ஜியா ஹைக்சியாவுடன்  பயணித்தவர். சிறு வயதில் இருந்தே இருவரும் நண்பர்களாக இருக்கிறார்கள். இருவரது வீடுகளும் அருகருகே இருக்கிறது.

பார்வை இழந்து,  மன உளைச்சலில் இருக்கும் ஜியா ஹைக்சியாவை கைகளை இழந்த  ஜியா வேங்க்யூ சந்திக்கிறார். “எனக்கு நீ கையாக இரு. உனக்கு நான் கண்ணாக இருக்கிறேன்” என சொல்கிறார். கிடைத்த ஆறுதல் ஒரு பிடிப்பாக தெரியவே, ஜியா ஹைக்சியா அவரோடு இணைகிறார். ஒருவருக்கு ஒருவர் துணை என நடக்க ஆரம்பிக்கிறார்கள். ஆறுகளைத் தாண்டும் போதெல்லாம் ஹைக்சியாவை தூக்கிக் கொண்டு நடக்கிறார் ஜியா  வேங்க்யூ. எங்கு சென்றாலும் இருவரும் இணைந்தே செல்கிறார்கள். வறண்டு போய்  கிடக்கிற கிராமத்துக்கு நம்மால் முடிந்த ஒன்றைச் செய்ய வேண்டும் என இருவரும் பேசிக்கொள்கிறார்கள். அவர்கள்  மாற்றுத்திறனாளிகள் என்பதைக் கடந்து  யோசிக்க ஆரம்பிக்கிறார்கள்.  இருவரும் தங்களைச் சுற்றி இருக்கிற சூழல் மாசுபட்டுக் கிடப்பதை உணர்கிறார்கள்.. குவாரியில் இருந்து வருகிற கழிவுகள் ஆற்றில் கலந்தும், காற்றில் கலந்தும் இருப்பதை அறிந்து கிராமத்தில் மரம் வளர்ப்பது என முடிவெடுக்கிறார்கள்.

கிராமத்தைச் சுற்றி 800 மரக்கன்றுகளை நடவு செய்கிறார்கள்.  கைகளை இழந்த ஜியா வேங்க்யூ கழுத்துக்கு தோளுக்கும் இடையில் கம்பு போன்ற ஒன்றை பயன்படுத்தி தண்ணீர் எடுப்பது, மண் அள்ளுவது என பல வேலைகளைச் செய்கிறார். மரம் நடுவதற்கான குழிகளை தோண்டும்  அவர்களின் முயற்சியை  ஊர் மக்கள் கேலி செய்கிறார்கள். “கை  இல்லாதவனும் கண்ணு தெரியாதவனும் சேர்ந்து  என்ன பண்ணப் போறாங்களோ” என கேலியும் கிண்டலும் அதிகரிக்கிறது. ஆனால், அவர்கள் இருவரும் மரங்கள் வளரும் எனக் காத்திருக்கிறார்கள். மரக்கன்றுகள் வேர்பிடித்திருக்கும் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. 800 மரங்களில் 2 மட்டுமே உயிர்ப்பிடித்திருக்கிறது. மற்ற அனைத்தும் இருக்கிற  தடம் இல்லாமல் அழிந்து போயிருக்கிறது. மரம் நடுவதும்  வளர்ப்பதும் எளிதானது என நம்பியவர்கள் அது சாதாரண காரியம் இல்லை என  உணர்கிறார்கள்.

தோல்வியில்  சோர்ந்து போயிருந்த ஜியா ஹைக்சியாவுடன் மனம் விட்டுப்  பேச ஆரம்பிக்கிறார்  ஜியா  வேங்க்யூ. “விடாம முயற்சி பண்ணுவோம். நிச்சயம் நமக்கு ஒரு நாள் விடை கிடைக்கும்” என தன்னம்பிக்கையை விதைக்கிறார் வேங்க்யூ. பிறகு மரக்கன்றுகள் இறந்து போனதற்கு காரணம் தண்ணீர் இல்லாமல்,  நிலம் காய்ந்து போய்  இருப்பதுதான் என்பதைக் கண்டறிகிறார்கள்.  தண்ணீர் போகிற பாதையில் மரக்கன்றுகளை நடுவதுதான் சிறந்த வழி  என முடிவு செய்கிறார்கள்.

பின், மரக்கன்றுகள் வாங்குவதற்கான பணம் இல்லாமல் இருக்கிறார்கள். மரங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படுகின்ற கிளைகளை நடவு செய்கிற முறையைப் பற்றி கேள்விப்படுகிறவர்கள், ஊரில் இருக்கிற மரத்தில் இருந்து கிளைகளை வெட்ட முடிவு செய்கிறார்கள். ஜியா ஹைக்சியாவின் உதவியுடன் ஜியா வேங்க்யூ மரம் ஏறி கிளைகளை வெட்டுகிறார். வெட்டிய கிளைகளை ஆறுகளின் ஓரத்தில் நடவு செய்கிறார்கள். தினமும் அம்மரக்கன்றுகளை கண்காணித்து வருகிறார்கள். ஆறு மாதங்கள் எந்த மாற்றமும் இல்லாதிருந்த அக்கன்றுகள் துளிர்க்க ஆரம்பிக்கின்றன. தனிமரம்  தோப்பாவதை காண்கிற மக்கள் அவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பிக்கிறார்கள். இருவரது கனவுகளும் சேர்ந்து  ஒரு நாள் மரங்களாகின்றன. அப்படி அவர்கள் நட்ட கன்றுகள் எண்ணிக்கை இப்போது பத்தாயிரத்தைத் தாண்டி நிற்கிறது. அவை அனைத்தும் இன்று மரங்களாக வளர்ந்து நிற்கின்றன.”அடுத்தத் தலைமுறைக்கு கொடுத்து போக எங்களிடத்தில் மரங்கள் இருக்கின்றன” எனச் சொல்லும் இரு நண்பர்களும் “எங்களின்  இறுதி மூச்சு இருக்கிற வரை மரம் நடுவோம். எங்களைப்  போல ஒவ்வொரு தனி மனிதரும் ஒரு மரம் வளர்த்தால் இயற்கையை  எளிதாக காப்பாற்றி விடலாம்” என்கிறார்கள்.

மரம் நண்பர்கள்

கொடுக்கப்பட்டிருக்கிற புகைப்படங்களை ஒரு நொடி காட்சிகளாய் கற்பனை செய்து பாருங்கள். அதற்கு பின்னால்  இருக்கிற அவர்களின் லட்சியமும் கனவும் எவ்வளவு பெரிதென்று யோசித்துப்பாருங்கள். இருக்கிறவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பதில் இருக்கிற ஆனந்தத்தை விட, இல்லாதவர்கள் இருப்பவர்களுக்கு கொடுத்துவிட்டு போவதில் தான் அதிகம் இருக்கிறது. ”மரம் நடுங்கள்  என்றெல்லாம் சொல்லவில்லை; எழுந்து நடங்கள்” எனச் சொல்கின்றன இவர்களின் செயல்பாடுகள்.

நன்றி: விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *