தளிர் வளர்க்கும் சருகு!

வயது 73.. ஆனாலும்.. மகன் மாதம்தோறும் செலவுக்குத் தரும் பணத்தில் சேமித்து மரக்கன்றுகள் வாங்கி ராஜபாளையம் பகுதியில் முக்கிய இடங்களில் நட்டுப் பராமரித்து வருகிறார் ராஜபாளையம் அருகேயுள்ள நக்கனேரி என்கிற இடத்தைச் சேர்ந்த கருப்பையா.

நக்கனேரி, தெற்கு வெங்காநல்லூர், முறம்பு எனப் பல பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பசுமை, குளிர்ச்சி தரும் மரங்கள் தற்போது பரவலாக உள்ளன. இந்த மரங்களை 2003-ம் ஆண்டு முதல் நட்டு வருகிறார் கருப்பையா.

இவர் இளைஞராக இருந்தபோது அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். அத்துடன் மரங்களின் அவசியம் குறித்தும் நன்கு தெரிந்து கொண்டார். இளைஞராக இருந்தபோதே மரம் வளர்ப்பதில் அதிக அக்கறை கொண்டார்.

மரக்கடையில் வேலையில் சேர்ந்து தனது ஒரு மகனை கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆசிரியராக்கினார். தற்போது கடந்த பத்தாண்டுகளாக மரக்கன்றுகளை நட்டு சேவை செய்து வருகிறார்.

இவரது மகன் இவருக்கு மாதச் செலவுக்கு தரும் 1500 ரூபாயை சிக்கனமாக செலவு செய்து மாதம்தோறும் ரூ.500-க்கு மரக்கன்றுகளை வாங்கி நட்டு வருகிறார். இவரது சொந்த ஊரான ராஜபாளையம் அருகேயுள்ள நக்கனேரி மற்றும் தெற்கு வெங்காநல்லூர், முறம்பு ஆகிய பகுதிகளில் புங்கை, வேம்பு போன்ற குளிர்ச்சி தரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

கன்றுகளை நடுவதோடு இல்லாமல் கோடை காலத்தில் வறட்சியான நாள்களில் மரக்கன்றுகள் பட்டுப்போகாமல் இருக்கத் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வளர்த்து வருகிறார்.

இன்று முறம்பு முதியோர் இல்லம், பள்ளிகள், நக்கனேரி, தெற்கு வெங்காநல்லூரில் பசுமையுடன் வளர்ந்து வரும் மரங்கள் இவர் நட்டதே எனப் பலரும் பெருமிதத்துடன் கூறி வருகின்றனர்.

சிறந்த சேவையில் ஈடுபட்டு வரும் இவருக்கு தளவாய்புரம் ரோட்டரி கிளப், ராஜபாளையம் இன்னர் வீல் கிளப், வார் அமைப்பு ஆகிய சேவை சங்கங்கள் விருது வழங்கி கெüரவித்துள்ளன.

ராஜபாளையம் பகுதி மட்டுமின்றி எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள பொது இடங்களில் தவறாமல் மரக்கன்று வாங்கி நடுவார். மறுமுறை அதே ஊருக்குச் செல்லும்போது தான் நட்ட மரக்கன்று எந்த நிலையில் உள்ளது எனப் பார்க்கத் தவறுவதில்லை கருப்பையா.

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

இது குறித்து கருப்பையாவிடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது:

“”பறவைகளுக்கு மரம் புகலிடம் கொடுக்கும். மரம் மழையை வரவழைக்கும். மரத்தினால் ஆக்ஸிஜன் அதிகமாகி எங்கும் பசுமையுடன் வெப்பத்தை தணிக்கும் என்பதால் எனக்கு சிறு வயது முதலே இதில் அதிக ஈடுபாடு இருந்தது.

என் மகன் ஆசிரியராகப் பணிபுரிகிறார். அவர் எனக்கு மாதம்தோறும் செலவுக்கு கொடுக்கும் பணத்தில் பெரும் பகுதி மரக்கன்றுகள் வாங்கி நட்டு வருகிறேன்.

தற்போது வனத் துறையினர் எனக்கு மரக்கன்றுகளை அதிக அளவில் தருகின்றனர். மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கத் தள்ளுவண்டியையும் இலவசமாகத் தந்துள்ளனர். பல ஊர்களில் உள்ள பொதுநல அமைப்புக்கள் என் சேவையைப் பார்த்து என்னை வரவழைத்து மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வுப் பிரசாரம் செய்யச் சொல்கின்றனர்.

என் போன்று ஊருக்கு ஒருவர் இந்த சேவையை ஆர்வத்துடன் மேற்கொண்டால் நாட்டில் வறட்சியே வராது. சுற்றுப்புறச்சூழல் நல்ல நிலையில் இருக்கும்” என்றார் கருப்பையா.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “தளிர் வளர்க்கும் சருகு!

  1. Adiyamaanduraraj says:

    Mr.karuppiah was a member of Diravida munnetra kazagam,before someyears ago.So always who done besthing

Leave a Reply to Adiyamaanduraraj Cancel reply

Your email address will not be published. Required fields are marked *