100 ஏக்கரில் 'தனி ஒருவன்' உருவாக்கிய காடு!

க்களுக்காக இலவச மருத்துவமனை, கல்விக்காக இலவச பள்ளி, வயதானவர்களுக்காக முதியோர் இல்லம், கமூக சிந்தனையுடன் இயங்குபவர்கள் மத்தியில், இனி எதிர்வரும் எல்லாதலைமுறைகளும் இயற்கையோடு இயைந்து நலமுடன் வாழ, தனி ஒரு மனிதனாக ஒரு காட்டை உருவாக்கியுள்ளார்  ஆரண்யா சரவணன்.

ஆரண்யா சரவணன்…? புதுச்சேரி ஆரோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 100 ஏக்கர் நிலத்தில்,  தனது 22 வருட கடும் முயற்சியால் ‘ஆரண்யா வனம்’ என்ற காட்டை உருவாக்கிய வனப் போராளி!

புதுச்சேரி நகரப்பகுதியிலிருந்து 4 மைல் தொலைவில் அமைந்துள்ள ஆரண்யா வனம், பச்சைப்போர்வையை போர்த்தியதுபோன்று பசுமை கொஞ்சுகிறது. காடுகள்,  பறவைகள், தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கான இல்லம்.

மனிதர்கள் அங்கு ஒரு சாதாரண பயனாளி மட்டுமே. அப்படி ஆரண்யா வனமும் மனிதனின் வாசம் படாத  வனம்தான் என்பதற்கு சாட்சியாக, காட்டிற்குள் நுழைந்துதும் நம்மை வரவேற்கின்றன பாம்புகள். ஆச்சர்யமாக நம்மை அச்சுறுத்தாமல் விலகி வழிவிட்டு செல்கின்றன.

குயில் ஓசையை மறந்துவிட்ட இந்த தலைமுறையான நமக்கு, அங்கு ஒலிக்கும் குயில்களின் ரீங்கார ஓசை ஆரம்பத்திலேயே அமர்க்களமான மனநிலைக்கு கொண்டு செல்கிறது. பறவைகளின் அந்த ஓசையில் அவற்றின் சுதந்திரம் தெறிக்கிறது. கோரஷான அந்த குரல் நமக்கு அச்சம் தரும் அதே வேளை, ‘இது எங்களின் வனம்’ என அவை பெருமிதப்படுவதுபோல் இருக்கிறது.

காட்டின் மையத்தில்,  தலையில் முண்டாசு கட்டி மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றியபடி நம்மை வரவேற்கிறார் சரவணன்.

“பூமி வெப்பமயமாவதால் எதிர்காலத்தில் பேரழிவுகளை விரைவில் சந்திக்க இருக்கின்றோம். அதற்கு முட்டுக்கட்டையிடும் முயற்சிதான் இந்த காடு வளர்க்கும் திட்டம்” என சுருக்கமாக தன் முயற்சியை சொல்கிறார் ஆரண்யா வனத்தின் (காடு) சொந்தக்காரர் சரவணன்.

‘காடுகளை காக்கவேண்டும் என்ற உந்துதல் எதனால் ஏற்பட்டது?’ என நாம் கேள்வியை முன்வைத்தோம்.

“திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையடிவார பகுதியில், மரங்கள் நிறைந்த பசுமையான வளையாப்பட்டு கிராமத்தில் பிறந்தவன் நான். பச்சைத் தங்கம் எனக் கூறி மலையடிவாரத்தில் உள்ள மரங்களை சமூக விரோதிகள் வெட்டி சாய்ப்பார்கள் தொடர்ந்து இந்த சீரழிவை பார்த்துவந்த சிறுவனான எனக்கு மனம் குமுறியது. ஒருமுறை எனது மாமாவுடன் சேர்ந்து இந்த அக்கிரமத்தை எதிர்த்தோம். ஆனால் பலனில்லை. இந்த சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நான், இயற்கையின் மீதும் காடுகளின் மீதும் அதிக பற்றுக்கொண்டேன். இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை அழிவிலிருந்து காப்பாற்ற வலியுறுத்தி, 1987 -ம் ஆண்டு சமூக ஆர்வலர்கள் சார்பில், கன்னியாகுமரியிலிருந்து கோவா வரை நடைபெற்ற பாதயாத்திரையில் கலந்து கொண்டேன். பின்னர் இயற்கையை பேணிக்காக்கும் ஆரோவில் சமூகத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்” என்றார் .
‘ஆரண்யா காடு உருவாக்கம் பற்றி சொல்லமுடியுமா?’ என்ற நமது அடுத்த கேள்விக்கு,  சற்று இடைவெளிவிட்டு பதில்சொல்லத்துவங்கினார் சரவணன்.

“புதுச்சேரியின் நீர் ஆதாரமாக விளங்கும் ஊசுட்டேரி அருகே உள்ள பூத்துறை கிராமத்தில், 100 ஏக்கர் நிலத்தை, ஆரோவில் நிர்வாகம் 1967 ம் ஆண்டு வாங்கியது. வெட்டாந் தரையாகவும் செம்மண் மேடாகவும் இருந்ததால்,  இந்தப்பகுதியை கால்நடைகள் மேய்ச்சலுக்காக மட்டுமே கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

Courtesy: VIkatan
Courtesy: VIkatan

1994 -ம் ஆண்டு ஆரோவில் நிர்வாகத்திடம் எனது விருப்பத்தை வெளியிட்டேன். நிலம் எனது பராமரிப்பில் வந்தது. வெட்டாந்தரையாக இருந்த நிலத்தில், மரங்களே இல்லாத சூழலில், சிறிய வகை குடில் ஒன்றை ஆரோவில் நிர்வாகத்தினர் அமைத்துக் கொடுத்தனர்.

ஆரம்பத்தில் இரவு பகல் வித்தியாசமின்றி பாம்புகளும்,  விஷப் பூச்சிகளும் சர்வசாதாரணமாக  உலவிக்கொண்டிருக்கும். எனது முயற்சிகளுக்கு இத்தகைய ஒரு சூழல் அச்சம் தருவதாக இருந்தது. போகப்போக அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளை கையாண்டேன். பிறகு அந்த இடத்தில் தங்கி வனவள மேம்பாட்டு முயற்சியில் ஈடுபட்டேன். இந்த நிலத்தை வளப்படுத்த மழைநீரை வீணாக்காமல் சேமிக்க முடிவு செய்தேன். அதுதான் இந்த காடு வளர நான் எடுத்த முதல் முயற்சி.

உள்ளூர் இளைஞர்கள் சிலர் என் முயற்சிகளுக்கு பக்கபலமாய் இருந்தார்கள். அவர்கள் உதவியுடன் மணல் மேடுகளில் உள்ள ஓடைகள் வழியாக, வீணாகும் மழைநீரை தடுத்து நிறுத்தி, ஆங்காங்கே உயரமான வரப்புகள் மற்றும் தடுப்பு சுவர்கள் அமைத்தோம். இதனால் 70 சதவீத மழைநீர் வீணாகாமல் நிலத்திலே தேங்கியது. இந்த முயற்சியினால் நிலத்தடி நீர்மட்டம் 50 அடியிலிருந்து 35 அடியாக உயர்ந்தது.

உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் முதற்கட்டமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள்  நடப்பட்டன. பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றிவந்து அங்குள்ள கோயில்கள், கிராமப் பகுதிகளிலிருந்து மரக்கன்றுகள், விதைகள் என 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை சேகரித்து வந்து நட்டுவைத்தோம்.

செம்மண் பூமி என்பதால் மரங்கள் தடையில்லாமல் வளர வசதியாக இருந்தது. சில வருடங்களில் மரத்தின் விதைகள் மூலம் இயற்கையாகவே வளர்ந்த மரங்களின் எண்ணிக்கையே லட்சத்தை தாண்டியது.

இது எனக்கு எடுத்துக்கொண்ட பணியில் பெரும் உத்வேகத்தை தந்தது. அடுத்தகட்டமாக நாட்டில் அழியும் நிலையில் உள்ள மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் இறங்கினோம்.
இப்போது இந்த காட்டில் மரங்கள், செடி கொடிகள் என பல லட்சம் தாவரங்கள் உள்ளன. சந்தனம், செம்மரம், தேக்கு, வேங்கை, கருங்காலி என 1000 க்கும் மேற்பட்ட விதவிதமான மரங்கள் உள்ளன. மேலும் இங்குள்ள மரங்களை வாழ்விடமாக கொண்டுள்ள 250 க்கும் அதிகமான பறவையினங்கள் காணப்படுகின்றன” என்று சொல்லும் சரவணன் முகத்தில் பெருமித ரேகைகள்.

இடைவெளி விட்டு மீண்டும் பேசத்துவங்குகிறார்  சரவணன். “நரி, முள்ளம்பன்றி, முயல், எறும்புத்திண்ணி என 40 வகைக்கும் அதிகமான விலங்கினங்கள் இங்கு உள்ளன. மூலிகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் அதிகம் உள்ளது இந்த காட்டின் சிறப்பு” என வெற்றிகரமான மனிதராக புன்னகைக்கிறார் சரவணன்.

கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில்,  “சுற்றுப்புற சூழல் நண்பன்’ என்ற மாத இதழையும் நடத்தி வந்திருக்கிறார் சரவணன். மனைவி வத்சலா, மகள் நற்செல்வி என அளவான குடும்பம் அவருடையது.

சரவணன் உருவாக்கிய ஆரண்யா வனத்தை சுற்றிப்பார்க்க,  பல்வேறு இடங்களிலிருந்தும் மக்கள் திரண்டுவருகின்றனர் தற்போது. பேராசிரியர்கள், தாவரவியல் அறிஞர்கள், பறவை ஆர்வலர்கள், மாணவர்கள் என பலரும் பார்வையிட வருகின்றனர். அவர்களுக்கு மரங்கள், காடுகள் உருவாக்குவது குறித்து ஆராய்ச்சி மையம் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தனிஒருவனாக நின்று ஆரண்யா வனத்தை உருவாக்கிய சரவணன், தன் பணி நிறைவடைந்ததாக கருதி காட்டைவிட்டு வெளியேறிவிடவில்லை. மனைவி, மகளுடன் காட்டிலேயே வீடு கட்டி, இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையை வாழ்கிறார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களால் நாம் எத்தனை உயரத்தை எட்டிப்பிடித்தாலும், இயற்கையிலிருந்து விலகி நாம் எதையும் சாதிக்கமுடியாது.
இயற்கையை நேசிப்பதும்,  இதை வளர்த்தெடுப்பதுமான நடவடிக்கைகள் மட்டுமே அந்த பேராபத்துகளிலிருந்து நம்மை காக்கும் ஆயுதமாக இருக்கும். அத்தகையதொரு முயற்சிக்கு முன்மாதிரி மனிதராக தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் சரவணன் போன்ற வனப் போராளிகளுடன் கைகோர்த்து செயல்படுவது மட்டுமே, நமது எதிர்கால தலைமுறைகளை இந்த மண்ணில் சிக்கலின்றி வாழ வைக்க ஒரேவழியாக இருக்கும்.

சுவரில்லாமல் சித்திரமில்லை…உண்மைதான், காடுகள் இல்லாமல் http://puvi.relier.in/wp-admin/post-new.phpநம் கனவுகள் இல்லை!

– அ.குரூஸ்தனம்

நன்றி: ஆனந்த விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “100 ஏக்கரில் 'தனி ஒருவன்' உருவாக்கிய காடு!

  1. Siva says:

    One Man(GOD) army. A man with extreeme affection towards nature alone can achive this. A Royal salute to you Sir. We just love you Sir.
    Jai hind.

Leave a Reply to Siva Cancel reply

Your email address will not be published. Required fields are marked *