குளிர்பானமா அல்லது கெமிக்கலா?

உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப்பொருட்களில் முக்கியமானதாக கருதப்படும் ஈயம், காட்மேனியம் உள்ளிட்ட 5 வேதிப் பொருட்கள் பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்களில் கலந்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இப்படி பட்ட குளிர்பானங்களில் சில வருடங்கள் முன் பூச்சி மருந்து மிச்சங்கள் இருப்பது பற்றி தெரிய வந்தது. இப்போது அபாயமான ரசாயனங்கள்!

இந்தியாவின் ட்ரக்ஸ் டெக்னிக்கல் அட்வைசரி போர்டு அமைப்பின் உத்தரவின் கீழ் கொல்கத்தாவில் உள்ள அகில இந்திய உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு ஆய்வு மையம் பெப்சி, கோக், மவுன்டைன் டியூ, செவன் அப் மற்றும் ஸ்ப்ரைட் உள்ளிட்ட 5 குளிர்பானங்களில் பரிசோதனை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஐந்து குளிர்பானங்களின் 600 மில்லி பாட்டில்களில் சோதனை செய்யப்பட்டது. ஆய்வு முடிவில், பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் 5 வகையான வேதிப் பொருட்கள் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Courtesy: Vikatan
Courtesy: Vikatan

அதன்படி ஒரு லிட்டர் ஸ்ப்ரைட்டில் ஈயம் 0.007 மில்லி கிராமும் காட்மேனியம் 0.003 மி.கி. ஆண்டி மானி 0.015 மி.கி குரோமியம் 0.015, ஃபிளேவர் வருவதற்காக சேர்க்கப்படும் டிஇஹெச்பி 0.016 மி.கிராமும் உள்ளன.

கோக்கில் 0.009 மி.கி ஈயம், 0.011 காட்மேனியம் 0.026 குரோமியம், ஆண்டிமானி(Antimony) 0.006,டிஇஹெச்பி 0.026 மி.கிராமும் சேர்க்கப்பட்டுள்ளன.

மவுன்டைன் டியூவில் 0.006 மி.கி ஈயம், 0.016 காட்மேனியம், 0.017 மி.கி குரோமியம், 0.012 ஆண்டிமானி  டிஇஹெச்பி 0.014 மி.கிராம் உள்ளன.

பெப்சியில் 0.016 மி.கி ஈயம், காட்மேனியம் 0.002, குரோமியம் 0.017 மி.கி. ஆண்டிமானி 0.029 டிஇஹெச்பி 0.28 மி.கிராமும் சேர்க்கப்பட்டுள்ளன.

செவன்அப்பில் 0.004மி.கி. ஈயம், காட்மேனியம் 0.012, குரோமியம் 0.017, ஆண்டிமானி 0.011, டிஇஹெச்பி 0.018 மி.கிராமும் உள்ளன.

இந்த ஆய்வு முடிவுகள் அகில இந்திய உணவு தரக்கட்டுப்பாடு மற்றும் மக்கள் நலத் துறை இயக்குனர் ஜக்திஷ் பிரசாத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட மருந்து பொருட்களிலும் இதுபோன்ற உலோகத் தாதுக்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து பெப்சிகோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றிடம் கூறுகையில்,”  எங்களுக்கு இதுவரை அந்த அமைப்பிடம் இருந்து இதுதொடர்பாக  எந்த கடிதமும் வரவில்லை. எந்தவிதமான ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முடியாமல் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால், இந்திய உணவுத் தரக்கட்டுப்பாட்டு கழகத்தின் விதிமுறைகளுக்குட்பட்டே எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன எனபது உறுதி. நிர்ணயிக்கப்பட்ட அளவுகளுக்குள்தான் இதுபோன்ற வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.  கோகோ கோலா நிறுவனமும். பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்பு நிறுவனச் சங்கமும் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இந்த ஆய்வு மிக துல்லியமாக நடத்தப்பட்டுள்ளது. முதலில் கொல்கத்தா உணவு தரக்கட்டுப்பாட்டுக் கழகமும் அடுத்து தேசிய ஆய்வுக் கழகமும் பரிசோதனை நடத்தி முடிவை அறிவித்துள்ளன. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானங்களில் கலந்துள்ள வேதிப் பொருட்களின் அளவு அறையில் உள்ள வெப்பநிலைக்கு ஏற்ப அதிகரிக்கவும் செய்கிறதாம்.உதாரணமாக 40 டிகிரி செல்சியல் வெப்ப நிலையில் உள்ள அறையில் இந்த பாட்டில்கள் 10 நாட்கள் இருந்தால் அதில் உள்ள ஈயத்தின் அளவு 0.006ல் இருந்து 0.009 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோன்றே ஒவ்வொரு வேதிப் பொருட்களின்  அளவும் அதிகரிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலக சுகாதார மையத்தின் [WHO] சமீபத்திய ஆய்வின்படி, காட்மேனியமும் ஈயமும் உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப்பொருட்கள் பட்டியில் முதல் 10 இடத்துக்குள் இடம் பெற்றுள்ளன. குளிர்பானங்களில் கலந்துள்ள ஈயம் குழந்தைகளின் உடல் நலனுக்கு பெரும் தீங்கு விளைவிக்கக் கூடியது. குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியது. நரம்பு மண்டலங்களையும் பாதித்து கோமா நிலைக்கு கொண்டு செல்லக்கூடியது.  குழந்தைகளின் மன நிலையிலும் மாற்றத்தை விளைவிக்கக் கூடியது . சில சமயங்களில் மனநிலை பாதிப்பை கூட ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

காட்மேனியம் கிட்னியை பாதிக்கக் கூடியது. எலும்பு மண்டலம் மற்றும் சுவாச மண்டலங்களை பாதிக்கிறது. ஆண்மனி, டிஇஹெச்பி போன்றவை உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை  என உலக சுகாதார மையம் கூறியுள்ளது.

நன்றி: விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *