முகத்வாரத்தை அடைக்காமல் விட்டதால் அதிகரித்த சென்னை வெள்ளம்

அடையாறு மற்றும் நேப்பியர் பாலங்களில் முகத்துவார மணல் அடைப்பை திறந்து விடாததால் கடலுக்குள் நீர் செல்ல முடியாமல் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது தெரிய வந்துள்ளது.

கனமழையால் நீர்வரத்து அதிகரித்த நிலையில் செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து முறையே வினாடிக்கு, 80 ஆயிரம் மற்றும், 30 ஆயிரம் கனஅடி நீர் நேற்று முன்தினம் இரவில் திறந்து விடப்பட்டது.இந்த நீர் ஆற்றில் கலந்து கடலுக்குள் செல்ல முடியாமல் நிரம்பியதால் கூவம் மற்றும் அடையாற்று கரைகளிலிருந்து எதிர்த் திசையில் வெளியேறிய நீர், சென்னையின் நகர் பகுதிக்குள் புகுந்து 15 அடி உயரத்திற்கு மேல் குடியிருப்புப் பகுதிகளுக்குள் தேங்கியுள்ளது.

பூண்டி ஏரியில் திறக்கப்பட்ட நீர், கூவம் ஆற்றிலிருந்து வெளியேறி ஊருக்குள் பாய்ந்ததால் ஆவடி, அம்பத்துார், சூளைமேடு, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, சேத்துப்பட்டு, அமைந்தகரை, அரும்பாக்கம், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் புகுந்து விட்டது.

இதேபோல் கூவத்திலிருந்து அதிகமான உபரி நீரில் ஒரு பங்கு பக்கிங்ஹாம் கால்வாய்க்குள்ளும் புகுந்து விட்டது. அதனால்பேசின்பிரிட்ஜ், சென்ட்ரல் மற்றும் வடசென்னை பகுதிகள் பாதிக்கப்பட்டன.

இதுகுறித்து மத்திய அரசின் உத்தரவுப்படி மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் முகத்துவாரங்களை சரியாக திறந்து விடாததால் நீர் செல்ல முடியாமல் தேங்கி மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: கூவம் ஆறு கடலில் கலக்கும் நேப்பியர் பாலப்பகுதியை தாண்டி முகத்துவாரப் பகுதி உள்ளது. வழக்கமாக அதிகமாக நீர் திறக்கப்பட்டால் கரைப்பகுதியில் தேங்கும் மணல், குப்பை கழிவுகள் உள்ளிட்ட அடைப்புகள் மலை போல் தேங்கி நிற்கும் நிலையில் அந்த முகத்துவாரத்தை தோண்டி நீர் செல்ல வழி ஏற்படுத்தவேண்டும்.

சைதாபேட்டையில் ஓடும் அடையார் நதி  Courtesy: Hindu
சைதாபேட்டையில் ஓடும் அடையார் நதி Courtesy: Hindu

 

 

 

 

 

 

 
அடையாறிலும் இதேபோன்று முகத்துவாரத்தை திறந்து ஆழப்படுத்தும் பணிகளை நடத்த வேண்டும். அதிகப்படியான நீர் திறக்கப்படும் சில நிமிடங்களுக்கு முன் முகத் துவாரத்தை கடற்படை உதவியுடன் பொதுப்பணித்துறையினர் தோண்டுவது வழக்கம்.

ஆனால் இந்த முறை முகத்துவாரப் பகுதிகளில் தோண்டுவதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோட்டை விட்டதால் இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *