இயற்கை முறை கத்திரி சாகுபடி

இயற்கை முறை கத்திரி சாகுபடி பற்றி ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். இதோ, புதுவையில் இருக்கும் பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் இயற்கை முறை கத்திரி சாகுபடி பற்றி வெளியுட்டுள்ள செய்தி.

தட்பவெப்பநிலை மாற்றம்தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக கத்தரி இலையில் எபிலாக்னா வண்டுகள் அதிகமாக இலைகளைக் கடித்து உண்பதால் இலைகளில் பச்சையம் பாதிக்கப்பட்டு ஒளிச்சேர்க்கை நடைபெறுவது தடைபடுகிறது மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுமட்டுமின்றி கத்தரியில் தண்டு துளைப்பான் மற்றும் காய் துளைப்பான் அதிகமாகக் காணப்படுகிறது. மாவுப் பூச்சியும்  காணப்படுகிறது

ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தியும் இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆனால் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையின் மூலம் முக்கியமாக தாவரவியல் முறைகள், உயிரியல் கட்டுப்பாடு முறைகள் மூலமும் இதைக் கட்டுப்படுத்த முடியும் என்கிறார் பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியல் நிபுணர் டாக்டர் விஜயகுமார்.

அவர் சொல்லும் வழிமுறைகள்:

  • ஓர் ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறி அமைக்க வேண்டும். விளக்குப் பொறியில் மெர்குரி புளோரசன்ட் (Mercury florescent light) விளக்குகளைப் பொருத்தி இரவு நேரங்களில் மாலை 6 முதல் இரவு 10 வரை எரிய விட வேண்டும்.
  • அவ்வாறு செய்வதால் தண்டு மற்றும் காய் துளைப்பான் தாய் அந்துபூச்சிகளை முட்டை இடும் முன்பு கவர்ந்து இழுத்து அழிக்க முடியும்.
  • மேலும் ஓர் ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சி பொறிகளை வைப்பதன் மூலம் அந்த இனக்கவர்ச்சி பொறியில் உள்ள குப்பிகளில் உள்ள செக்ஸ் ஹார்மோன்கள் ஆண் அந்துபூச்சிகளை கவர்ந்து இழுத்து அழிக்கும்.
  • இது இல்லாமல் ஓர் ஏக்கருக்கு 5 நீர்ப் பொறிகள் அமைக்கலாம்.
  • ஓர் ஏக்கருக்கு 2 டிரைக்கோடெர்மா கைலோனிஸ் என்ற ஒட்டுண்ணி அட்டைகளை ஓர் ஏக்கரில் கட்டினால் அதிலிருந்து 25 ஆயிரம் குளவிகள் வெளிவந்து தண்டு துளைப்பான் மற்றும் காய் துளைப்பான் முட்டைகளை அழிக்கும்.
  • இதனால் முட்டையில் இருந்து புழு வெளியே வராமல் தடுப்பதோடு, கத்தரி பயிரையும் காப்பாற்றலாம்.
  • முட்டையில் இருந்து வெளியேறும் புழுக்களை அழிக்க 1 லிட்டர் தண்ணீரில் 2 மி.லி. 3 சதவீத வேப்ப எண்ணெய் அதனுடன் 1 கிராம் காதி சோப்பு கலந்து தெளிக்க வேண்டும்.
  • அப்போது வேப்ப எண்ணெய்யில் உள்ள அசாடிரக்தின் என்ற மூலப்பொருள்களின் கசப்புத் தன்மை காரணமாக புழுக்கள் தண்டு துளைக்காமலும் காயைத் துளைக்காமலும் விலகி ஓடிவிடும்.
  • ஒருவேளை புழுக்கள் துளைத்தாலும் குமட்டல் வந்து வாந்தி எடுத்து இறந்துவிடும்.
  • வேப்ப எண்ணெய்யை கத்தரிப் பயிரில் பூப் பூக்கும் தருணத்தில் ஒருமுறையும், பிஞ்சு வைக்கும் தருணத்தில் ஒரு முறையும் தெளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
  • இது போன்று அதிகபட்சமாக இரண்டு தடவைக்கு மேல் வேப்ப எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது.அவ்வாறு பயன்படுத்தினால் கத்தரி பயிரில் மலட்டுத் தன்மை ஏற்பட்டு மகசூல் குறைய நேரிடும்.
  • கத்தரிப் பயிரின் வேரின் அடிபாகத்தில் ஓர் ஏக்கருக்கு 80 முதல் 100 கிலோ தரமான வேப்ப புண்ணாக்கை இட்டு கால் மடிப்பதால் வேப்ப புண்ணாங்கு கசப்புத் தன்மை காரணமாக தண்டு துளைப்பான் கத்தரியின் தண்டில் நுழையாமல் தடுக்கப்படுகிறது.
  • வளர்ந்த புழுக்களைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் பெவேரியா பேசியானா என்ற உயிர் ரக பூஞ்சாண் அல்லது பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ் என்ற உயிர் ரக பாக்டீரிய மருந்தை 1 லிட்டர் நீரில் 2 கிராம் என்ற அளவில் கலந்து ஓசோன் அதிகம் இருக்கக் கூடிய அதிகாலை பொழுதில் பூக்கள் மீது படும்படி தெளிக்க வேண்டும்.
  • இதனால் பூக்கள் மீது நோய் உருவாகி 5 தினங்களில் புழுக்கள் இறக்க நேரிடும். இது சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத முறை.
  • இலையைச் சாப்பிடும் வண்டுகளைக் கட்டுப்படுத்த அதிகாலைப் பொழுதில் சாம்பலை ஓர் ஏக்கருக்கு 12 கிலோ எடுத்து அதை மணலுடன் கலந்து இலை பாகத்தில் தூவ வேண்டும்.
  • இவ்வாறு செய்வதால் சாம்பலில் உள்ள சிலிகா என்ற வேதிப் பொருள்களால் அந்த வண்டுகளின் பற்கள் உடைந்துவிடுகின்றன. வீட்டு சாம்பல், நிலக்கரி சாம்பல், செங்கல் சூளை சாம்பல், நெல் உமி சாம்பல் என்று எந்தச் சாம்பலையும் பயன்படுத்தலாம்.
  • மாவு உறிஞ்சும் பூச்சியைக் கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் போதும்.
  • இல்லையென்றால் வெரிடிசிலியம் லீகானி என்ற உயிர் ரக பூஞ்ஞான மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 4 கிராம் என்ற அளவில் கரைத்து அதிகாலைப் பொழுதில் தெளிப்பதால் மாவுப் பூச்சி மீது நோய் உருவாக்கி பூச்சிகளை இறக்க வைக்க முடியும் என்கிறார் விஜயகுமார்

இது தொடர்பான தொழில்நுட்பங்கள, ஓட்டுண்ணி அட்டைகளும் புதுவையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல்  நிலையத்தில் கிடைக்கும்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *