ஒருங்கிணைந்த பண்ணையில் நல்ல வருமானம்!

ற்றைப்பயிர் சாகுபடி கூடவே கூடாது’ என்பதுதான் நம்மாழ்வார் போன்ற இயற்கை வேளாண் விஞ்ஞானிகளின் பரிந்துரை. பல வகையான பயிர்கள், கால்நடைகள்… என்று பண்ணையம் செய்தால், நஷ்டத்துக்கு வாய்ப்பே இல்லை என்பது அனுபவ விவசாயிகள் பலருடைய ஆலோசனை! இதைத் தெளிவாகப் பின்பற்றி வஞ்சகமில்லாமல் வருமானம் எடுக்கும் விவசாயிகள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே இருக்கும் சதுப்பேரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன்.

சாத்துக்குடி, எலுமிச்சை, மா, மல்லிகை, முல்லை, முள்ளில்லா மூங்கில், தேக்கு ஆகிய பயிர்களோடு… ஆடு, கோழி என கால்நடைகளையும் வளர்க்கிறார், மணிவண்ணன். ஒரு காலை வேளையில், வாஞ்சையோடு ஆடுகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.

“10-ம் வகுப்பு வரைக்கும் படிச்சிட்டு, பெங்களூருல ஒரு கடையில மூணு வருஷம் வேலை பார்த்தேன். அங்க ஓரளவுக்கு எலக்ட்ரீசியன் வேலையைக் கத்துக்கிட்டு, சொந்த ஊருக்கே திரும்பி வந்து எலக்ட்ரிகல் வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டேன். எங்க கிராம சுத்துவட்டாரத்துல எலக்ட்ரீசியன் யாரும் இல்லாததால நல்ல வருமானம். அப்பா கூட சேர்ந்து 4 ஏக்கர்ல விவசாயமும் பார்த்தேன். கல்யாணம் ஆனதும் சொத்தைப் பிரிச்சாங்க. அதுல ரெண்டு ஏக்கர் நிலம் கிடைச்சுது. அதுல மல்லாட்டை (நிலக்கடலை), உளுந்துனு பயிர் செஞ்சுக்கிட்டு இருந்தேன். பெருசா வருமானம் இல்லாட்டியும், ஆர்வத்தால விவசாயத்தை விடாம செய்துக்கிட்டிருந்தேன்.

ஒரு தடவை போளூருக்குப் பக்கத்துல இருக்குற பர்வதமலைக்குப் போயிருந்தப்போ ஒரு தோட்டத்துல ’ரெட் ரோஸ்’ சாகுபடி செய்திருந்தாங்க. அதைப் பார்த்ததும், எனக்கும் ஆசை வந்தது. உடனே, வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர்ல இருந்து ரோஜா நாற்றுகளை வாங்கிட்டு வந்து, 40 சென்ட்ல நட்டேன். அது நல்லா வளர்ந்து தினம் 500 ரூபாய் அளவுக்கு (23 ஆண்டுகளுக்கு முன்பு) வருமானம் கொடுத்தது. அந்த சமயம் என்னோட அண்ணன் அவரோட நிலத்துல வாழை நட்டார். அதனால, பொதுக்கிணறுல தண்ணீர்ப் பற்றாக்குறை வந்துடுச்சு. அதனால, ரோஜா சாகுபடியை விட்டுட்டேன்” என்ற மணிவண்ணன் தொடர்ந்தார்.

வறட்சியைச் சமாளிக்க முல்லை!

“வறட்சியைத்தாங்கி வளர்ற பூக்களைப் பத்தி விசாரிச்சப்போ, முல்லைப்பூ பத்தி சொன்னாங்க. 33 சென்ட் நிலத்துல 300 முல்லைச் செடிகள நடவு செய்தேன். வீட்டுல இருக்குற ஆட்களே பராமரிச்சோம். மாசம் 50 ஆயிரம் ரூபாய்ல இருந்து 60 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைச்சது. அந்த வருமானத்துல ரெண்டு ஏக்கர் நிலம் வாங்கினோம். பிள்ளைகளையும் படிக்க வெச்சு கல்யாணம் செய்து கொடுத்தோம்.

சாத்துக்குடிக்கு ஊடுபயிராக மல்லிகை!

அப்பறம் ஒண்ணரை ஏக்கர்ல பங்கனப்பள்ளி, அல்போன்சா மா ரகங்கள்ல 100 செடிகளை நட்டோம். அதுல 30 செடிகள் பட்டுப்போச்சு. இப்போ 70 மரங்கள் நிக்குது. ஆட்கள் பிரச்னை அதிகமானதால, முல்லைச் செடிகள்ல இருந்து பூவெடுக்குறதை நிறுத்திட்டு, நாற்று உற்பத்திக்காக குச்சிகளை மட்டும் வெட்டி அனுப்புறோம். 40 சென்ட் நிலத்துல தண்டு மூலமா உருவாக்கின சாத்துக்குடியை நட்டு, அதுக்கு இடையில மல்லிகைச் செடிகளை ஊடுபயிரா நட்டுருக்கோம். சாத்துக்குடி ரெண்டரை வருஷத்துலேயே காய்ப்புக்கு வந்திடுச்சு. மல்லிகையிலயும் நல்ல வருமானம் கிடைக்க ஆரம்பிச்சது. 10 சாத்துக்குடிச் செடிகள் பழுதாகிடுச்சு. அந்த இடங்கள்ல எலுமிச்சைச் செடிகளை நடவு செய்துட்டேன். இப்ப எலுமிச்சையெல்லாம் 5 வருஷத்து மரமா நிக்குது.

தோட்டத்துல திருட்டு அதிகமா இருந்ததால, 8 அடி உயரத்துக்கு நிலத்தைச் சுத்தி வேலி போட்டோம். வேலியை ஒட்டி 1,000 தேக்கு கன்னுகளை நட்டுருக்கோம். 4 வருஷம், 3 வருஷம், 2 வருஷ மரங்களா இருக்குது” என்று மணிவண்ணன் நிறுத்த, தொடர்ந்தார் அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி.

2 கோழியிலிருந்து 200 கோழிகள்!

“வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற இடத்துல ஆடு வளர்க்கலாம்னு 19 தலைச்சேரி பெட்டை ஆடுகள், 1 போயர் கிடா வாங்கிட்டு வந்து பரண் அமைச்சு வளர்த்தோம். 40 மாசம் கடந்த நிலையில, 48 ஆடுகளா பெருகி நிக்குது. தாதுஉப்பு கொடுக்காததால 24 குட்டிகள் பிறந்து நாலு மாசத்துலயே இறந்திடுச்சு. சரியா பராமரிச்சிருந்தா இழப்பைத் தவிர்த்திருக்கலாம்.

ஆட்டுத்தீவனத்துக்காக கோ-4, வேலிமசால் வளர்க்கிறோம். ஒவ்வொரு ஆட்டுக்கும் தினமும் 3 கிலோ பசுந்தீவனமும், 60 கிராம் அடர்தீவனமும் கொடுக்கிறோம். தினமும் 5 கிராம் தாதுஉப்பையும், 10 கிராம் சமையல்உப்பையும் தண்ணில கலந்துகுடிக்கக் கொடுப்போம்.
தோட்டத்துக்கே குடிவந்த பிறகு, ரெண்டு கோழி வாங்கி வளர்த்தோம். அந்தக்கோழியில இருந்து கிடைச்ச முட்டைகள்ல வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்தினது போக மீதியை அடை வைச்சு, 75 பெட்டைகள், 10 சேவல்கள்னு பெருக்கினோம். 6 மாசத்துக்கு முன்ன இன்குபேட்டர் வாங்கினோம். அதுல 200 முட்டைகளைப் பொரிக்க வெச்சதுல பாதி அளவுக்குத்தான் பொரிஞ்சுது. அந்தக் குஞ்சுகளுக்கு ரெண்டு மாசம் வயசாகுது. அதுக்கடுத்து பொரிச்ச குஞ்சுகள் புரூடர்ல இருக்கு. இப்போ 100 முட்டைகளை இன்குபேட்டர்ல வெச்சிருக்கோம்” என்று கால்நடைக் கணக்குகளைச் கச்சிதமாகச் சொன்னார் தமிழ்ச்செல்வி.

ஆட்டு எரு மட்டும்தான் உரம்!

தொடர்ந்த மணிவண்ணன், “வருஷத்துக்கு ரெண்டு முறை ஆட்டு எருவைத்தான் சாத்துக்குடிக்கும், பூஞ்செடிகளுக்கும் உரமா கொடுக்கிறோம். ஒவ்வொரு தடவையும் ஒரு சாத்துக்குடி மரத்துக்கு 10 கிலோ அளவுலயும், பூச்செடிகளுக்கு ஒரு கிலோ அளவுலயும் கொட்டிடுவோம். கோழிகளை மேய விடும்போது எருவைக் கிளறி விட்டு மண்ணோடு மண்ணா ஆக்கிடும். சாத்துக்குடிக்கு பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கிறதில்ல. பூச்செடிகளுக்கு மட்டும்தான் ரசாயனப் பூச்சிக்கொல்லி தெளிக்கிறோம். இயற்கையான முறையிலேயே பூச்சிகளை விரட்ட முடியும்ங்கிற தகவல் தெரியும். ஆனா, அதை இன்னும் செயல்படுத்தி பார்க்கல. அடுத்து, மா மரங்களுக்கு தனியா எந்தப் பராமரிப்பும் செய்றதில்ல.

மொத்தம் இருக்குற நாலு ஏக்கர் நிலத்துல ஒன்றரை ஏக்கர்ல மா; 40 சென்ட்ல சாத்துக்குடி, எலுமிச்சை, மல்லிகைப்பூ; 34 சென்ட்ல முல்லை; 65 சென்ட்ல பசுந்தீவனம்; 25 சென்ட்ல முள்ளில்லா மூங்கில்; 16 சென்ட்ல வீடு, ஆட்டுக்கொட்டகை, கோழிக்கொட்டகை இருக்கு. இப்போ தனியா, 30 சென்ட்ல சாத்துக்குடியோட மல்லியை நட்டு வெச்சிருக்கேன். 40 சென்ட் நிலத்தை மல்லாட்டைப் போடுறதுக்காக விட்டு வைச்சிருக்கேன்” என்றவர், வருமானம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

“70 மா மரங்களையும் வருஷத்துக்கு 15 ஆயிரம் ரூபாய்னு மூணு வருஷத்துக்கு 45 ஆயிரம் ரூபாய்க்குக் குத்தகைக்கு விட்டிருக்கேன். 40 சென்ட்ல 40 சாத்துக்குடி மரங்கள் இருக்கு. ஒவ்வொரு மரத்துலயும் சராசரியா 120 கிலோ வீதம், 40 மரத்துல இருந்து 4 ஆயிரத்து 800 கிலோ காய் கிடைக்கும். சராசரியா கிலோ 30 ரூபாய்னு விற்பனை செய்தாலே… ஒரு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய். ஒரு எலுமிச்சை மரத்துல 1,000 காய்கள் வீதம், 10 எலுமிச்சை மரங்கள்ல இருந்து 10 ஆயிரம் காய்கள் கிடைக்குது. ஒரு காய் சராசரியா ரெண்டு ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா 20 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. சாத்துக்குடி, எலுமிச்சை ரெண்டுலயும் செலவு போக… ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கையில நிக்கும்.

ஊடுபயிரா இருக்குற 500 மல்லி செடியில் இருந்து தினமும் 3 கிலோ முதல் 12 கிலோ வரைக்கும் பூ கிடைக்கும். சராசரியா தினம் 5 கிலோனு வெச்சுக்கிட்டா, மாசத்துக்கு 150 கிலோ. சராசரி விலையா கிலோவுக்கு 100 ரூபாய்னு வெச்சுக்கிட்டா 15 ஆயிரம் ரூபாய். இதுல, பறிப்பு, பூச்சிக்கொல்லிக்கு 6 ஆயிரம் ரூபாய் செலவு போக 9 ஆயிரம் ரூபாய் லாபம். ஒரு வருஷத்துக்கு சராசரியா 72 ஆயிரம் ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்கும் (4 மாதங்களுக்கு மல்லிப்பூ பறிப்பு இருக்காது). 34 சென்ட் நிலத்துல இருக்குற முல்லைச் செடிக் குச்சிகளை நாற்று உற்பத்திக்கு விற்பனை செய்றது மூலமா, வருஷத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல செலவு போக 50 ஆயிரம் ரூபாய் லாபம்” என்ற மணிவண்ணன் நிறைவாக,

“ஆடுகளை இதுவரைக்கும் விற்பனை செய்யல. அடுத்த வருஷத்துல இருந்துதான் விற்பனை செய்யலாம்னு இருக்கேன். தற்சமயம் 26 பெட்டை ஆடுகள் இருக்கு. ஒரு ஆடு 2 வருடங்களில், 3 முறை குட்டி போடும். ஒவ்வொரு முறையும் 2 குட்டிகள் வீதம் 2 ஆண்டுகளில் 6 குட்டிகள் கிடைக்கும். 26 ஆடுகள் மூலமா, ஒரு வருஷத்துக்கு 78 குட்டிகள் கிடைக்கும். குட்டிகள் வீதம் அதை 6 மாதம் வளர்த்து விற்பனை செய்தா ஒரு ஆடு 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.

வருஷத்துக்கு 1,500 நாட்டுக்கோழிகளை உருவாக்கி, நாலு மாசத்துக்கு வளர்த்து விற்பனை செய்யலாம்னு இருக்கேன். நாலு மாசம் வளர்க்கும்போது, ஒரு கோழி முக்கால் கிலோவுல இருந்து ஒண்ணேகால் கிலோ வரை எடை வரும். ஒரு கிலோ உயிர் எடைக்கு 200 ரூபாய் கிடைக்கும்.

பயிர்களைப் பொறுத்தவரைக்கும் கிட்டத்தட்ட மூணு லட்ச ரூபாய்க்கு மேல வருமானம் வருது. கால்நடைகள்லயும் எதிர்பார்த்தபடி விற்பனை அமைஞ்சிட்டா வருஷத்துக்கு 7 லட்சம் ரூபாய்க்கு மேல லாபம் எடுத்துடுவேன்” என்று சொல்லி சந்தோஷமாக விடைகொடுத்தார்.

வாஸ்துக்கோழி!

நாட்டுக்கோழிகளுடன் சுற்றித்திருந்த அழகுக்கோழிகளை பற்றி பேசிய தமிழ்செல்வி, “இந்த வெள்ளைக் கோழிகளுக்கு வாஸ்துக்கோழினு பேரு. பார்க்குறதுக்கு அழகா இருக்கும். வாஸ்துப்பிரச்னை இருக்குற வீட்டுல இந்தக் கோழியை வளர்த்தா பிரச்னை தீரும்னு சிலர் சொல்றாங்க.

இதே மாதிரி மயில் கழுத்துக்கோழினு ஒண்ணு இருக்கு. இது பார்க்குறதுக்கு மயில் மாதிரியான நிறத்துல லேசான கொண்டையோட இருக்கும். இந்தக் கோழிகள் ஜோடி ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகுது” என்றார்.

மழைக்கால நடவு!

சாத்துக்குடி மற்றும் மல்லிகைச் செடி நடவு பற்றிப் பேசிய மணிவண்ணன், “சாத்துக்குடி, மல்லி இரண்டுக்குமே புரட்டாசி முதல் கார்த்திகை வரை உள்ள பட்டம் நடவுக்கு ஏத்தது. நிலத்தை களை நீங்கும் அளவுக்கு உழவு ஓட்டி வரிசைக்குவரிசை
20 அடி, செடிக்குச்செடி 18 அடி இடைவெளியில சாத்துக்குடிச் செடிகளை நடவு செய்யலாம். இரண்டு சாத்துக்குடிச் செடிகளுக்கு இடையில் நான்கு அடி இடைவெளியில மல்லிகைச் செடிகளை நடவு செய்யணும்.

சாத்துக்குடிச் செடிகளை நடவு செய்ய 2 அடி நீள, அகல, ஆழத்தில குழி எடுக்கணும். மல்லிகைச் செடிகளுக்கு ஒரு அடி நீள, அகல, ஆழத்துல குழி எடுத்தாலே போதுமானது. குழியை ஒரு வாரம் ஆறப்போட்டு, ஒரு கிலோ அளவுக்கு ஆட்டுச்சாணத்தையும், மேல் மண்ணையும் தள்ளி செடிகளை நடவு செய்யணும். பருவமழையிலேயே செடிகள் வேர் பிடிச்சு, துளிர்த்து வந்து விடும்.’’

15 ஆண்டுகளில் ரூ50 லட்சம்!

வேலி ஓர தேக்கு மற்றும் மூங்கில் பற்றிப் பேசிய மணிவண்ணன், “1,000 தேக்குக் கன்னையும், வளர்த்து மரமாக்கினால், 15 முதல் 20 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். ஒரு மரம் சராசரியாக 5 ஆயிரம் ரூபாய் வீதம் விற்பனை செய்தா 50 லட்ச ரூபாய் கிடைக்கும். தண்ணீர் தேங்கி களை அதிகமாக முளைக்கும் 25 சென்ட் நிலத்தில முள்ளில்லா மூங்கில் இருக்கு. இதை 10 ஆண்டுகள் வளர்த்து ஒட்டு மொத்தமாக விற்பனை செய்தா 100 டன் மூங்கில் கிடைக்கும். ஒரு டன் 4 ஆயிரம் ரூபாய் வீதம் விற்பனை செய்தா 4 லட்ச ரூபாய் கிடைக்கும்” என்கிறார்.

தொடர்புக்கு,
மணிவண்ணன்,
செல்போன்: 09361053327

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *