பக்க விளைவுகள் ஏற்படுத்தாத தாவரப் பூச்சிக் கொல்லிகள்

குறைந்த பரப்பளவு நிலத்தில், அதிக விளைச்சல் காண வேண்டும் என்ற ஆவல் தான் பசுமைப் புரட்சி திட்டங்களுக்கு வித்திட்டது. அதற்காகப் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள், ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளால், மனித இனம் பெருமளவுக்கு பாதிப்புகளை சந்திக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்களின் பயன்பாட்டால் அந்த ரசாயனங்கள் மனிதனின் உடலில் புகுந்து பல்வேறு நோய்களுக்கும், சுகாதாரக் கேடுகளுக்கும், பக்க விளைவுகளுக்கும் காரணமாகி விடுகின்றன.

உதாரணமாக தென்னை மரத்தில் ஏற்படும் பூச்சித் தாக்குதல்களை ஒழிக்க மோனோ குரோட்டோபாஸ், கார்போசல்பான் போன்ற மருந்துகளை தென்னையின் வேர்கள் மூலம் செலுத்தினர். இந்த மருந்துகளின் ரசாயனங்கள் இளநீரில் காணப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன்பிறகுதான் தென்னை விவசாயிகள் விழித்துக் கொள்ளத் தொடங்கினர்.

வேப்பங் கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் அசாடிராக்டின் போன்ற தாவரப் பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்த தற்போது தொடங்கியுள்ளனர்.

தாவரப் பூச்சிக் கொல்லிகள் கிராமங்களில் கிடைக்கும் தாவரங்களான ஆடாதோடா, நொச்சி, எருக்கு, வேம்பு, சோற்றுக் கற்றாழை, எட்டிக் கொட்டை போன்றவற்றைக் கொண்டு, வேக வைக்கும் முறையிலும், ஊறல் முறையிலும் தயாரிக்கப்படுகின்றன.

ஊறல் முறை:

நொச்சி, ஆடாதோடா, வேம்பு, எருக்கன், பீச்சங்கு (உண்ணி முள்), போன்றவற்றின் இலைகள் 2 கிலோ, எட்டிக் கொட்டை 2 கிலோ ஆகியவற்றை இடித்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.

அவை மூழ்கும் அளவுக்கு 12 லிட்டர் மாட்டு சிறுநீர், 3 லிட்டர் சாணக் கரைசல் ஆகியவற்றில் 7 முதல் 15 நாள்கள் வரை ஊறவிட வேண்டும். இலைகள் கரைந்து கூழ் ஆகிவிடும். இதில் ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களில் தெளிக்கலாம்.

வேக வைக்கும் முறை:

மேற்கண்ட இலைகள், எட்டிக் கொட்டை தலா 2 கிலோ எடுத்து பாத்திரத்தில் இட்டு, 15 லிட்டர் நீரை ஊற்றி 2 முதல் 3 மணி நேரம் வேக வைக்க வேண்டும். வெந்தபின் சாற்றை வடித்து எடுக்கவேண்டும்.

ஆறியபின் அதில், ஒரு படி மஞ்சள் தூள் கலந்து 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதன்மூலம் கிடைக்கும் வடிசாற்றில், 100 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம்.

பூசண நோய் கட்டுப்பாட்டுக்கு மேற்கண்ட சாறில் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 500 கிராம் முதல் 1 கிலோ வரை கலந்து தெளிக்கலாம்.

நுண்ணுயிர் இலைக் கருகல் நோய்களுக்கு, சோற்றுக் கற்றாழை 3.5 கிலோ, இஞ்சி 200 கிராம், இவற்றுடன் புதினா அல்லது சவுக்கு இலை 2 கிலோ சேர்த்து மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். ஆற வைத்து வடித்த சாற்றுடன் மஞ்சள் தூள் ஒரு படி கலந்து, சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 500 கிராம் அல்லது ஒரு கிலோ கலந்து தெளிக்கலாம்.

வேப்பங்கொட்டை சாறு சிறந்த இயற்கைத் தாவர பூச்சிக் கொல்லி மருந்தாக பயன்படுகிறது. 5 கிலோ வேப்பங் கொட்டையை உரலில் இட்டு இடித்து, சல்லி சாக்கு அல்லது மெல்லிய துணியில் கட்டி, 10 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சாற்றினை பிழிந்து எடுத்து வடிகட்டி, 190 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.

வேறு பல இயற்கை பூச்சி விரடிகளை இங்கே படித்து தெரிந்து கொள்ளலாம்

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *