வறட்சியிலும் அதிக விளைச்சல் பாரம்பரிய நெல் கருடன் சம்பா சாதனை

புதுக்கோட்டையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியிலும் திரட்சியாக விளைந் துள்ள பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான கருடன் சம்பா சனிக்கிழமை அறுவடை செய்யப்பட்டது. இது ஏக்கருக்கு 3,150 கிலோ விளைச்சலை தந்து விவசாயிகளை வியப்பில் ஆழ்த்தியது.

நபார்டு வங்கியின் புதுமைப் பண்ணைத் திட்டத்தின்கீழ் புதுக் கோட்டை ரோஸ் தொண்டு நிறுவனத்தினர் விவசாயிகள் மூலம் உடல் மற்றும் சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத, நோய் எதிர்ப்புசக்தி மிகுந்த, அதேசமயம் அரிதாகிக் கொண்டிருக்கும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு வருகின்றனர்.

தங்கச்சம்பா, சொர்ண முசிறி…

இத்திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் மாப்பிள்ளைச் சம்பா, கருடன் சம்பா, பனங்காட்டு குடவாழை, பூங்கார், சிவப்புக் கவுணி, கருங் குறுவை, கருத்தக் கார், சண்டி கார், குறுவைக் களஞ்சியம், தங்கச்சம்பா, தூயமல்லி, இலுப்பைப்பூ சம்பா, மிளகி, மஞ்சள் பொன்னி, கைவிரைச் சம்பா, செம்புளிச் சம்பா, கிச்சடி சம்பா, சொர்ண முசிறி, கருப்புக் கவுணி, அறுபதாம் குறுவை, சம்பா மோசனம், கந்தசாளா, சீரகச் சம்பா, காட்டுயானம், சிவப்புக் குருவிக்கார் உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் மருதாந் தளையில் இயற்கை விவசாயி கணேசன் கடந்த ஆண்டு செப்.16-ம் தேதி சாகுபடி மேற்கொண்ட கருடன் சம்பா நெல் சனிக்கிழமை அறுவடை செய்யப்பட்டது.

வியப்பு ஏற்படுத்திய விளைச்சல்

“கருடன் சம்பா சாகுபடி செய்த கணேசனின் வயலில் ஏக்கருக்கு 3,150 கிலோ நெல்லும், 6,300 கிலோ வைக் கோலும் கிடைத்துள்ளன. தற்போது பயிரிடப்படும் சி.ஆர்., கல்சர் போன்ற ரகங்கள் ஏக்கருக்கு 1,800 கிலோ முதல் 2,000 கிலோ வரை நெல் விளைச்சலைத் தரும் நிலையில், கருடன் சம்பா தந்துள்ள விளைச்சல் 40 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வறட்சியைத் தாங்கி வளர்ந்து இத்தகைய விளைச்சலைக் கொடுத் திருப்பது வியப்பாக உள்ளது” என்றார் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலர் சோமசுந்தரம்.

இது குறித்து ரோஸ் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஆதப்பன் கூறியது: “பாரம்பரிய நெல் மற்றும் சிறு தானியங்களை முன்னோர்கள் பயன்படுத்தியதால் நோயின்றி நீண்ட நாள் வாழ்ந்தனர். அதன்பிறகு வேளாண் துறையில் ஏற்பட்ட மாற்றம் நோயின் தாக்கத்தை அதிகரிக்கச் செய் துள்ளது. எனவே, வறட்சியைத் தாங்கி யும் எதிர்கால தலைமுறையினர் நோயின்றி வாழும் சூழலையும் உருவாக்கக்கூடிய பாரம்பரிய சாகுபடி முறைக்கு விவசாயிகள் மாற வேண்டும்.

விதைக்கு விதை திட்டம்

30 ஏக்கரில் பரப்பளவில் இயற்கை முறைகளைக் கடைப்பிடித்து சாகுபடி செய்யப்பட்ட இத்தகைய பாரம்பரிய நெல் ரகங்கள் தற்போது 150 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது.

மேலும், விதை பரவலாக்கும் விதமாக ரொக்கம் ஏதும் வாங்காமல் விதைக்கு விதை திட்டத்தில் விவசாயிகளுக்கு விதை வழங்கப்படுகிறது. விதை மற்றும் இயற்கை சாகுபடி முறைகள் குறித்து அறிந்துகொள்ள 09842093143 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “வறட்சியிலும் அதிக விளைச்சல் பாரம்பரிய நெல் கருடன் சம்பா சாதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *