வேம்பு மூலம் பூச்சி கட்டுப்பாடு

பயிர் களை நோய்த் தாக்குதலில் இருந்து காத்திடவும், சுற்றுப்புறச் சூழலை மாசில் இருந்து பாதுகாத்திடவும் தாவர பூச்சிக்கொல்லி மருந்துகளையே பயன்படுத்த வேண்டும் என்று புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் ஷாஜ ஹான், குடுமியான்மலை உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குநர் சாந்தி, வேளாண் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது:

  • வேம்பின் அனைத்து பாகங்களும் பலன் தரும்.
  • வேப்பந்தழையை உரமாகவும், பூச்சி மருந்தாகவும், வேப்பவித்துக் கரைசலை பூச்சிக்கொல்லியாகவும், வேப்பம் புண்ணாக்கை உரமாகவும், யூரியா போன்ற ரசாயன உரத்துடன் கலந்து இட வேண்டும். இதனால் யூரியாவின் பயன் அதிகரிக்கும்.
  • வேப்ப எண்ணெயை தனியாகவும், இதர பூச்சி மருந்துகளுடன் கலந்தும் பூச்சி நாசினியாக பயன்படுத்தலாம்.
  • வேப்பிலையில் தழைச்சத்து 2.5%, மணிச்சத்து 0.6% , சாம்பல் சத்து 2.0%  அளவில் உள்ளன. இதனை நன்செய் நிலங்களுக்கு இடலாம்.
  • வேப்பந்தழை இட்ட நிலத்தில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுவின் தாக்குதல் வெகுவாகக் குறைந்துவிடும்.
  • உலர்ந்த வேப்பிலைகளை நெல், சோளம் போன்ற தானியங்களுடன் கலந்து வைத்து வண்டுகள், அந்துப்பூச்சிகள் மற்றும் துளைப்பான்களின் தாக்குதலிலிருந்து தடுக்கலாம்.
  • 10 கிலோ வேப்பங்கொட்டையை நன்கு தூளாக்கி 20 லிட்டர் நீரில் கரைத்து ஒரு நாள் வைத்திருந்து வடிகட்டி 200 லிட்டர் நீர் சேர்த்து ஒட்டும் திரவம் 200 மில்லி அல்லது 100 கிராம் காதிபார் சோப்பு சேர்த்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். வேப்பங்கொட்டைக் கரைசல் தெளிப்பதன் மூலம் பயிர்களில் தோன்றும் கம்பளிப் புழுக்கள், அசுவினிகள், தத்துப்பூச்சிகள், புகையான், இலைச்சுருட்டுப் புழு, ஆணைக்கொம்பன், கதிர்நாவாய்ப் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். பயிர்களைத் தாக்கும் சாம்பல் நோய், மஞ்சள் வைரஸ் நோய் முதலியவைகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய்க் கரைசல் பயன்படும்.
  • 3 லிட்டர் வேப்பெண்ணெய் உடன் 200 மில்லி ஒட்டும் திரவம் அல்லது காதி துணி சோப் நன்றாகக் கலந்து 200 லிட்டர் நீர் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
  • வேப்பம் புண்ணாக்கில் தழைச்சத்து 5.2%, மணிச்சத்து 1.1% , சாம்பல் சத்து 1.5%  உள்ளன. வேப்பம் புண்ணாக்கை யூரியாவுடன் 1 : 5 என்ற விகிதத்தில் (அதாவது 1 பங்கு வேப்பம் புண்ணாக்கு, 5 பங்கு யூரியா) கலந்து இட்டால் யூரியாவின் சத்து, பயிருக்கு நீண்ட நாட்கள் கிடைக்க உதவும். தழைச்சத்து வீணாவதும் குறையும்.
  • நொச்சித்தழை 5 கிலோ மற்றும் வேப்பந்தழை 5 கிலோ ஆகியவற்றை ஒரு பானை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனை கூழாக்கி ஓர் இரவு வைத்திருந்த பின்னர் வடிகட்டி அதனை 100 லிட்டர் நீரில் கலந்து 1 ஏக்கர் அளவில் தெளித்து நெற்பயிரில் இலைச்சுருட்டுப் புழு, குருத்துப் புழு, மற்றும் கதிர்நாவாய்ப் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். நொச்சி மற்றும் வேப்பந்தழையினை அரைக்க வசதியுள்ள இடங்களில் கொதிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை.
  • வேம்பில் அசாடிரக்டின், நிம்பிடின் போன்ற ரசாயன பொருட்கள் இருப்பதால் பூச்சி  நோய் தடுப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது என்றனர்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “வேம்பு மூலம் பூச்சி கட்டுப்பாடு

Leave a Reply to sundar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *