ரசாயன உரமா விஷமா?

முதன் முதலாக ரசாயன உரங்கள் அறிமுகப் படுத்தப்பட்டபோது விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

தொழு உரம், தழையுரம், சாண உரம் என்று தேடியலைய வேண்டியதில்லை. காசைக் கொடுத்தால் விதவிதமான ரசாயன உர மூட்டைகள் வீட்டில் வந்து இறங்கிவிடும். எந்தப் பயிருக்கு, எந்த உரத்தை எவ்வளவு இட வேண்டும் என்பதையெல்லாம் விவசாயிகளுக்குப் பாடம் நடத்தின உர நிறுவனங்கள்.

முதல் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு விளைச்சல் அபரிமிதமாகத்தான் இருந்தது. மேலும் மேலும் அதிக அளவில் ரசாயன உரங்களைப் போட்டால் இன்னும் அதிக அளவில் விளைச்சல் வருமென்று எண்ணிக் கடன்பட்டுக்கூட ரசாயன உரங்களை வாங்கி வயல்களில் கொட்டினார்கள். அடுத்து விளைச்சல் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. மண்ணின் இயற்கை வளம் குறைந்துபோயிற்று. வயலில் போட்ட முதலைக்கூட மீட்க முடியாமல் விவசாயிகள் இழப்புக்கு ஆளானார்கள். உலகம் முழுவதிலும் இதே மாதிரியான பிரச்சினைகள் தலைதூக்கின.

இயற்கை உரங்களின் நன்மைகள்

உலகெங்கிலும் உள்ள விவசாய விஞ்ஞானிகள் செயற்கையான ரசாயன உரங்களால் ஏற்பட்ட விளைவுகளைத் தீவிரமாக ஆராயத் தொடங்கினார்கள். பிரான்ஸில் உள்ள இன்செர்ம் எனும் உடல் நல மருத்துவ ஆய்வு நிலையம் தொழு உரம், இலையுரம் போன்ற இயற்கையான நைட்ரஜன் அடங்கிய உரங்களைப் பயிர்களுக்கு வழங்குவதால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிடுகிறது.

லெட்டூஸ் செடிகளுக்கு இயற்கை உரங்களை இடும்போது அவற்றின் எடை, விளைச்சலின் அளவு மற்றும் புரத உள்ளடக்கம் ஆகியவை குறைவதில்லை. ஆனால், அவற்றில் தீமை செய்கிற நைட்ரேட் எச்சங்களின் அளவு மிகவும் குறைந்துவிடுகிறது. இதற்கு மாறாக, செயற்கை ரசாயன உரங்கள் ஊட்டி வளர்க்கப்பட்ட லெட்டூஸ் இலைகளில் உட்கவரப்படாத நைட்ரேட் சத்துகள் அதிக அளவில் போய்த் தேங்கிவிடுகின்றன.

பிரான்ஸ் ஆய்வர்கள் ஆமணக்குப் பிண்ணாக்கை ஒரு பாத்தியில் உள்ள லெட்டூஸ் செடிகளுக்கு இட்டார்கள். அதே அளவான இன்னொரு பாத்தியிலுள்ள செடிகளுக்கு அதே அளவு நைட்ரஜன் சத்தைத் தருகிற அளவிலான அம்மோனியம் நைட்ரேட், சோடியம் நைட்ரேட் ஆகிய ரசாயன உரங்களைப் போட்டார்கள். இயற்கை உரத்தை உண்டு வளர்ந்த செடிகளில் இருந்ததைவிட இரண்டு மூன்று மடங்கு அதிகமான நைட்ரேட் எச்சங்கள் செயற்கை உரமிடப்பட்ட செடிகளின் இலைகளில் காணப்பட்டன.

குடிநீரில் நைட்ரேட் நச்சு

வயல்களில் தூவப்படும் ரசாயன உரங்களின் கணிசமான விகிதம் பாசன நீரில் கரைந்து அடித்துச் செல்லப்பட்டு வெளியேறி, நிலத்தடி நீரிலும் அருகிலுள்ள நீர் நிலைகளிலும் போய்ச் சேர்ந்துவிடுகிறது. இதன் காரணமாக அவற்றில் நைட்ரேட் செறிவு பாதுகாப்பான அளவைவிடக் கூடுதலாகிவிடுகிறது. பிரான்ஸின் குடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்புத் துறை அதிகாரிகளுக்கு இது ஒரு பெரிய பிரச்சினை. எந்த ஒரு ஊரிலிருந்தும் குடிநீரில் நைட்ரேட் நச்சு அளவுக்கு மீறிப் போய்விட்டதாக நுகர்வோர் அமைப்புகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வழக்குத் தொடர ஆயத்தமாக இருக்கிறார்கள்.

நீர்நிலைகளில் ரசாயனங்கள் கலப்பது நீரை மாசுபடுத்தி,(Water runoff) அதில் வாழும் உயிரினங்களுக்கும் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனின் செறிவையும் குறைத்துவிடுகிறது. நீர்த்தாவரங்களும் மீன்களும் இதனால் பாதிக்கப்படுகின்றன. அந்த நீரைப் பருகும் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையால் உண்டாகும் நீலநிறக் குழந்தை நோய் மற்றும் ரத்த சோகைக் கோளாறுகள் தோன்றுகின்றன.

Courtesy: Hindu
Courtesy: Hindu

ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்சிஜனை உட்கவர்ந்துகொண்டு அதை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச்சென்று விநியோகிக்கிறது. ரத்தத்தில் நைட்ரேட்டுகள் புகுந்துவிட்டால் ஹீமோகு ளோபின் மெட்ஹீமோகுளோபினாக மாற்றப்படும். அதற்கு ஆக்சிஜனுடன் இணைகிற திறன் இராது. எனவே, உடலுக்குள் ஆக்சிஜன் விநியோகம் பாதிக்கப்பட்டு, உறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் போகும்.

நீலநிற ரத்தம்

நல்ல ரத்தமுள்ள குழந்தைகள் ரோஜா நிற உடலுடன் இருக்கும். மெட்ஹீமோகுளோபின் ரத்தத்தில் அதிகமாகிப்போனால், அவை நீல நிறமுள்ளதாகிவிடும். இதயம் சரியாகச் செயல்படாதபோதும் இதே போன்ற கோளாறு ஏற்படும். நைட்ரேட்டுகள் ஜீரண மண்டலத்தில் புகுமானால், அவை நைட்ரோசமைன்கள் என்ற கூட்டுப்பொருளாக மாறும். அது உடலில் புற்றுநோயை உண்டாக்கக்கூடும். ஐரோப்பிய பொதுச்சந்தை அமைப்பு, குடிநீரில் லிட்டருக்கு 50 மில்லி கிராமுக்கு மேல் நைட்ரேட்டுகள் இருக்கக் கூடாது என்று விதித்திருக்கிறது. பிரிட்டனில் இந்த உச்சவரம்பு 100 மில்லி கிராமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயலுக்கு இடப்படும் நைட்ரேட் உரத்தில் எவ்வளவு விகிதம் தாவரங்களால் உட்கவரப்படுகிறது, அது எந்த வகையில் உட்கவரப்படுகிறது, மீதமுள்ள விகிதம் என்னவாகிறது, அது நீர்நிலைகளிலும் நிலத்தடி நீரிலும் எந்த அளவில், எவ்வாறான காரணிகளின் பங்களிப்புடன் கலக்கிறது, நைட்ரேட்டுகள் விஷமற்ற கூறுகளாகச் சிதைய எவ்வளவு காலம் பிடிக்கிறது என்பன போன்ற பல விஷயங்கள் இன்னமும் உறுதியாக விளங்கிக்கொள்ளப்படவில்லை. நைட்ரஜன் சுழல் என்ற தாவரவியல் நிகழ்வும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படவில்லை.

தாவரவியல் முறையில் நைட்ரஜனை உட்கவர்கிற பயறு, உளுந்து, மொச்சை போன்ற இரு வித்திலைப் பயிர்கள் காற்றிலுள்ள நைட்ரஜனை உட்கவர்ந்து, தமது வேர் முடிச்சுகளில் சேமிக்கின்றன.

மண்ணில் நைட்ரஜன் சத்தைக் கூட்டுவதில் இது மற்றெல்லா முறைகளையும் விடப் பத்திரமானது. ஆனால், விவசாயிகளுக்கு ரசாயன உரங்களைத் தூவுவதுதான் சுலபமாகத் தோன்றுகிறது. பிரான்ஸ் ஆய்வகம் சம அளவிலான ஆறு பாத்திகளில் வெவ்வேறு ரசாயன உரங்களையும், ஆமணக்குப் பிண்ணாக்கு போன்ற இயற்கை உரங்களையும் இட்டு லெட்டூஸ்களை வளர்த்தது. ஏழாவதாக ஒரு பாத்தியில், எந்த உரமும் இடாமல் லெட்டூஸ் வளர்க்கப்பட்டது.

எல்லாப் பாத்திகளிலும் அறுவடைக்குப் பின் விளைச்சல் அளவு, பயிரில் புரதச் சத்து அளவு, கனிமச் சத்துகளின் அளவு மற்றும் வகைகள், உருளை வடிவத்தில் கிடைத்த லெட்டூஸ்களின் எண்ணிக்கை, பயன்படாத சக்கைப் பகுதியின் அளவு போன்ற அம்சங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தன. ஆனால், செடிகளில் நைட்ரேட் எச்சங்களின் அளவு குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டன. உரமிடப்படாத செடிகளில் மில்லியனில் 159 பங்கு என்ற அளவில் நைட்ரேட்டுகள் இருந்தன.

ஹெக்டேருக்கு 120 கிலோ அளவில் பிண்ணாக்கு ஊட்டப்பட்ட லெட்டூஸ்களில் மில்லியனுக்கு 319 பங்கு என்ற அளவிலும் ஹெக்டேருக்கு 200 கிலோ அளவில் பிண்ணாக்கு ஊட்டப்பட்ட லெட்டூஸ்களில் மில்லியனுக்கு 217 பங்கு என்ற அளவிலும் நைட்ரேட்டுகள் தென்பட்டன.

அம்மோனியம் நைட்ரேட் குறைவாகப் போடப்பட்ட லெட்டூஸ்களில் நைட்ரேட் அளவு மில்லியனுக்கு 534 பங்கு என்ற அளவிலும் உரம் அதிகமாகப் போடப்பட்ட லெட்டூஸ்களில் மில்லியனுக்கு 802 பங்கு என்ற அளவிலும் இருந்தது. சோடியம் நைட்ரேட்டைக் குறைவாகப் போட்ட பாத்திகளில் விளைந்த லெட்டூஸ்களில் நைட்ரேட் அளவு மில்லியனுக்கு 698 பங்காகவும், அதிகமாகப் போடப்பட்ட பாத்திகளில் விளைந்த லெட்டூஸ்களில் 991 பங்காகவும் இருந்தது.

இவ்வாறு இயற்கை உரங்களைப் பயன்படுத்தினால் விளைச்சல் குறைந்துவிடாது; பயிர்களில் நச்சுக் கூட்டுப்பொருள்களின் அளவும் குறைவாக உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

– கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).

 நன்றி:ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *