எள் அறுவடை நேர்த்தி முறைகள்

எள் அறுவடை நேர்த்தி செய்யும் முறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். வேளாண்மை துணை இயக்குனர் (வணிகம்) தனவேல், விருத்தாசலம் கோட்ட வேளாண்மை அலுவலர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  • எண்ணெய்வித்து பயிரான எள், எண்ணெய் அளவு குறையாமலும் தரம் கெடாமலும் காத்திட வேண்டும். எள் பயிர் அறுவடையின் போது செடியின் கீழ் பகுதியிலுள்ள இலைகளில் 25 சதவீதம் இலைகள் உதிர்ந்தும், மேலே உள்ள இலைகள் மற்றும் தண்டுப் பகுதிகள் மஞ்சள் நிறமாக மாறியிருக்க வேண்டும்.
  • எள் காய்கள் பாதியளவு மஞ்சள் நிறம் அடைந்து விட்டால் பயிர் அறுவடை செய்திட ஏற்ற பருவமாகும்.
  • எள் பயிரின் கீழ் பகுதியிலிருந்து 10வது காயை உடைத்துப் பார்த்தால் உள்ளே இருக்கும் விதைகள் கருப்பு நிறமாக மாறியிருந்தால் அறுவடை செய்து விடலாம். (இது கருப்பு எள் விதைக்கு மட்டும் பொருந் தும்) வெள்ளை எள் பயிருக்கு எள் விதை வெள்ளை நிறம் அடைய வேண்டும்.மேலே கூறிய நிலையைத் தாண்டி அறுவடை செய்தால் எள் காய்கள் வெடித்து விதைகள் சிதறி சேதமடையும்.
  • எள் பயிரை தரை மட்டத்தில் அறுத்து எடுக்க வேண்டும். செடியின் மேல் பகுதியை உள்புறமும், அடிப்பாகம், வெளிப் புறமும் இருக்கும்படி வைத்து வட்ட வடிவமாக திறந்த வெளியில் அடுக்கி வைக்க வேண்டும்.
  • அடுக்கிய எள் செடியில் உள்ள காய்கள் ஒட்டு மொத்தமாக முதிர்ச்சியடைய மேல் பகுதியில் வைக்கோல் போட்டு மூடி வைக்க வேண்டும்.
  • மூன்று நாட்களுக்கு பிறகு எள் பயிரை எடுத்து களத்தில் காய வைக்க வேண்டும். மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை காய வைத்த பின் விதைகளை தனியே பிரித்து எடுக்க வேண்டும்.
  • பிரிக்கப்பட்ட எள் விதைகளில் கலந்துள்ள கல், மண், இலை சருகுகள், சுருங்கிய மற்றும் முதிராத விதைகள், பழுதுபட்ட விதைகள் ஆகியவற்றை தனித்தனியே பிரித்தெடுக்க வேண்டும்.
  • காய்ந்த எள் விதையின் ஈரப்பதம் ஐந்து முதல் ஒன்பது சதவீதம் இருந்தால் தரமான எள் விதையாகும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *