எள் சாகுபடி டிப்ஸ்

புதுக்கோட்டை மாவட்டம், குலமங்கலம் அருகே விவசாயிகளுக்கு ஆடிப்பட்ட எள் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை பயிற்சி அளித்தனர்.

  • ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான ஆடிப்பட்டத்தில் 50% எண்ணெய்த்தன்மை கொண்ட எள் பயிரை சாகுபடி செய்து அதிக அளவில் மகசூல் பெறலாம்.
  • ஆடிப்பட்டத்தில் எள் பயிரிடுவதற்கு முன் நிலத்தை டிராக்டரில் ஆழ உழும் கலப்பையால் 2 அல்லது 3 முறை புழுதிபட உழுது, நிலத்தில் நீர் தேங்காத வகையில் சமமாகத் தயார் செய்ய வேண்டும்.
  • கடைசி உழவில் ஏக்கருக்கு 10 வண்டி (5 டன்) தொழுஉரம் இடவேண்டும்.
  • ஆடிப்பட்டத்தில் எள் சாகுபடிக்கு கோ.1, டி.எம்.வி-3, டி.எம்.வி-7 போன்ற ரகங்கள் ஏற்றவை. தேர்வு செய்யப்பட்ட ரகங்களின் விதைகளை 1 கிலோவிற்கு 4 கிராம் டிரைகோடெர்மா அல்லது கார்பன்டெசிம் 2 கிராம் கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
  • விதையை 8 கிலோ மணலுடன் சோóத்து சீராகத் தூவ வேண்டும்.
  • விதைத்த 15-வது நாளில் 15 செ.மீ இடைவெளி 30-வது நாளில் 30 செ.மீ இடைவெளி வைத்து செடிக்கு செடி கலைக்க வேண்டும். இதுதவிர விதைத்த 7 நாட்களுக்குள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
  • பூக்கும் பருவமான 35 முதல் 55 நாட்களில் சீரான அளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். களை நிர்வாகத்துக்கு ஆலாகுளார் மருந்தை ஏக்கருக்கு 500 மி.லி கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
  • இலைப்பூச்சி, எள் குடையான், கொண்டைப்புழு, கொசு மாதிரி காணப்படும் முடிச்சுப்புழு இருப்பின் ஏக்கருக்கு 500 மி.லி. கார்பாரில் தெளிக்கவும். அசுவினி நோய் காணப்பட்டால், 5 கிராம் இமிடாகுளோபிரிட் கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
  • தத்துப்பூச்சி மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு ஏக்கருக்கு குயினால்பாஸ் 600 மி.லி, மெத்தில் டெமடான் 300 மி.லி தெளிக்கலாம்.
  • வேர் அழுகல் நோய் இருப்பின் கார்பன்டெசின் கொண்டு கட்டுப்படுத்தலாம். இலைப்புள்ளி, வாடல் நோய் இருப்பின் மான்கோசெப் கொண்டு சரிசெய்யலாம். சாம்பல் நோய் தாக்கியிருந்தால், ஏக்கருக்கு 10 கிலோ சல்பா மருந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
  • விவசாயிகள் நவீன தொழில்நுட்ப முறைகளை கையாள்வதன் மூலம் எள் பயிரில் சராசரியாக ஆடிப்பட்டத்தில் ஏக்கருக்கு 1200 முதல் 1500 கிலோ வரை மகசூல் பெறமுடியும் என பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது.

நன்றி:தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *