நிழல்வலை கூடாரத்தில் கத்தரி செடி சாகுபடி – ரூ.4 லட்சம் வரவு

மதுரை மாவட்டம் மேலுார் சருகுவலையபட்டியை சேர்ந்த விவசாயி முருகேசன். நிழல்வலை கூடாரத்தில் கத்தரி செடி சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.

அவர் கூறியதாவது:

நிழல்வலை கூடாரத்தை நிதி வசதிக்கு ஏற்ப சிறியதாக அல்லது பெரியதாக அமைக்கலாம். 45 அடி நீளம், 17 அடி அகலத்தில் நிழல்வலை கூடாரம் அமைக்க 22 ஆயிரம் ரூபாய் செலவாகும்.
ஒரு முறை செலவு செய்தால் பல ஆண்டுகள் பயன்படும். கூடாரத்தினுள் 98 குழிகள் கொண்ட குழிதட்டுகளில் தென்னை நார் கழிவுகள் மற்றும் இயற்கை உரமான குப்பையை பாதியளவு நிரப்ப வேண்டும். அதில் கத்தரி விதைகளை ஒரு குழிக்கு இரண்டு விதைகள் வீதம் நடவு செய்து தொடர்ந்து தண்ணீர் தெளித்தால் 25 நாளில் நாற்றுகள் ஒரே அளவாக நன்கு வளர்ச்சி அடையும்.

குழிதட்டு நன்மை

குழிதட்டில் நாற்றுகளை உற்பத்தி செய்தால் மண் தரையை காட்டிலும் 15 நாட்கள் முன்னதாகவே நாற்றுகள் முழு வளர்ச்சி அடையும். தவிர நாற்றுகளின் முளைப்பு திறன் அதிகமாகவும், பூச்சி தாக்குதல் இல்லாமலும், நாற்றுகள் ஆரோக்கியமாக வளரும். நாற்றுகள் உறுதியுடன் இருப்பதால் குழிதட்டில் இருந்து நிலத்தில் நடவு செய்வதற்காக பிடுங்கும் போது வேர் அறுந்து போகாது. அதிக மகசூல் கிடைக்கும். கத்தரி நாற்றுகள் நடவு செய்யும் நிலத்தின் மண் மீது கவனம் கொள்ள வேண்டும். ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் தேவையான இடைவெளி இருக்க வேண்டும்.

கத்தரிக்கு மவுசு

ஒரு ஏக்கருக்கு 60 குழிதட்டு நாற்றுகள் தேவை. தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க சொட்டு நீர் பாசனம், களை செடிகள் உருவாகாமல் இருக்க இரு செடிகளுக்கு இடையே காகிதம் விரிக்கலாம். சொட்டு நீர் பாசன முறையில் 40 சென்ட் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச 40 நிமிடம் போதும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தை மாதம் கத்தரி நடவுக்கு ஏற்றது.

சருகுவலையபட்டி செம்மண்ணில் விளையும் கத்தரிக்கு மவுசு அதிகம். நடவு செய்த 60 வது நாளில் இருந்து காய்கள் பறிக்கலாம்.

ஏக்கருக்கு 80 ஆயிரம் ரூபாய் செலவு செய்து 4 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்றார்.

தொடர்புக்கு 09786549969 .
– எஸ்.பி.சரவணக்குமார் மேலுார்.

நன்றி:தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *