கரும்பு சாகுபடியின் கசப்பான உண்மைகள்

கரும்பின் இனிப்பை சுவைக்காதவர் யாரும் இருக்க முடியாது. சுவைப்பவருக்கு இனிப்பை தரும் கரும்பு, விளைவிப்போருக்கு கசப்பை தருகிறது.

கரும்பு மற்றும் சர்க்கரையின் தாயகம் இந்தியா என ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. கி.மு., 3000 ஆண்டிலிருந்து இந்தியாவில் கரும்பு உற்பத்தி செய்யப்படுவதாகவும், கி.பி., 5 மற்றும் 6ம் நுாற்றாண்டில் இந்திய சர்க்கரை (மொலாசஸ் நீக்கப்படாத நாட்டுச்சர்க்கரை, வெல்லம்) பாரசீகத்திற்கு ஏற்றுமதியானதாகவும் வரலாற்று ஆவணங்களிலிருந்து தெரிய வருகின்றன.
தமிழகத்தில் முதல் ஆலை:

லண்டனில் 1584ல் இரு சர்க்கரை ஆலைகள் நிறுவப்பட்டன. 1689ல் நியூயார்க்கில் சர்க்கரை ஆலை ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் முதல் ஆலையை பிரஞ்சுகாரர்கள் 1824ல் ஒடிசா மாநிலம் அஸ்காவில் நிறுவினர்.

லண்டன் கிழக்கிந்திய கம்பெனி, 1870ல் கடலுார் மாவட்டம் நெல்லிகுப்பத்தில் சர்க்கரை ஆலையை ஏற்படுத்தியது. 1931-32 ஆண்டுகளில் இந்தியாவில் 32 ஆலைகள் இயங்கின. இவை தனியார் ஆலைகள்.
கரும்புக்கு குறைந்தபட்ச விலை:

1957ல் சர்க்கரை துறை மாநில அரசிடமிருந்து மத்திய அரசின் அதிகாரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கூட்டுறவு சர்க்கரை ஆலை சம்மேளனம் 1960ல் ஏற்படுத்தப்பட்டது. கரும்பு விவசாயிகளின் நலனை பாதுகாத்திட, கரும்புக்கு குறைந்தபட்ச விலையை தீர்மானித்து அதை ஆலையில் அளித்திட, மாநில அரசுகள் விதிகளை உருவாக்க கோரி மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது.

பின் மத்திய அரசின் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் சர்க்கரை, கரும்பு உட்பட பல பொருட்கள் பட்டியலிடப்பட்டன. பின் கரும்பு கட்டுப்பாடு சட்டம் 1966ல் நிறைவேற்றப்பட்டது. கரும்பு வழங்கிய 14 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பணம் அளிக்க வேண்டும் என சேர்க்கப்பட்டது.
கூடுதல் வருவாயில் சரிபாதி:

கரும்புக்கு மட்டுமே சட்டப்பூர்வ விலை விவசாயிகளுக்கு கிடைக்கிறது. இதர பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை(எம்.எஸ்.பி. – MSP) அறிவிக்கப்பட்டாலும், விவசாயிகளுக்கு கிடைக்க ஏற்பாடுகள் இல்லை.

மற்ற பொருட்களுக்கு அரசு கொள்முதலில் மட்டுமே அந்த விலை கிடைக்கும். கரும்புக்கு சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலையுடன் ஆலைகளுக்கு சர்க்கரை விற்பனை மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயில் சரிபாதியை விவசாயிகளுக்கு தர வேண்டும். இது கரும்பு கட்டுப்பாடு உத்தரவில் சேர்க்கப்பட்டது.
துணைபொருட்கள் லாபத்திலும் பங்கு:

சுப்ரீம் கோர்ட் 2004ல் கரும்பு விலை குறித்து அளித்த தீர்ப்பில், கரும்பு சக்கை, மொலாசஸ், ஆலை அழுக்கு போன்ற துணை பொருட்களால் ஆலைக்கு கிடைக்கும் கூடுதல் வருமானத்தை மத்திய அரசு கணக்கில் எடுக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

விலை நிர்ணயத்திலும் கூடுதல் விலை அளிப்பதிலும் துணை பொருட்கள் மூலம் ஆலைக்கு கிடைக்கும் லாபத்தை கணக்கில் எடுக்க வேண்டும். அப்போது தான் விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கும், என தெரிவித்துள்ளது.
பொதுவாக மத்திய, மாநில அரசுகளின் கனிவான பார்வை ஆலை நிர்வாகங்களுக்கு தான் சாதகமாக உள்ளது. மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் கரும்பு உற்பத்தியாகும் செலவுகளை கணக்கில் எடுத்து மாநில அரசு பரிந்துரை விலை அறிவித்து வழங்கி வந்தது.

சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையின்படி கரும்புக்கு ஆகும் உற்பத்தி செலவும், உற்பத்தி செலவில் 50 சதவீதம் சேர்த்து விவசாயிகளுக்கு விலையாக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்ததையும் மத்திய அரசு அமல்படுத்தவில்லை.
ரங்கராஜன் அறிக்கை:

முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரங்கராஜன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து கரும்பு சம்பந்தமான அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் விவசாயிகளை பாதிக்கும் அம்சங்கள் உள்ளன.இக்கமிட்டி ஆலைகளுக்குள்ள கரும்பு ஏரியாவை நீக்கியது. இதனால் கரும்பு விவசாயிகள் தங்கள் கரும்பை அரைக்க ஆலைகளை நிர்ப்பந்தம் செய்ய முடியாது. தனியார் ஆலைகள் கரும்பை குறைந்த விலக்கு வாங்குவர். விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. கரும்பு விவசாயத்திற்கான கடனும், தனியார் ஆலைகள் பரிந்துரைப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
பொது விநியோகத்திற்கு கிடைக்குமா:

1999-2000ல் சர்க்கரை ஆலையில் உற்பத்தியாகும் சர்க்கரையில் 30 சதவீதம் சர்க்கரையை மாநில அரசு மார்க்கெட் விலைக்கு குறைவாக பொது விநியோக முறைக்கு அளிக்க வேண்டும் என இருந்தது. படிப்படியாக மத்திய அரசு குறைத்து 2010-2011ல் 10 சதவீத சர்க்கரை கொடுக்க வேண்டும் என இருந்ததை அறவே நீக்கியது.

அதனால் சர்க்கரை ஆலை நிர்வாகங்களுக்கு லாபம். மாநில அரசு ஏழைகளுக்கு வளிமார்க்கெட்டில் சர்க்கரை வாங்கி தான் விநியோகிக்க வேண்டிய நிலை. எதிர்காலத்தில் பொது விநியோகத்தில் சர்க்கரை குறைந்த விலையில் கிடைக்குமா என்பது சந்தேகம்.
இறக்குமதிக்கு கூடுதல் வரி:

சர்க்கரை ஏற்றுமதிக்கு ஏற்கனவே தடையிருந்தது. தற்போது ரங்கராஜன் அறிக்கையின்படி தடை நீக்கப்பட்டது. எந்த ஆலையும் எவ்வளவு சர்க்கரையை ஏற்றுமதி செய்யலாம், ஸ்டாக் வைத்து கொள்ளலாம். மத்திய அரசு இறக்குமதி சர்க்கரைக்கு 15 சதவீதம் வரி இருந்ததை, 25 சதவீதமாக உயர்த்தியது. இதனால் உள்நாட்டில் சர்க்கரை விலை கூடும். ெவளிநாட்டிலிருந்து சர்க்கரை இறக்குமதியாகாது.
ரூ.650 கோடி பாக்கி:

தற்போது தமிழகத்தில் 2013-2014ல் எப்.ஆர்.பி., விலை ரூ.2100 மற்றும் மாநில அரசு பரிந்துரை விலை ரூ.450 என நிர்ணயிக்கப்பட்டது. எப்.ஆர்.பி., விலையை டன்னுக்கு ரூ.2100 தனியார் ஆலைகள் விவசாயிகளுக்கு கொடுத்து விட்டனர். மாநில அரசு பரிந்துரையை விலை ரூ.410ஐ தனியார் ஆலைகள் கொடுக்கவில்லை. இந்தவகையில் ரூ.650 கோடி வரை விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
சர்க்கரையிலிருந்து துணை பொருட்கள்:

சர்க்கரை துணை பொருட்களான ஒரு டன் கரும்பை அரைத்தால், 350 முதல் 450 கிலோ சக்கை கிடைக்கும். சக்கையிலிருந்து மின்சாரம், காகிதம் தயாரிக்கப்படுகிறது. ஒரு டன் கரும்பில் 45 கிலோ கழிவுப்பாகு மொலாசஸ் கிடைக்கிறது. அதிலிருந்து எத்தனால் தயாரிக்கலாம். மேலும் ஒரு டன் கரும்பிலிருந்து 40 கிலோ ஆலை அழுக்குகிடைக்கும். இதிலிருந்து கிடைக்கும் லாபத்தில் விவசாயிகளுக்கு ஒரு காசு கூட கொடுக்கப்படுவதில்லை. கரும்புக்கு கட்டுபடியான விலை கிடைத்தால் மட்டுமே விளைவிப்பவர்களுக்கு இனிப்பாக அமையும்.
-என்.பழனிச்சாமி,மாநிலத் தலைவர்,தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்,09443830503.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *