மறுதாம்பு கரும்பில் அதிக மகசூல்

  • நடவு கரும்பை விட மறுதாம்பு கரும்பில் செலவு குறவு.
  • மேலும் அதிக மகசூலும் எடுக்க முடியும்.
  • கரும்பு வெட்டியவுடன் சோகையை தண்ணீர் பாய்ச்சும் வாய்க்காலில் ஒதுக்கியோ அல்லது வயல் முழுவதும் சமமாக பரப்பியோ எரிக்க வேண்டும்.
  • பின்பு வேலையாள்கள் மூலம் கூரிய கத்தி கொண்டு அனைத்து கரும்பு கட்டைகளையும் பூமி மட்டத்தில் பக்கவாட்டில் வெட்டிவிட வேண்டும்.
  • அப்படி செய்தால் முளைத்து வரக்கூடிய அனைத்துப் பயிர்களும் சமமாக இருக்கும்.

கங்கு அறுத்தல்:

  • ஏக்கருக்கு 1 மூட்டை யூரியாவை கட்டையின் மீது தூவி தண்ணீர் பாச்ச வேண்டும்.
  • இந்த ஈரப்பதத்திலேயே மாட்டு ஏர் ஓட்டுதல் (கங்கு அறுத்தல்) வேண்டும்.
  • இதனால் பழைய வேர்கள் அறுபட்டு புதிய வேர்கள் உண்டாகும்.
  • பின்பு ஏக்கருக்கு 3 மூட்டை சூப்பர் பாஸ்பேட் உரத்தை ஏர் ஓட்டிய உழவுசாலில் போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
  • மேற்கண்ட வேலைகள் அனைத்து கரும்பு வெட்டிய 7 நாள்களுக்கு (1 வாரம்) செய்து முடிக்க வேண்டும்.
  • இப்படி செய்தால் அனைத்துக் கட்டைகளும் 1 மாதத்தில் முளைத்துவிடும்.

போக்கிடங்களை நிரப்புதல்:

மறுதாம்பில் ஒரு பயிருக்கும், மற்றொரு பயிருக்கும் இடையே உள்ள இடைவெளி முக்கால் அடிக்கு மேல் இருந்தால் முளைத்த, துளிர்த்த கட்டையில் பாதியை மட்டும் மண்வெட்டியால் வெட்டி இடைவெளி உள்ள இடத்தில் பள்ளம் நட்டு மண் கொண்டு நன்கு அழுத்திட வேண்டும். உடன் நீர் பாய்ச்ச வேண்டும்.

நுண்ணூட்டக் கரைசல் தெளித்தல்:

  • மறுதாம்பு கரும்பு பயிரில் இரும்புச்சத்து பற்றாக்குறையால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
  • இதைக் கட்டுப்படுத்தாவிட்டால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் குறையும்.
  • இதனைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 4 கிலோ பொரஸ்சல்பேட், 2 கிலோ சிங்க் சல்பேட் இரண்டையும் முதல் நாள் இரவில் 10 லிட்டர் நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் இதனுடன் 2 எலுமிச்சம் பழத்தை பிழிந்துவிட்டு 4 கிலோ யூரியாவையும் சேர்த்து கரைத்து வடிகட்டி 190 லிட்டர் தண்ணீரில் கைத்தெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.
  • இந்த கரைசல் தெளித்து 1 வாரம் கழித்து மஞ்சள் மாறவில்லையெனில் 15 நாள்கள் கழித்து மற்றொரு முறை இதே கரைசலைத் தெளிக்க வேண்டும்.
  • மேற்கண்ட முறைகளில் மறுதாம்பு கரும்பு பராமரித்து அதிக மகசூல் எடுக்கலாம்.
  • இவ்வாறு தண்டராம்பட்டு வேளாண்மை உதவி இயக்குநர் அ.பாலா தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *