வறண்ட பூமியில் கரும்பு சாகுபடியில் சாதித்த விவசாயி!

தமிழக வறட்சி மாவட்டங்களில் ராமநாதபுரம் முதலிடம் வகிக்கிறது. மானாவாரி சாகுபடியை நம்பியுள்ள விவசாயிகளுக்கு சில நேரம் மழை கைகொடுக்கும். பல நேரங்களில் கையை விரித்து விடும். இன்பம், துன்பம் இரண்டையும் தாங்கி பழகிய விவசாயிகள் பலர் மாற்று பயிர் விவசாயத்தில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இதில் ராமநாதபுரம் மும்முடிச்சாத்தான் கிராமத்தின் முன்னோடி விவசாயி அழகுசுந்தரம், சொட்டு நீர் பாசன முறையில் கரும்பு விவசாயம் செய்து சாதனை படைத்து வருகிறார். தனது 61 வய திலும் 21 வயது இளைஞர் போல் ஆர்வத்துடன் விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் கூறியதாவது:

எனது குடும்பம் விவசாய குடும்பம். 15 வயதில் விவசாயத்தில் இறங்கினேன். ஏழு ஏக்கர் நிலத்தில் நெல், மிளகாய், எள், பருத்தி என விவசாயம் செய்தோம். போதிய வருமானம் இல்லை. ஆட்களும் கிடைப்பதில்லை.

கரிசல் பூமியில் கரும்பு விளைவிக்கலாம், என்ற எண்ணம் தோன்றியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கரும்பு சாகுபடியே இல்லாத காலம் அது. 1989ம் ஆண்டு முதன் முதலாக கரும்பு சாகுபடியை தொடங்கினேன். கரும்புக்கு நல்ல விலை கிடைத்தது. செலவும் மிகவும் குறைவு. சர்க்கரை ஆலையில் இருந்து அவர்களே அறுவடை செய்து எடுத்து சென்றதால் கவலை இல்லை.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 5 ஏக்கரில் சொட்டுநீர் பாசன முறையில் கரும்பு சாகுபடி செய்தேன். சொட்டு நீர்ப்பாசன குழாய்களை எலிகள் கடித்து சேதம் செய்ததாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும் தற்போது மூன்றரை ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளேன். ஒரு ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்வதற்கு உழவு செலவு ரூ.3,000, விதை கரணைக்கு ரூ.5,500, உரம் ரூ.5,000, களை எடுப்பு செலவு ரூ.3,000 உள்பட ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. ஒரு ஏக்கரில் சராசரியாக 55 டன் கரும்பு விளைச்சல் கிடைக்கிறது.

டன் கரும்பு ரூ.2,400 என்ற விலைக்கு சர்க்கரை ஆலையில் கொள்முதல் செய்கின்றனர். இதில் கரும்பு வெட்ட கூலி டன்னுக்கு ரூ.450 பிடித்தம் செய்துபோக ரூ.1,950 வீதம் கிடைக்கிறது. அதன்படி பார்த்தால் செலவு போக ஏக்கருக்கு 87 ஆயிரத்து 250 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இதற்கு ஓராண்டு காத்திருக்க வேண்டும்.

அதே நேரம் வேலை ஆட்கள் தேவையில்லை. செலவுகளும் குறைவுதான். 15 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சினாலே போதுமானது. தற்போது பாண்டியூர், மஞ்சக்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்கின்றனர் என்றார்.

தொடர்புக்கு 09994919134 .
எஸ்.பழனிச்சாமி, ராமநாதபுரம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “வறண்ட பூமியில் கரும்பு சாகுபடியில் சாதித்த விவசாயி!

  1. வ.தனசகேர் says:

    வாழ்த்துக்கள்.ஐயா.உண்மயைான உழபை்பிற்க்கு நிச்சயம் பலன்உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *