ஊருக்குள் உயிர்பெறும் குறுங்காடுகள்

பூமி வானை நோக்கி எழுதும் கவிதைகள் மரங்கள் என்கிறது கலீல் கிப்ரானின் கவிதை. அந்தப் பசுங்கவிதைகளை ரசித்துப் பாதுகாக்கும் வேலையைப் பத்து ஆண்டுகளாகச் செய்துவருகிறது நிழல் (மரங்களின் தோழன்) அமைப்பு.

மரங்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, சத்தமில்லாமல் சில மாற்றங்களை விதைத்திருக்கிறது. சென்னையின் பல பகுதிகளில், மக்கள் பங்கேற்புடன் சமூகப் பூங்காக்களை அமைத்திருப்பதை நிழலின் முக்கியப் பணி என்கிறார் நிழல் அமைப்பின் நிறுவனர் ஷோபா மேனன்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் மரங்களால் பசுமை போர்த்தப்பட்டிருந்த சென்னை, தொடர்ச்சியான நகர்மயமாக்கம் காரணமாக மரங்களை இழந்து, இன்றைக்குக் கான்கிரீட் காடாக மாறிவிட்டது. நம் மண்ணின் மரங்களைப் பற்றிய அறிவும் ஆர்வமும் இளைய தலைமுறையிடம் காணாமல் போய்விட்டது. இந்தப் பின்னணியில்தான் சென்னையில் செயல்படும் நிழல் அமைப்பின் முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த அமைப்பின் சேவையால் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிப்பதன் அவசியத்தை, சென்னை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

சமூகப் பூங்காக்கள்

நிழல் அமைப்பின் முதல் வெற்றிகரமான முயற்சி சென்னை கோட்டூர்புரம் மரப்பூங்கா. 2006-ல் இந்த இடத்தை நிழல் அமைப்பிடம் பொதுப்பணித் துறை ஒப்படைத்தபோது குப்பை மேடாகத்தான் இருந்தது. ஆனால், தற்போது இந்தப் பூங்கா சென்னை மாநகரத்தின் நடுவில் 500 மரங்களுடன் ஒரு சின்ன காடு போலிருக்கிறது. ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவை மான்களில் ஆரம்பித்துப் பட்டாம்பூச்சிகள் வரை பல உயிரினங்களுக்குப் பிடித்திருக்கிறது.

Courtesy: Hindu
Courtesy: Hindu

தூக்கணாங்குருவி கூடுகட்டும் கருவேல மரம், பறவைகளுக்குப் பிடித்த நெய்கொட்டான் மரம் என்று பல்லுயிர்களும் விரும்பும் இடமாக இருக்கிறது. கோட்டூர்புரம் மரப்பூங்கா. இப்படிச் சமூகப் பங்கேற்பை ஒரு செயல்பாட்டில் உறுதிப்படுத்துவதன் மூலம் குப்பை மேட்டைக்கூடக் குளிர்நிழல் பூங்காவாக்க முடியும் என்று காட்டியிருக்கிறது நிழல்.

ஆனால் இந்தப் பயணம் அவ்வளவு எளிமையானதாக இல்லை என்கிறார் ஷோபா, “ஆரம்பத்தில் நானும் சில நண்பர்களும் மட்டுமே சமூகப் பூங்காக்களை அமைப்பதில் தீவிரமாக இருந்தோம். சில ஆண்டுகளில் மாணவர்கள், பெருநிறுவன ஊழியர்கள், பூங்காவுக்கு நடைபயிற்சிக்கு வரும் பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் தன்னார்வமாக இணைந்ததுதான், இந்தச் சமூகப்பூங்கா உருவானதற்கு முக்கியக் காரணம்” என்கிறார்.

மாதிரிப் பூங்கா

கோட்டூர்புரம் மரப்பூங்காவை மாதிரியாகக் கொண்டு சென்னையில் மக்களுடன் இணைந்து பல இடங்களில் புதிய சமூகப் பூங்காக்களை நிழல் அமைத்திருக்கிறது. வேளச்சேரி, சிட்லப்பாக்கம், மாதவரம், நீலாங்கரை, அசோ நகர் போன்ற பகுதிகளில் சமூகப் பூங்காக்களை அமைத்திருக்கிறோம். பூங்காக்களில் மக்களே மரங்களைப் பராமரிப்பதாலும் சென்னை மாநகராட்சியின் ஆதரவாலும் நகர்ப்புறப் பல்லுயிரியத்தை (Urban biodiversity) உருவாக்க முடிந்திருக்கிறது.

உள்ளூர் மரங்கள்

சமூகப் பூங்காக்களின் மற்றொரு சிறப்பம்சம் இங்கே நடப்பட்டிருக்கும் நம் நாட்டு உள்ளூர் மரங்கள். அசோகம், மகிழம், புரசு, தோன்றி, நாவல், கல்லாலம், வாதநாரயணன், விளாம், புளிய மரம், உலக்கைப்பாலை, உசிலை, கடல் திராட்சை, பூந்திக்கொட்டை, நீர்மருது, புத்திரன் ஜீவா, தணக்கு, சரக்கொன்றை, சூரியக் கதா, கருங்காலி என நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் மரவகைகளைக் கோட்டூர்புரம் மரப்பூங்காவில் பார்க்கலாம்.

அத்துடன், பாம்புக்கடிக்கு மருந்தாகப் பயன்படும் நவகொஞ்சி, நாய்க்கடிக்குப் பயன்படுத்தப்படும் அழிஞ்சி என மருத்துவக் குணங்கள் நிறைந்த மரக்கன்றுகளைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரவழைத்து, இந்தப் பூங்காவை மேம்படுத்தியிருக்கிறார்கள்.

மரங்களின் தோழர்கள்

சமூகப் பூங்காக்கள் அமைக்கும் பணியில் தம்மை இணைத்துக்கொண்டுள்ள பல தன்னார்வலர்களும் அதற்கான தூண்டுதலாகக் கோட்டூபுரம் மரப்பூங்காவையே கூறுகின்றனர். மூன்று ஆண்டுகளாக நிழல் அமைப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் புவனா, “முதலில் சிட்லப்பாக்கத்தில் உள்ள எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் செடிகளை நடுவதற்காக நிழலைத் தொடர்புகொண்டேன். பிறகு எங்கள் பகுதியில் இருக்கும் சிறிய பூங்காவை ஓராண்டுக்கு முன் தத்தெடுத்துக்கொண்டோம். எங்கள் பகுதி மக்களும் இந்தச் சமூகப் பூங்காவில் இணைந்துள்ளார்கள்” என்கிறார்.

கோட்டூர்புரத்தில் வசிக்கும் திருமலைச்செல்வி, பூங்காவுக்குத் தினமும் வருவதைப் பழக்கமாக வைத்துள்ளார். “ஓராண்டுக்கு மேலாக இந்தப் பூங்காவுக்கு வருகிறேன். இங்கேயிருக்கும் செடிகளைப் பாதுகாப்பதும், மாணவர்களுக்கு அவற்றைப் பற்றி எடுத்துரைப்பதும்தான் எனக்குப் பிடித்தமான வேலை” என்கிறார் அவர்.

கல்லூரி மாணவரான கஜேந்திரன், தான் மட்டுமில்லாமல் தன் நண்பர்களும் சமூகப் பூங்காக்கள் அமைக்கத் தூண்டுதலாக இருந்துள்ளார். “கல்லூரி நேரம் போக, மற்ற நேரமெல்லாம் இங்கேயிருக்கும் செடிகளைப் பராமரிக்கிறேன். பெருங் குடியில் சமீபத்தில் அமைக்கப் பட்ட சமூகப் பூங்காவை என் நண்பர் சாய்ராம் பராமரித்து வருகிறார்” என்று அவர் மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார்.

மரங்கள் மட்டும் போதுமா?

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு மரங்கள் வளர்ப்பது மட்டும் ஒரே தீர்வாக இருக்க முடியாது என்ற கருத்தை அமோதிக்கும் ஷோபா, “சூழலுக்கு இசைவான, அக்கறையான வாழ்க்கைமுறை, மாசுக் கட்டுப்பாடு போன்றவையும் அவசியம்” என்கிறார். அதேநேரம் சுற்றுச்சூழலை மேம்படுத்த, மரம் வளர்ப்பதையே சிறந்த தீர்வாகத் தான் நம்புவதாக அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் இந்த மரங்களின் தோழி.

தொடர்புக்கு – 09840904621, 09884114721 மற்றும் nizhal.shade@gmail.com

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *