நிலம் யாருக்குச் சொந்தம்?

ஒரு நாள் காலை அவசரமாகத் தொலைபேசியில் அழைத்த நண்பர் அய்யர்பாடிக்காரனும், சின்ன மோனிகாவும் காட்டுப் பகுதியின் ஓரமாகத் தேயிலைத் தோட்டத்தின் அருகில் இருப்பதாகச் சொன்னார். கூடவே, ஒரு ஆச்சரியமான சங்கதியையும் சொன்னார். அவன் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறான், அவள் நின்று கொண்டிருக்கிறாள் என. வியப்பு மேலிட உடனே அந்த இடத்துக்கு விரைந்தேன்.

அவர் சொன்னபடியேதான் இருந்தது, நான் இதுவரை கண்டிராத அந்தக் காட்சி. சற்று நேரத்தில் அவளும் மெதுவாகத் தனது கால்களை மடக்கி, பக்கவாட்டில் சாய்ந்து படுத்துக்கொண்டாள். இரவெங்கும் சுற்றி அலைந்து உணவு தேடியபோதும், இடம்பெயர்ந்தபோதும் வழியெங்கும் மனிதர்களால் ஓடஓட விரட்டப்பட்டதாலோ என்னவோ, அந்தப் பட்டப்பகலில் அவர்கள் இருவரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். ஆள் அரவமற்ற அந்த இடத்தில், அவர்கள் இருவரும் நிம்மதியாகத் தூங்குவதைக் கண்டு எங்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

யாருடைய இடம்?

ஒவ்வொரு யானையையும் அடையாளம் கண்டு பெயரிடுவது ஆராய்ச்சியாளர்களின் இயல்பு. அய்யர்பாடிக்காரனையும், சின்ன மோனிகாவையும் போல வால்பாறை பகுதியில் சுமார் 80-100 யானைகள் இருக்கின்றன. வால்பாறையைச் சுற்றிலும் உள்ள காட்டுப் பகுதிகளில் உள்ள யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு இடம்பெயர்வது காலங்காலமாக நிகழ்ந்து வருகிறது.

நூறு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் குடியேறிய சமவெளிப் பகுதி மனிதர்கள் யானைகளின் வழித்தடங்களை (Elephant corridors) ஆக்கிரமித்து வீடு கட்டி வசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். உண்மையில், வால்பாறை பகுதி மனிதர்களுக்கானது மட்டுமல்ல, இங்கு வாழ்ந்துவரும் யானை முதலிய அனைத்துக் காட்டுயிர்களுக்கும் உரியதும்கூட.

Courtesy: Hindu
Courtesy: Hindu

எதிர்கொள்ளல்

தற்போது சுமார் 220 சதுரக் கி.மீ. பரப்பு கொண்ட தேயிலைத் தோட்டங்களும், துண்டாக்கப்பட்ட மழைக்காட்டு சோலைகளும் உள்ள இப்பகுதியின் மக்கள்தொகை சுமார் ஒரு லட்சம். இப்படி மனித அடர்த்தி மிகுந்த இடத்தில் யானைகளுடன் மனிதர்களோ, மனிதர்களுடன் யானைகளோ எதிர்கொள்ள நேரிடுவது பல வேளைகளில் தவிர்க்க முடியாத ஒன்றுதான்.

இதன் பின்விளைவுகளில் முதலாவது பொருட்சேதம், இரண்டாவது உயிர்ச்சேதம். அதாவது ரேஷன் கடைகளிலும், பள்ளி மதிய உணவுக் கூடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும் அரிசி, பருப்பு முதலிய உணவுப் பொருட்களை உட்கொள்ள யானைகள் வருவதால், அக்கட்டிடங்களின் கதவு, சுவர்கள் சேதமடைகின்றன. உணவு சேமிப்புக் கிடங்குகள் குடியிருப்புப் பகுதிகளின் அருகாமையில் இருந்தால், அங்கிருக்கும் சில வீடுகளிலும் சேதம் ஏற்படலாம்.

பொருட்சேதத்தைப் பல வழிகளில் ஈடுகட்ட முடியும். ஆனால் மனித உயிரிழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றே. இதைத் தவிர்க்க இப்பகுதியில் வனத் துறையும், யானை ஆராய்ச்சியாளர்களும், பொதுமக்களும் பல வழிகளைக் கையாண்டு வருகின்றனர். அந்த முயற்சியில் வெற்றி கிடைத்திருப்பதையும் கவனிக்க வேண்டும்.

கட்டுப்படுத்த ஆராய்ச்சி

முதலில் மனித உயிரிழப்பு ஏன், எப்படி, எங்கு, எப்போது ஏற்படுகிறது என்பது ஆராயப்பட்டது. இப்பகுதியில் கடந்த 12 ஆண்டுகளாக யானைகளின் இடப்பெயர்வையும், பண்புகளையும் பற்றி ஆராய்ச்சி செய்துவரும் முனைவர் ஆனந்தகுமாரும் அவரது குழுவினரும் இதற்கான விடைகளைக் கண்டறிந்தனர்.

சுற்றிலும் காட்டுப் பகுதியைக் கொண்ட, மனித அடர்த்தி மிகுந்த வால்பாறை பகுதியில் ஆண்டில் 10 மாதங்களுக்கு யானைகள் நடமாட்டம் இருக்கும். பல வேளைகளில் யானைகளும் மனிதர்களும் எதிர்பாராதவிதமாக ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள நேரிடலாம். மனித உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.

1994 முதல் 2012 வரை 39 பேர் எதிர்பாராதவிதமாக யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் 72 விழுக்காடு உயிரிழப்பு ஏற்பட்டது தேயிலை எஸ்டேட்டிலும், சாலையிலுமே. யானைகள் இருப்பதை அறியாமலேயே, அவை நடமாடும் பகுதிகளுக்கு மனிதர்கள் சென்றதுதான், இதில் முக்கியக் காரணம். டிசம்பரிலிருந்து பிப்ரவரி மாதம்வரைதான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

உயிரிழப்புத் தடுப்பு

அதனால், வனத் துறையினரின் உதவியுடன் வால்பாறையில் யானைகளின் இருப்பிடத்தை அறிந்து, அந்தச் செய்தியைப் பகுதி மக்களிடம் தெரிவிக்கும் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. யானைகளின் இருப்பிடம் குறித்து, அந்தப் பகுதி மக்களுக்குக் கேபிள் டிவி மூலம் முன்கூட்டியே தகவல் ஒளிபரப்பப்பட்டது, யானைகள் இருக்குமிடத்தைச் சுற்றி வாழும் (சுமார் 2 கி.மீ. சுற்றளவில்) மக்களுக்குக் கைபேசி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. வெகு தொலைவிலிருந்து பார்த்து அறியக்கூடிய உயரமான பகுதியில் மின்னும் சிவப்பு எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டன. பிரத்யேகக் கைபேசி மூலம் இவ்விளக்கை எரிய வைக்கவும், அணைக்கவும் முடியும். அப்பகுதி மக்களே இதை நாளடைவில் செயல்படுத்தவும் ஆரம்பித்துள்ளனர்.

2011-ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்ட இத்திட்டங்களால் இப்பகுதியில் மனித உயிரிழப்பு பெருமளவு குறைந்துள்ளது. அதிலும் 2013-ம் ஆண்டு எந்த மனித உயிரிழப்பும் ஏற்படவில்லை.

என்ன காரணம்?

இயற்கையோடு இணக்கமாக வாழ்ந்து வந்தவர்கள் நம் முன்னோர். மனிதர்கள்-காட்டுயிர் எதிர்கொள்ளல் என்பது இன்று, நேற்றல்ல காலங்காலமாக நிகழ்ந்து வரும் ஒன்று.

இதை நம் இலக்கியங்களில் இருந்தும், புராணக் கதைகளில் இருந்தும் அறிய முடிகிறது. சமீபகாலமாக இந்த எதிர்கொள்ளல் அதிகரித்திருப்பது என்னவோ உண்மைதான். அதற்கான காரணங்களில் முக்கியமானவை மக்கள்தொகைப் பெருக்கம், காடழிப்பு, கள்ளவேட்டை, விவசாய முறைகளில் ஏற்பட்ட மாற்றம் போன்றவைதான் என்பதை மறந்துவிடக்கூடாது.

ஆனந்த குமார்

என்ன செய்யலாம்?

காலங்களைத் தாண்டி உயிர்த்திருந்த யானை, இன்றைக்கு அழிந்துவரும் பேருயிராகிவிட்டது. அதைப் பாதுகாப்பது நமது கடமை. யானைகளால் ஏற்படும் சேதங்களால் பாதிக்கப்படுவோர், அவற்றை எதிரியாகப் பாவிப்பது இயல்புதான். ஆகவே, இதுபோன்ற மனித-யானை எதிர்கொள்ளலால் (Man-Elephant Conflict) ஏற்படும் விளைவுகளை, வால்பாறையில் செயல்படுத்தப்பட்டது போன்ற அறிவியல் ஆய்வுத் தரவுகளைக் கொண்டு கையாளவும், சமாளிக்க வேண்டும்.

பாதிப்பைத் தணிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் இடத்துக்கு இடம் மாறுபடும். வால்பாறையில் பின்பற்றப்படும் செயல்திட்டங்கள் அனைத்தும் மனித – யானை எதிர்கொள்ளல் இருக்கும் எல்லா இடங்களுக்கும் பொருந்தும் எனச் சொல்ல முடியாது. அந்தந்த இடத்துக்குத் தகுந்தவாறு எதிர்கொள்ளலைத் தணிக்க, சரியான திட்டங்களை அடையாளம் கண்டு செயல்படுத்த வேண்டும்.

இது வனத் துறையின் பணி மட்டுமல்ல. எல்லா அரசுத் துறைகளும், ஆராய்ச்சியாளர்களும், பத்திரிக்கையாளர்களும், குறிப்பாக மக்களும் இந்தத் திட்டங்களில் பங்கேற்க வேண்டும். அப்போதுதான் எந்தச் செயல்திட்டமும் நீண்ட காலப் பலனைத் தரும். இது போன்ற திட்டங்களே யானைகளின் நடமாட்டத்தை மக்கள் பொறுத்துக்கொள்ளவும், சமரச மனப்பான்மையை வளர்க்கவும் உதவும்.

இந்த நிலம் அனைவருக்கும் உரியது. இங்கே நாமும் நிம்மதியாக வாழ வேண்டும், யானைகளும் வாழ வேண்டும்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *