ஆடிப் பட்டத்துக்கு ஏற்ற காய்கறி சாகுபடி

ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப காய்கறி பயிரிட இதுவே ஏற்ற தருணம். இப்பட்டத்தில் தோட்டப் பயிர்களான கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, கொடி வகைகளை விவசாயிகள் பயிரிடத் தொடங்கலாம்

கத்தரி, தக்காளி, மிளகாய்கத்தரியில் பாலூர்-1 ரவைய்யா போன்றவையும், தக்காளியில் உயர் விளைச்சல் ரகமான பிகேஎம்-1 மற்றும் வீரிய ரகங்களான யுஎஸ் 618 லட்சுமி ஆகியனவும் இப்பகுதிக்கு ஏற்றவை. உயர் விளைச்சல் ரகங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 400 கிராம் விதை தேவை. வீரிய ரகங்களுக்கு ஹெக்டேருக்கு 200 கிராம் விதை போதுமானது.

மிளகாய் வற்றலுக்கு பிகேஎம்-1 மற்றும் வீரிய ரகமான யுஎஸ் 612, பச்சை மிளகாய்க்கு பாலூர்-1, கோ-4 மற்றும் வீரிய ரகமான யுஎஸ் 35-ம் இப்பகுதிக்கு ஏற்றவை.உயர் விளைச்சல் ரகத்துக்கு ஹெக்டேருக்கு ஒரு கிலோ விதையும், வீரிய ரகத்துக்கு  ஹெக்டேருக்கு 250 கிராம் விதையும் தேவை.

விதைகளை விதைக்கும் முன் டிரைகோடெர்மா விரிடியுடன் (ஒரு கிலோவுக்கு 4 கிராம்) விதை நேர்த்தி செய்து, 24 மணி நேரம் கழித்து அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டிரீயா கலந்து, 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.

வெண்டைவீரிய ரகங்களான மஹிகோ எண்.10, யுஎஸ் எண். 109 ரகங்கள்  ஏற்றவை. விதைகளை விதைக்கும் முன் அவசியம் டிரைக்கோடெர்மா விரிடி பாஸ்போ பேக்டிரியா அசோஸ்பைரில்லத்துடன் விதை நேர்த்தி செய்து, 30ஷ்30 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.

விதைக்கும் முன் ஹெக்டேருக்கு 10 டன் நன்கு மக்கிய தொழு உரம், 100 கிலோ வேப்பம்புண்ணாக்கு, 4 கிலோ அசோஸ்பைரில்லம், 4 கிலோ பாஸ்போபேக்டீரியா கலந்து இட வேண்டும்.

மண் பரிசோதனை முடிவின்படி உரங்களை இட வேண்டும். வீரிய ரகங்களுக்கு விதை அளவு ஒரு ஹெக்டேருக்கு 5 கிலோவாகும்.

கொடிவகை காய்கறிகள்பாகல், புடல், சுரை, சாம்பல் பூசணி, மஞ்சள் பூசணி, பீர்க்கன், அவரை போன்றவற்றை தேர்வு செய்து நடலாம்.பாகல், புடல், பீர்க்கன் போன்றவற்றுக்கு அவசியம் பந்தல் போட வேண்டும்.

பாகலில் பச்சை, நீளம், பாலி போன்றவற்றையும், புடலையில் கோ-1, கோ-2, சுரையில் கோ-1, அர்க்கா பஹார், சாம்பல் பூசணியில் கோ-1,2 மஞ்சள் பூசணியில் (பறங்கி) கோ-2, அர்க்கா சந்தன், பீர்க்கனில் கோ-2 மற்றும் பிகேஎம்-1 கொடி அவரையில் கோ-4, கோ-5 போன்ற ரகங்களை தேர்வு செய்து இப்பருவத்தில் நடலாம்.

விதைகளை விதைக்கும் முன் அவசியம் டிரைகோடெர்மா விரிடி, அசோஸ் பைரில்லம், பாஸ்போபேக்டிரியாவுடன் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

நடும்போது குழி ஒன்றுக்கு தொழு உரம் 5 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 50 கிராம், அசோஸ்பைரில்லம் 25 கிராம், பாஸ்போபேக்டீரியா 25 கிராம் இட வேண்டும்.

இவ்வாறு  தோட்டக்கலை துணை இயக்குநர் ச.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *