பட்டையைக் கிளப்பும் சௌசௌ பந்தல் சாகுபடி!

சமவெளியில் விவசாயம் செய்வதைவிடப் பல மடங்கு கடினமானது மலைப்பகுதி விவசாயம். ஆனாலும், கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் மலைப்பகுதிகளில் காய்கறிகளைச் சாகுபடி செய்து வருகிறார்கள் பல விவசாயிகள்.

ஏனெனில், மலைக்காய்கறிகளுக்கு, நிலப்பகுதியில் விளையும் காய்கறிகளைவிட அதிக வரவேற்பு இருப்பதுதான். மலைக்காய்கறிகளில் முக்கியமான ஒன்று சௌசௌ. பந்தல் முறையில் சாகுபடி செய்யப்படும் இக்காய், அதிகப் பாடு இல்லாமல் விளையும் என்பதால், பெரும்பாலான மலை விவசாயிகளின் விருப்பத் தேர்வாக இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் 25 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் சௌசௌ சாகுபடி செய்து வருகிறார்கள் பழனிச்சாமி, பழனிவேல் ஆகியோர். அதிகாலை வேளையில் இதமான தென்றல் வீசிக் கொண்டிருந்த ரம்மியமான சூழலில், சௌசௌ தோட்டத்தில் இருந்த பழனிச்சாமியைச் சந்தித்தோம்.

“எங்க பூர்வீகம் ஒட்டன்சத்திரம் பக்கம். அங்க காய்கறிகள் சாகுபடி செஞ்சுட்டுருந்தோம். அப்புறம் இங்க (சிறுமலை) நிலம் வாங்கி, விவசாயம் செய்ய ஆரம்பிச்சோம். நாங்க வாங்கும்போது இந்த இடம் புதர் மண்டிப்போய்க் கிடந்துச்சு. அதைச் சரி செஞ்சு, விவசாயத்தை ஆரம்பிச்சோம். சிறுமலையில வாழை ரொம்ப ‘ஃபேமஸ்’. அதனால, முதல் விவசாயமா வாழை போட்டோம். ஓரளவுக்கு லாபமாத்தான் இருந்துச்சு. ஆனாலும் நோய் வந்து ரொம்பச் சேதமாகிடுச்சு. அதுக்கப்புறம்தான்,  சௌசௌ சாகுபடி செய்யலாம்னு முடிவு செஞ்சோம்.

பத்து ஏக்கர் சொந்த நிலம், பதினைஞ்சு ஏக்கர் குத்தகை நிலம்னு மொத்தம் 25 ஏக்கர் நிலத்துலயும் சௌசௌ போட்டுருக்கோம். கல்கால், மரக்கொம்பு, கம்பினு பயன்படுத்திப் பந்தல் போட்டுருக்கோம்” என்ற பழனிச்சாமி, நம்மைத் தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார். “ஆரம்பத்துல ரசாயன விவசாயம்தான் செஞ்சுட்டு இருந்தோம். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒருநாள், பக்கத்துத் தோட்டத்துக்குத் தாண்டிக்குடி ‘காபி போர்டு’ விஞ்ஞானி சௌந்தரராஜன் வந்திருந்தார்.

அப்படியே எங்க தோட்டத்துக்கும் வந்தார். நிலத்தைச் சுத்திப்பார்த்தவர், ‘எதுக்குக் காசைக் கரியாக்கிட்டு இருக்கீங்க. ரசாயனங்களைப் பயன் படுத்தி விவசாயம் செஞ்சா, செலவு அதிகமாகும். இயற்கை முறையில குறைவான செலவுல விவசாயம் செய்யலாம்’னு சொன்னதோடு இயற்கை விவசாய முறைகளையும் சொல்லிக்கொடுத்தார்.

அதுக்குப் பிறகு இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சோம். இப்போ ரெண்டு வருஷமா இயற்கை முறையிலதான் சாகுபடி செய்றோம்.

இயற்கை முறை சாகுபடியில விளையுற காய்கள் நல்லா பளபளப்பா இருக்கு. காய்ல சொறி குறைவாத்தான்  இருக்கு.  தொழுவுரத்தையும் ஜீவாமிர்தத்தையும் தான் பயன்படுத்துறோம். இனக்கவர்ச்சிப் பொறிகளை வெச்சு பூச்சிகளைக் கட்டுப்படுத்துறோம்” என்ற பழனிச்சாமி வருமானம் குறித்துச் சொன்னார். “ஒரு குழியில் இருந்து அதாவது நான்கு செடிகளில் இருந்து 400 கிலோ வரை மகசூல் கிடைக்கும். போனமுறை அறுவடை செஞ்சப்போ ஒரு ஏக்கர் நிலத்துல சராசரியா 80 டன் மகசூல் கிடைச்சது. மொத்தமா, 25 ஏக்கர் நிலத்துலயும் சேர்த்து 2,000 டன் காய் கிடைச்சது. ஒரு கிலோ சௌசௌ 5 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரை விற்பனையாகும். இந்த வருஷம் 5 ரூபாய்தான் விலை கிடைச்சது. அந்த வகையில மொத்தம் 1 கோடி ரூபாய் வருமானம் கிடைச்சது.

ஒரு ஏக்கருக்கு 2,50,000 ரூபாய்ச் செலவாகும். அந்த வகையில 62,50,000 ரூபாய் செலவு போக 25 ஏக்கருக்கும் சேர்த்து 37,50,000 ரூபாய் லாபம் கிடைச்சது.

நாங்க வழக்கமான மார்க்கெட்லதான் விற்பனை செய்றோம். அதனால, இயற்கை விளைபொருள்னு கூடுதல் விலையெல்லாம் கிடைக்கிறதில்லை. மார்க்கெட்ல விலை அதிகரிச்சா கூடுதல் லாபம் கிடைக்கும்” என்று சொல்லி விடைகொடுத்தார் பழனிச்சாமி.

இப்படிதான் சாகுபடி செய்யணும்..

ஒரு ஏக்கர் நிலத்தில் சௌசௌ சாகுபடி செய்வது குறித்துப் பழனிச்சாமி சொன்ன விஷயங்கள் இங்கே…

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில், பத்தடி இடைவெளியில் வெளிப்பக்கம் வரிசையாகக் கல்தூண்களையும், உள் பக்கத்தில் மரக்கொம்புகளையும் நட்டு, மேல் பகுதியைக் கம்பிகள் கொண்டு பிணைத்துப் பந்தல் உருவாக்க வேண்டும். பிறகு, நான்கடி சதுரம் 1 அடி ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழிக்கும் ஒன்பது அடி இடைவெளி இருக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 100 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரத்தைக் கொட்டி மண்ணைப் போட்டுக் குழியை மூடி விட வேண்டும். பிறகு கையால் சிறிது பள்ளம் பறித்து, ஒவ்வொரு குழியிலும் தலா நான்கு விதைக்காய்களை வைத்து மூடி, பாசனம் செய்ய வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துப் பாசனம் செய்துகொள்ளலாம். வாரம் ஒருமுறை ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம் என்ற கணக்கில் பாசன நீரில் கலந்து விட வேண்டும். மாதம் ஒருமுறை ஒவ்வொரு குழியிலும் 50 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரம் இட வேண்டும். அவ்வப்போது களைகளை அகற்றி வர வேண்டும். விதைத்த 50-ம் நாளுக்குமேல் கொடிகள் ஓடி, பந்தலில் படர ஆரம்பிக்கும். அதன்பிறகு களைகளை அகற்றத் தேவையில்லை. 80-ம் நாளுக்குமேல் காய்களை அறுவடை செய்யலாம். அறுவடை ஆரம்பித்த பின், ஆறு மாதங்கள் வரை காய்கள் கிடைக்கும். 45 நாள்களுக்கு ஒருமுறை பழுத்த இலைகளைக் கிள்ளி விட வேண்டும்.

சௌசௌ பயிரில் பழ ஈக்களின் தாக்குதல் இருக்கும். ஒரு ஏக்கருக்கு 6 முதல் 12 இடங்களில் இனக்கவர்ச்சி பொறிகளை வைத்துப் பழ ஈக்களைக் கட்டுப்படுத்தலாம். பிஞ்சுகளைக் குறிவைத்துத் தாக்கும் ஒருவகையான அந்துப்பூச்சிகளை மூலிகைப் பூச்சிவிரட்டித் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

“விதைக்காய் வெளியேதான் வாங்க வேண்டும்!” 

“சௌசௌ காய்களைப் பறிக்காமல் கொடியிலேயே விட்டு வைத்தால் காய்கள் முளைவிடும். அந்தக் காய்களைத்தான் நடவு செய்யப் பயன்படுத்த வேண்டும். நம் தோட்டத்தில் விளைந்த காயையே விதைக்காயாகப் பயன்படுத்தும்போது, மகசூல் குறைவாகத்தான் கிடைக்கும். அதனால், ஒவ்வொருமுறை நடவு செய்யும்போதும் விதைக்காயை வெளியே இருந்து வாங்கி வந்து நடவு செய்வது நல்லது.

எங்க பகுதி விவசாயிகள் மேட்டுப் பாளையம் பகுதியில் இருந்துதான் சௌசௌ விதைக்காய்களை வாங்கிட்டு வர்றாங்க. எங்ககிட்ட இருந்து பண்ணைக்காடு, தாண்டிக்குடி பகுதி விவசாயிகள் விதைக்காய்களை வாங்கிட்டுப்போறாங்க. விதைக்காயை நேரடியாக விதைக்காம பதியன் போட்டு அரையடி வளர்ந்த பிறகு நாற்றாகவும் நடலாம்” என்கிறார் பழனிச்சாமி.

தொடர்புக்கு,பழனிச்சாமி செல்போன்: 9842169600

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *