பந்தல் மூலம் காய்கறிகள் சாகுபடி

பந்தல் கொடிக் காய்கறிகள் சாகுபடி முறைகள் குறித்து சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்..இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மருத்துவக் குணம் கொண்ட மைமோர்டிகா சாரண்டியா என்ற தாவரவியல் பெயர் கொண்டது பாகற்காய். நீர்ச்சத்து நிறைந்த டிரைகோசாந்தஸ் குகுமிரினா என்ற தாவரவியல் பெயர் கொண்டது புடலங்காய். நார்ச்சத்து நிறைந்த லூபா அக்யூடாங்குலா என்ற தாவரவியல் பெயர் கொண்டது பீர்க்கங்காய். இத்தகைய பந்தல் கொடிக் காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு அதிக லாபம் பெறலாம்.

ரகங்கள்:

  • பாகற்காயைப் பொருத்தவரை கோ 1, எம்.டி.யூ. 1, அர்காஹரித், ப்ரியா, பிரீத்தி, கோபிஜிஎச்1, என்.எஸ். 244, என்.எஸ். 453, யு.எஸ் 6214, யு.எஸ். 390, அபிஷேக் ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு உகந்தவை.
  • புடலங்காயைப் பொருத்தவரை கோ 1, கோ 2, பி.கே.எம். 1, எம்.டி.யூ. 1, பி.எல்.ஆர்.(எஸ்.ஜி.) 1, பி.எஸ்.எஸ். 694, மைக்கோ குட்டை, எம்.எச். எஸ்.என். 1 ஆகிய ரகங்களும், பீர்க்கங்காயைப் பொருத்தவரை கோ 1, கோ 2, பி.கே.எம். 1, அர்காசுமித், அர்காசுஜாத், என்.எஸ். 3, என்.எஸ். 4, என்.எஸ். 5 ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
  • பாகற்காயைப் பொருத்தவரை ஏக்கருக்கு 1 கிலோ 800 கிராம் விதையும், புடலங்காய் மற்றும் பீர்க்கங்காயைப் பொருத்தவரை ஏக்கருக்கு 600 கிராம் விதையும் தேவைப்படும். பாகற்காய் வரிசைக்கு வரிசை 2 மீட்டர், குழிக்கு குழி 1.5 மீட்டர் இடைவெளி விட்டும், புடலங்காய் மற்றும் பீர்க்கங்காயை வரிசைக்கு வரிசை 2.5 மீட்டர், குழிக்கு குழி 2 மீட்டர் இடைவெளி விட்டும் நடவேண்டும். சாகுபடி முறைகள் மூன்று பயிர்களுக்கும் பொதுவானவை.
  • ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலம் சாகுபடிக்கு ஏற்ற பருவமாகும். அங்ககச் சத்து கொண்ட கார அமிலத்தன்மை கொண்ட நல்ல மண் கொண்ட மணற்சாரி வண்டல் மண் ஏற்றது.
Courtesy: Dinamani
Courtesy: Dinamani

விதைத்தல்:

  • ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் ப்ளுரோசன்ஸ் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
  • மூன்று முறை நன்கு உழுது, குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு கன அடி அளவில் குழிகள் எடுத்து நீர்பாய்ச்சி குழிக்கு 5 விதைகள் ஊன்ற வேண்டும். பின்னர் வாரம் ஒரு முறை நீர்பாய்ச்ச வேண்டும். பின் குழிக்கு 2 செடிகள் விட்டு 15-ஆம் நாள் கலைத்துவிட வேண்டும்.
  • குழிக்கு 10 கிலோ தொழு உரம், 15 கிராம் யூரியா, 75 கிராம் சூப்பர் பாஸ்பேட், 20 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இடவேண்டும். விதைத்த 30-ஆம் நாள் குழிக்கு 20 கிராம் யூரியா மேலுரமாக இடவேண்டும்.
  • கொடிகள் படர கல்தூண்கள், கம்பிகள் கொண்டு இரண்டு மீட்டர் உயரத்தில் முறையாகப் பந்தல் அமைக்க வேண்டும். மூன்று முறை களை எடுக்க வேண்டும்.
  • பாகற்காய், பீர்க்கங்காய்க்கு 10 லிட்டர் நீரில் இரண்டரை மி.லி. கலந்து பெறப்பட்ட 250 பி.பி.எம். எத்திரல் கரைசலை விதைத்த 15-ஆம் நாள் முதல் வாரம் ஒரு முறை வீதம் நான்கு முறை தெளிக்க வேண்டும்.
  • புடலங்காய்க்கு 10 லிட்டர் நீரில் ஒரு மி.லி. கலந்து பெறப்பட்ட 100 பி.பி.எம். எத்திரல் கரைசலை விதைத்த 15-ஆம் நாள் முதல் வாரம் ஒரு முறை வீதம் நான்கு முறை தெளிக்க வேண்டும். இதன் மூலம் ஆண் பூக்களின் எண்ணிக்கை குறைந்து பெண் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மகசூலும் அதிகரிக்கும்.

பூச்சி நோய் நிர்வாகம்:

  • வண்டுகள் மற்றும் இலை தின்னும் புழுக்களை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. மாலத்தியான் 50 ஈ.சி. அல்லது டைமீதோயேட் 30 ஈ.சி. அல்லது மிதைல் ஓ டெமட்டான் 25 ஈ.சி. மருந்துகளில் ஒன்றை தெளிக்கவும்.
  • பழ ஈயைக் கட்டுப்படுத்த நன்கு உழவு செய்து, பழ ஈயின் கூட்டுப்புழுக்களை வெளிப்படுத்தி அழிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட காய்களை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும். இப்பழ ஈயின் தாக்குதல் வெப்பக் காலத்தில் மிகக் குறைவாகவும், மழைக்காலத்தில் மிக அதிகமாகவும் இருக்கும். எனவே, அதற்கேற்ப விதைப்பு தேதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.
  • ஒரு பாலிதீன் பையில் 5 கிராம் நனைந்த கருவாடு ஒரு மி.லி. டைக்குளோர்வாஸ் நனைத்து பஞ்சு வைத்த கருவாட்டுப் பொறிகளை ஏக்கருக்கு இருபது என்ற அளவில் வைத்து பழ ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.
  • லிண்டேன் பூச்சிக்கொல்லி மற்றும் தாமிர, கந்தகப் பூசணப் கொல்லிகள் இப்பயிர்களுக்கு தாவர நச்சாகப் பயிரை பாதிப்பதால் அவற்றை உபயோகிக்கக் கூடாது.

மானிய உதவி:

  • தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு கல் தூண் அல்லது சிமென்ட் தூண் அமைத்து, இரும்புக் கம்பி கொண்டு 2 மீட்டர் உயரமுள்ள முறையான பந்தல் அமைத்து, பந்தல் காய்கறி சாகுபடி செய்வதற்காக தோட்டக்கலைத் துறை மூலம் 50 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
  • ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு ஹெக்டேர் பரப்பில் பந்தல் அமைக்க ரூ. 1.50 லட்சம் வரை வழங்கப்படுகிறது. தங்கள் பகுதி தோட்டக்கலைத் துறை அதிகாரிகளை அணுகி இந்த மானிய உதவிகளை விவசாயிகள் பெறலாம் என்றார் அவர்.
  • ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலம் சாகுபடிக்கு ஏற்ற பருவமாகும். அங்ககச் சத்து கொண்ட, கார அமிலத்தன்மை கொண்ட, நல்ல மண் கொண்ட மணற்சாரி வண்டல் மண் ஏற்றது

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பந்தல் மூலம் காய்கறிகள் சாகுபடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *