உயரம் இரண்டே அடி…4 லிட்டர் பால்… கின்னஸில் இடம் பெற்ற நாட்டு மாடு!

ஒரு காலத்தில் வீடுகளில் மாடுகள் வைத்திருப்பது கெளரவம். ஆனால், இயந்திரங்களின் வரவுக்குப் பிறகு முற்றிலும் மாறுபட்டுவிட்டது. அதன் விளைவு இன்றைக்குக் கிராமங்களில் அரிதாகவே காணக் கிடைக்கும் மாடுகள்தான்.

முன்பெல்லாம் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் எல்லாம் நாட்டு ரக மாடுகளாகவே இருக்கும். காங்கேயம், பர்கூர், பெரம்பலூர், மணப்பாறை, புங்கனூர் குட்டை, கிர், சாஹிவால் எனப் பல்வேறு இனங்கள் அதில் அடக்கம். இன்றைக்கு நாம் காணும் மாடுகளில் பெரும்பாலானவை நாட்டு மாடுகளே அல்ல. ஜெர்ஸி, ஹோல்ஸ்டைன், ப்ரீசியன், ரெட்டேன் போன்ற கலப்பின ரகங்கள் அதிகரித்துவிட்டன. இதன் விளைவாக நாட்டு மாடுகள் அழிவின் விளிம்பில் உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்தியாவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்த நாட்டு மாடுகளாக இருந்தாலும் நாட்டு மாட்டு ஆர்வலர்கள் அவற்றைப் பாதுகாத்துவருகின்றனர்.

வெச்சூர் நாட்டு மாடு

அதிகம் அறியப்படாத நாட்டு மாட்டு இனங்களில் முக்கியமானது வெச்சூர் இன மாடு. இவ்வின மாடுகள் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவில்தான் இருக்கின்றன.

கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டத்தில் உள்ள வெச்சூர் என்ற ஊரின் பெயரினால் இம்மாடுகள் அழைக்கப்படுகின்றன. வெச்சூர் மாடுகள் இரண்டடி முதல் இரண்டரை அடி மட்டுமே உயரம் கொண்டவை.

வெச்சூர் மாடு உலகின் சிறிய மாடாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது, இதன் தனிச் சிறப்பு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும் இம்மாடுகளை எளிதில் கையாளலாம். வெச்சூர் மாடுகள் பற்றிய ஆர்வம் காரணமாக, விலங்கு வளர்ப்பு பேராசிரியரான சோசம்மா லைப் மற்றும் அவரது மாணவர்கள் கொண்ட குழு இணைந்து செய்த பணியின் காரணமாக இந்த மாடுகள் அழிவிலிருந்து காக்கப்பட்டன. இவர்களால் 1989-ம் ஆண்டில், நாட்டு மாட்டு பாதுகாப்பு அமைப்பு தொடங்கப்பட்டது.

1998-ல் பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பு விவசாயிகளின் உதவியுடன் அமைக்கப்பட்டது. 1960-ம் வரை வெச்சூர் மாடுகள் கேரளத்தில் உச்சகட்ட வியாபாரமாக இருந்தன. ஆனால், இந்த மாடுகள் கலப்பினத்துக்கு உட்பட்டதால் அரிய வகைப் பட்டியலில் இணையும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இதன் விளைவு 2000-ம் ஆண்டில், வெச்சூர் மாடு உள்நாட்டு விலங்குகளுக்கான FAO-ன் உலக கண்காணிப்புப் பட்டியலில், உடனடியாக அழியக்கூடிய விலங்கு பட்டியலில் இடம் பெற்றது. ஒரு விலங்கு இனத்தில் ஆண், பெண் விலங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறையும்போது இந்தப் பட்டியலில் சேர்க்கப்படுவது வழக்கம். இந்த மாடுகள் சுமார் 200 மாடுகள் இருக்கலாம் என அப்போது கருதப்பட்டது. இவற்றில் கிட்டத்தட்ட 100 மாடுகள் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இருந்ததாகக் கணக்கிடப்பட்டது. இந்த மாடுகளின் சராசரி எடை 130 கிலோ. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக மூன்று லிட்டர் பால் கறக்கக் கூடியது.

வெச்சூர் நாட்டு மாடு

திருப்பூர் மாவட்டம், முத்தூர் பேரூராட்சி, மேட்டுக்கடை கிராமத்தில் வச்சூர் மாடு வளர்த்து வரும் நந்தகுமார் பேசும்போது, “மாடு இரண்டரை அடிதான் இருக்கிறது. ஒரு நாளுக்கு இரண்டு முதல் இரண்டரை லிட்டர்வரை பால் கிடைக்கிறது. இதற்குக் குறைந்த அளவு உணவு கொடுத்தால் போதும். ஆனால், அதிக பால் கொடுக்கக் கூடியது. இதன் பால் அதிக சத்தும் கூட. இதன் பாலை விற்பனை செய்வதில்லை, நாங்களே சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறோம். இதன் எருவினை தனியாக சேகரித்து மரங்களுக்கும் பயன்படுத்துகிறோம். மிகவும் சாதுவான குணம் படைத்தது. பார்ப்பதற்குச் சிறு கன்றைப் போலவே இருக்கும். சிலர் இது கன்றுதான் என நினைத்து எளிதில் கடந்து செல்வர். நாட்டு மாடுகளைப் பற்றி தெரிந்த சிலர் எளிதில் அடையாளம் காண முடியும். இதற்கு உணவாகப் பசும்புல், இலை, தழைகளைக் கொடுத்தாலே போதுமானது. எங்களிடம் இருக்கும் வச்சூர் மாடு 8 கன்றுகளை பிரசிவித்திருக்கிறது” என்றார்.

நன்றி: பசுமை விகடன்

 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *