பிரேஸில் நாட்டுக்கே பால் வார்த்த இந்தியப்பசு ‘கிருஷ்ணா’

ந்தியாவிலிருந்து பிரேசிலுக்கு போய் பால் புரட்சியைத் துவக்கிவைத்த ஒரு பசுவின் கதை இது. கிர் இனத்தைச் சேர்ந்த அந்தப் பசு 1960-ம் ஆண்டு பிரேசில் விவசாயிக்குப் பரிசளிக்கப்பட்டது. ’கிருஷ்ணா’ என்ற பெயர் கொண்ட அந்தப்பசு மூலம் ஆரோக்கியமான, அதிக அளவு பால் தரக்கூடிய புதிய கலப்பினம் பிரேசிலில் உருவானது, அப்போதிலிருந்து பிரேசிலில் பால் உற்பத்தி ஏறுமுகம்தான்.

கிருஷ்ணா வாரிசுகள்

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர், ஆங்கிலேய அதிகாரிகள் அரசக் குடும்பத்திற்கு சொந்தமான மாடுகளைக் கைப்பற்றிக் கொண்டிருந்தனர். தற்போதைய குஜராத் மாநிலத்தில் முன்னர் பாவ்நகரின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த மஹாராஜா ஸ்ரீ வீர்பத்ர சிங் அதிகமான மாடுகளை வளர்த்து வந்தார். அவற்றை முழுவதுமாக அதிகாரிகளுக்குக் கொடுக்காமல் சிலவற்றை தன்வசம் வைத்துக் கொண்டார். அந்த மாடுகளில் ஒன்றுதான் கிருஷ்ணா.

பிரேசிலைச் சேர்ந்த விவசாயி செல்சோ கார்சியா. 1958 -ம் ஆண்டு தன்னுடைய உதவியாளர் இல்டெபோன்சோ டோஸ் என்பவரை மாடு வாங்க அனுப்புகிறார். அவரும் இந்தியா முழுவதும் தரமான மாடுகளை வாங்கப் புறப்படுகிறார். ஒவ்வொரு பசுவாக பார்த்து அதைப்பற்றிய குறிப்புகளை தன் முதலாளியான செல்சோ கார்சியாவுக்கு அனுப்புகிறார். அப்போது வந்த புகைப்படங்களில் கிருஷ்ணா என்ற மாடு செல்சோவை அதிகமாக ஈர்க்கிறது. அவரை ஈர்ப்பதற்கு முக்கியமான காரணம், ‘இந்த மாட்டைப் பற்றி சொன்னால் முழுமையாக இருக்காது. அதனால்தான் புகைப்படமாக அனுப்புகிறேன். அவ்வளவு பெரிய திறமை கொண்ட மாடு இது” என்று குறிப்பிட்டிருந்ததுதான். அந்தக் மாட்டை உடனே வாங்கி பிரேசிலுக்கு அனுப்புங்கள் என்று பதில் கடிதம் எழுதுகிறார், செல்சோ.

இதனால் டோஸ், கிருஷ்ணாவையும் பிற பசுக்களையும் தனக்கு விற்றுவிடுமாறு மஹாராஜாவை கேட்கிறார். சுமார் ஒரு வருட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவரிடம் இருந்து கிருஷ்ணாவுடன் சேர்த்து பிற மாடுகளையும் கப்பல் மூலமாக பிரேசிலுக்கு வாங்கிச் செல்கிறார். கிருஷ்ணா பிரேசில் கொண்டுவரப்பட்ட காலகட்டத்தில் மரபணு மாற்றத் தொழில்நுட்பமும் பிரேசிலில் அதிகமான வளர்ச்சி அடைந்திருந்தது. இந்தத் தொழில்நுட்பம்தான் அதிவேகம் கொண்ட இந்தியக் காளை மற்றும் பசுக்களின் மரபணுக்கள் பிரேசில் முழுதும் பரவ காரணமாக இருந்தது.

1960இல் பிரேசிலுக்கு கொண்டுவரப்பட்ட கிருஷ்ணாவானது, கலப்பின இனப்பெருக்கத்திற்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. செல்சோவின் பண்ணையில் இருந்த கிருஷ்ணாவின் எடை கவனிப்பு காரணமாக கூடியது. கிருஷ்ணா  மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோனது. சிறிது நாட்களே பிரேசிலில் வாழ்ந்த கிருஷ்ணா பசு சகினா என்ற ஒரு வாரிசைக் கொடுத்து விட்டுத்தான் சென்றது. அதிலிருந்து பெருகிய சகினாவின் வாரிசுகள் இப்போது பிரேசிலின் பால் உற்பத்தியில் 80 சதவிகிதத்தை ஆக்கிரமித்துள்ளன.

பாவ்நகர் மஹாராஜா, 1965-ம் ஆண்டு தன்னிடம் இருந்த பசுக்கள் மற்றும் காளைகள் எவ்வாறு இருக்கின்றன என்பதைக் காண பிரேசிலில் இருக்கும் செல்சோவின் பண்ணைக்கு சென்றுள்ளார். அங்குத் தனது மாடுகள் பராமரித்து வரும் முறையைப் பார்த்து மீதமிருக்கும் அனைத்து மாடுகளையும் செல்சோவிற்கே கொடுத்துவிட ஆர்வமாக இருந்திருக்கிறார். ஆனால் சுகாதாரக் கட்டுப்பாடுகளால் கடைசி வரை மகாராஜாவால் பிரேசிலுக்கு அனுப்ப முடியவில்லை.

செல்சோவின் பேரன் குல்ஹெர்ம் சாக்டீன், “கிருஷ்ணா வந்தது பிரேசிலில் கால்நடைகளின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை. அந்த கிர் வகை மாடுகளின் கலப்பு பிரேசில் பூர்வீக மாடுகளில் பால் உற்பத்தியை அதிகரித்தது. பிரேசிலில் உள்ள கிர் காளைகளில் 80 அசதவிகிதம் கிருஷ்ணாவின் வாரிசுகள்தான். இப்போது அமெரிக்க கண்டங்களில் உள்ள அனைத்து நாடுகளிலும் கிருஷ்ணாவின் வாரிசுகள் நிறைந்துள்ளன. இந்த மாடுகளால் பயனடைந்தவர்கள் கோடிக்கணக்கிற்கும் மேல் இருக்கும். இந்தியாவிற்கு எப்போதும் நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்” என்கிறார். மேலும், பிரேசிலிய கிர் வகை பசுக்கள் மற்றும் காளைகளை இறக்குமதி செய்ய இந்திய அதிகாரிகள், இந்நிறுவனத்தை அண்மையில் தொடர்பு கொண்டதாகவும் குல்ஹெர்ம் சாக்டீன் சொல்கிறார்.

ஒரு காலத்தில் காளையைக் கட்டி நெல்பயிரை மிதித்த பாரம்பர்ய நாடு, இந்தியா… இப்போது தனக்கான அடையாளத்தைத் தொலைத்து, அதனை மற்ற நாடுகளை நாடுவது வருத்தம் தரக்கூடிய விஷயமாகத்தான் இருக்கிறது.

நன்றி: விகடன்

மேலும் படிக்க: பிபிசி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *