வேலிமசால் பசுந்தீவன சாகுபடி

தமிழகத்தில் மொத்த கால்நடைகளின் எண்ணிக்கை 4 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், இவற்றுக்குத் தேவையான பசுந்தீவனம் கிடைக்கிறதா? என்றால் இல்லை.இதனால், பால் உற்பத்தி மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே அண்மை காலமாக பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உழவியல் துறை உதவிப் பேராசிரியர் பெ. முருகன் கூறியது:

பசுந்தீவனப் பற்றாக்குறையைப் போக்க, அதிக மகசூல் தரும் தீவனப் பயிர்களை இறவையில் பயிரிட்டு ஒரு ஏக்கருக்கு கிடைக்கும் தீவன மகசூலை உயர்த்துவதாலேயே முடியும்.

மேலும் புரதச்சத்து பற்றாக்குறையைத் தவிர்க்க பயறு வகை பசுந்தீவனப் புற்களை சாகுபடி செய்து கால்நடைகளுக்கு கொடுத்து வருகின்றனர்.

இப்போது உள்ள மழை அளவைப் பார்க்கும்போது நெல், உளுந்து உள்ளிட்ட வேளாண் பயிர்களை சாகுபடி செய்வதைக் காட்டிலும் பசுந்தீவனப் புற்களை விதை உற்பத்திக்காக சாகுபடி செய்யும்போது இரட்டிப்பு வருவாய் ஈட்ட முடியும்.

குறிப்பாக, வேலிமசால் பசுந்தீவனப் புல்லை விதை உற்பத்திக்காக சாகுபடி செய்தால், 1 ஏக்கருக்கு 100 கிலோ முதல் 110 கிலோ வரை விதை உற்பத்தி செய்யலாம்.

இதைச் சாகுபடி செய்வதால் மண் வளம் மேம்படுத்தப்படும். பூச்சி, நோய் ஆகியன இந்தப் பயிரைத் தாக்குவதில்லை. குறைந்த நீரிலேயே சாகுபடி செய்துவிடலாம்.

குறைந்த அளவு வேலையாட்கள் போதுமானதாகும். இதில் 19.2 சதவீதம் புரதம், 27 சதவீதம் உலர்த்தீவனத் தன்மை, 55.3 சதவீதம் செரிக்கும் தன்மையும் கொண்டுள்ளதால் கால்நடைகள் விரும்பிச் சாப்பிடுகின்றன. எனவே பால், மாமிச உற்பத்தி பெருகுகிறது

  • பருவம்: ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம்.
  • நிலம்: எல்லா மண் வகைகளிலும் பயிர் செய்யலாம்.
  • முன்செய் நேர்த்தி: நன்கு பன்படுத்தப்பட்ட நிலத்தில் 16-20 ச.மீ. பாத்திகள் அமைக்க வேண்டும்.
  • விதையளவு: ஹெக்டேருக்கு 20 கிலோ
  • இடைவெளி: வரிசைக்கு வரிசை 50 செ.மீ. இடைவெளி விட்டு நெருக்கமாக விதைக்க வேண்டும்.
  • விதை நேர்த்தி : விதைகள் நன்றாக முளைக்க, கொதிக்க வைத்த குளிர்ந்த நீரில் விதைகளைப் போட்டு 5 நிமிடங்கள் கழித்து நீரை வடிகட்டி விட்டு நிழலில் உலர்த்தி பின்பு விதைக்கலாம்.
  • உர அளவு: ஹெக்டேருக்கு தொழு உரம் 20 டன், தழைச்சத்து 25 கிலோ, மணிச்சத்து 40 கிலோ, சாம்பல் சத்து 20 கிலோ.
  • பின்செய் நேர்த்தி : விதைத்த 30 நாள்களுக்கு பின்பு ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னும் களை எடுக்கவும்.
  • நீர்ப் பாசனம்: 10-15 நாள்களுக்கு 1 முறை
  • அறுவடை: விதைத்த 80 நாள்களில் முதல் அறுவடையும், பிறகு 40-45 நாள்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம்.
  • மகசூல்: ஹெக்டேருக்கு 1 ஆண்டுக்கு 80 முதல் 100 டன்கள் வரை மகசூல் கிடைக்கும்

வேலிமசால் குறித்த மேலும் விவரங்களை காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு, சாகுபடி தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்றார் பெ. முருகன்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *