சென்னையில் நல்ல கீரை!

சத்தான உணவு என்றவுடன், டாக்டர்கள் உட்பட அனைவரும் பரிந்துரைப்பது, “சாப்பாட்டுல கீரை சேர்த்துக்குங்க” என்பதுதான். கீரையில் நார்ச்சத்து, வைட்டமின் சத்துகள், ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. அத்துடன், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய், இதயக் கோளாறுகள் போன்றவை குறைய வாய்ப்பு உண்டு.

ஆனாலும், சென்னை போன்ற நகரங்களில் கீரை சாப்பிட விரும்புபவர்கள், அய்யய்யோ வேண்டாம் என்று நினைக்க வைக்கும் வகையில் இருக்கிறது கீரை பயிரிடுதல். காரணம், சென்னையில் பல இடங்களில் சாக்கடை அருகேதான் கீரை பயிரிடப்படுகிறது, கீரையில் நிறைய பூச்சிகள், களைகள் இருப்பது, குறிப்பாகப் பூச்சிக்கொல்லி மருந்து அடித்திருப்பது போன்றவைதான் கீரையை விரும்பாமல் போவதற்குக் காரணம்.

பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்ட கீரைகளில் சுவை குறைந்துபோவது மட்டுமில்லாமல், ஒரு வகை நாற்றமும் இருக்கும். இது உடல்நலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அப்படி என்றால், எப்படித்தான் கீரையைச் சேர்த்துக்கொள்வது?

இந்தப் பின்னணியில் மக்களுக்கு ஆரோக்கியம் தரும் இயற்கை உரமிடப் பட்ட கீரைகளை உற்பத்தி செய்கிறது ‘நல்ல கீரை’. விவசாயம் சந்திக்கும் நஷ்டம் குறித்துப் பயந்து பின்வாங்குபவர்கள் மத்தியில், முன்னுதாரணமாகத் திகழ்கிறது இந்தக் குழு. நல்ல கீரையில் இணைந்து செயல்படுபவர்கள் பெரும்பாலும் முன்னாள் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள். விவசாயம் மீதும், மக்களின் ஆரோக்கியம் மீதும் கொண்ட ஆர்வத்தால் களத்தில் இறங்கிவிட்டனர்.

திருவள்ளூர் அருகேயுள்ள திருநின்றவூரில் ஐம்பது சென்ட் நிலத்தில் கீரை வகைகளை வளர்த்துவரும் இந்த அமைப்பு, சென்னையில் கீரைகளை விநியோகிக்கிறது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சென்னை தி.நகர், அடையாறு, திருவான்மியூர் , வேளச்சேரி, அம்பத்தூர், வில்லிவாக்கம்,கே.கே. நகர், நங்கநல்லூர் போன்ற பகுதிகளில் கீரை விநியோகிக்கப்படுகிறது. பல கார்ப்பரேட் நிறுவனங்களின் உணவகங்களுக்குத் தினசரி விநியோகம் செய்யப்படுகிறது.

“முதலில் பதினைந்து இயற்கை அங்காடிகளில் கீரையை விற்பனைக்குக் கொடுத்து வந்தோம். இப்போது எண்பது இயற்கை அங்காடிகளுக்குக் கொடுத்து வருகிறோம். ஃபிளாட்களில் கூட்டாக ஆர்டர் செய்பவர்களுக்கும் கீரை விநியோகிக்கிறோம். இயற்கை விவசாய முறையில் தயாரிக்கப்பட்டது என்பதால், எங்களுடைய உற்பத்தியால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். இதனால் தேவையும் அதிகமாகிக் கொண்டே வருகிறது” என்கிறார் நல்ல கீரையின் மீரா.

ஒவ்வொரு வாரமும் என்னென்ன கீரைகள் கிடைக்கும் என்ற பட்டியல் வாடிக்கையாளர்களுக்குக் குறுந்தகவல் மூலம் அனுப்பப்படுகிறது. தங்களுக்குத் தேவையானவற்றைத் தொலைபேசி மூலம் அவர்கள் ஆர்டர் செய்துகொள்ளலாம். ஆர்டரின்படி சனிக்கிழமைகளில் வாடிக்கையாளர்களுக்குக் கீரை விநியோகிக்கப்படும்.

தொடர்புக்கு: www.nallakeerai.com/ 09962611767

நன்றி: ஹிந்து

நுகர்வோருக்கு நேரடி விற்பனை செய்வதற்கு இவர்கள் ஒரு நல்ல உதாரணம். நகரங்களுக்கு அருகே உள்ள சிறிய ஊர்களில் இருந்து நகரத்திற்கு கொண்டு வந்து நேரடி விற்பனை செய்தால் நல்ல லாபமும் வரும். நுகர்வோரின் நேரடி தொடர்பு மூலம் சந்தைக்கு வேண்டிய படி சாகுபடி செய்யவும் வாய்ப்பு உண்டு!


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “சென்னையில் நல்ல கீரை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *