சுத்தத்திற்கு பரிசு பெற்ற இந்திய கிராமம்!

“ஊரா இது? எங்க பாரு குப்பை…சாக்கடை.. தெருப்புழுதி” என்றெல்லாம் அடிக்கடி மூக்கைப் பொத்திக் கொள்பவர்களா நீங்கள்? ஒரு முழு கிராமமே சுத்தம்…சுகாதாரம் என்பதை ராணுவக் கட்டுப்பாடு அளவுக்கு ஃபாலோ செய்கிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அது எங்காவது வெளிநாட்டிலா இருக்கும் என்று பெருமூச்சு விடுபவர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்… அந்த கிராமம் இந்தியாவுக்குள்தான் இருக்கிறது. அது மாவ்லின்னாங்!

மாவ்லினாங்

மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் இருந்து 75 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது மாவ்லினாங் (Mawlynnong) கிராமம். மாவ்லின்னாங் முழுவதும் சுத்தம்…சுத்தம்…சுத்தம். ‘கடவுளின் தோட்டம்’ என்று பெயர்ப்பலகையே இக்கிராமத்தின் புகழ் பாடுகிறது.

ஆசியாவிலேயே தூய்மைக்கான முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்த கிராமம். மூங்கில் கூடைகளால் சேகரிக்கப்படும் வீட்டுக் குப்பைகள், மிகப்பெரிய குப்பைக் குழிகள் வெட்டப்பட்டு சேகரிக்கப்படுகின்றன. பிறகு, அதைத் தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகைப்படுத்தி விவசாயத்துக்கான உரம் தயாரிக்கின்றனர். பிளாஸ்டிக் பைகளுக்குத் தடா.

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதங்களில் கிராமமே இணைந்து மரக்கன்றுகளை நடுகிறது. அதேபோல், வெளியூர்க்காரர்கள் யாரேனும் தெரியாமல் குப்பையைப் பொதுவெளியில் கொட்டிவிட்டால், தயங்காமல் எடுத்துக் குப்பைத் தொட்டியில் கொட்டிவிடுகின்றனர்.

 

உயிர் பாலம்! Courtesy: Lonely planet

அதற்காக எந்தத் தண்டனையும் கிடையாது. கேட்டால், ‘தூய்மை உணர்வு முழுமனதுடன் வரவேண்டும். தண்டனை கொடுத்து அதை உருவாக்க முடியாது’ என்கிறார்கள் கிராம மக்கள். நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும் துளி பாசியோ, குப்பையோ இல்லாமல் சுத்தமாகப் பராமரிக்கிறார்கள்.

தண்ணீர் பளிங்கு மாதிரி குதித்தோடுகிறது. நடைபாதையின் இருபுறமும் வண்ண வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஊர் முழுவதையும் பறவைப் பார்வை பார்த்து ரசிக்க ஆங்காங்கே மரவீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவ்லின்னாங் கிராமத்தில் சிமென்ட், கான்க்ரீட் வீடுகள் மிகக்குறைவு. பழைமை மாறாத மண்வீடுகளையும், மூங்கில் வீடுகளையுமே அதிகளவில் இக்கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். ஊருக்குள் பல நூற்றாண்டு கால பழைமையான ஆலமரத்தின் விழுதுகளால் ஆன இயற்கைப் பாலம் ஒன்று மாவ்லின்னாங் கிராமத்தையும், அருகிலிருக்கும் கிராமங்களையும் இணைக்கிறது. ஊஞ்சல் ஆடுவது போன்ற சுகத்தை இந்தப் பாலம், கடந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் தருகிறது. விவசாயம் இங்கு முக்கியத் தொழில். மிளகு, பெர்ரி பழங்கள், வெற்றிலை பறித்தல் ஆகியவை இங்கு காணப்படும் தொழில்களில் சில. ஆரஞ்சும், எலுமிச்சையும், அன்னாசியும் துளிக்கூட இடைவெளிவிடாமல் வளர்ந்து படர்ந்து பார்ப்பவர்களைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன.

அடுத்தமுறை சுற்றுலா செல்ல முடிவெடுப்பவர்கள், தயங்காமல் மாவ்லின்னாங் சென்று வரலாம். ஏனெனில், இங்கு விருந்தோம்பலும் மிகப்பிரமாதம். மூங்கில் அரிசி, முட்டைக் கறி, அன்னாசிப்பழக் கூட்டு என்று அசத்தலான உணவுகள் நிச்சயம் கிடைக்கும். கூடவே அசைவ உணவுகளும் ஏகப்பிரசித்தம். இவர்களுடைய ஜடோக் (jadoh) என்னும் உணவு மிகப்பாரம்பர்யமான சுவை கொண்டது. ஊருக்குள் நுழையும்போதே சுத்தமான பராமரிப்பு பற்றிய அறிவுரை சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. கூடவே அன்பும், பரிவுமான பேச்சும் மொழி தெரியாவிட்டாலும் நம்மை அவர்களுடன் மனதளவில் இணைத்துவிடுகிறது.!

நன்றி: விகடன், லோனிலி பிளான்ட்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “சுத்தத்திற்கு பரிசு பெற்ற இந்திய கிராமம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *