நீரில் கரையும் பாலிதீன் பைகள் தயாரிக்கும் கோவை இளைஞர்!

வாகனப் பெருக்கத்தால் ஒருபுறம் காற்று மாசுபட்டு வருகிறதென்றால், மக்காத பாலிதீன் பைகளால் நம் பூமி கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக மாறி வருகிறது. நீர்நிலைகளில் தேங்கியுள்ள பாலிதீன் பைகளால் வெள்ளப் பேரழிவுகளை சந்தித்த வரலாறும் நமக்கு உள்ளது.

நம் நாடு என்று மட்டும் இல்லை உலகளவில் சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக, இந்த பாலிதீன் எனும் மக்காத பிளாஸ்டிக் பைகள் விவகாரம் பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. காலம் தாழ்த்தி விழித்துக் கொண்டாலும், ஒவ்வொரு நாடும் தங்களது மண்வளத்தைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்திலும் கூட 40 மைக்ரான்ஸ்க்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் முழுக்க முழுக்க பிளாஸ்டிக் பைகளுக்கே தடை அமலில் உள்ளது.  ஆனாலும், மக்களிடம் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைப்பது பெரும் சவாலாகவே  இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் தான், மூன்றே மாதங்களில் மக்கி விடும் வகையிலான பாலிதீன் பைகைகளைத் தயாரித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார் கோவையைச் சேர்ந்த இளைஞர் சிபி.

ரிஜெனோ நிறுவனர் சிபி

”மக்காச்சோளக் கழிவு உள்ளிட்ட சில இயற்கையான காய்கறிக் கழிவுகளுடன் பேப்பர் கலந்து இந்தப் பைகள் தயாரிக்கப்படுவதால், இவை மூன்றே மாதங்களில் மக்கி விடும். இதனால் மண்ணிற்கு எந்தப் பாதிப்பும் வராது,” என்கிறார் சிபி.

அமெரிக்காவில் நிதி தொடர்பான படிப்பை முடித்த சிபிக்கு, அங்கேயே ஆட்டோ பாத் கம்பெனி ஒன்றில் கை நிறையச் சம்பளத்துடன் வேலை கிடைத்தது. ஆனால், சில ஆண்டுகளிலேயே தனது வேலையை ராஜினாமா செய்த அவர், தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்.

தனது தொழில் வெறும் பணம் சம்பாதிப்பதாக மட்டும் இல்லாமல், மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என விரும்பினார் சிபி. அதன்பலனாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் ரீஜெனோ’ (Regeno) என்ற நிறுவனத்தை  தொடங்கி, காய்கறி ஸ்டார்ச்களில் இருந்து எளிதில் மக்கும் பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கத் தொடங்கினார்.

தற்போது சந்தையில் உள்ள பாலிதீன் பைகளை விட இவற்றைத் தயாரிக்க செலவு அதிகம் ஆவதாக கூறும் சிபியிடம் தற்போது 15 பேர் வேலை பார்த்து வருகின்றனர். சிறிய அளவில் ஆரம்பித்துள்ள இந்தத் தொழிலை விரைவில் விரிவுப் படுத்த வேண்டும் என்பதே தனது லட்சியம் என்கிறார் சிபி. மேலும்,

நாங்கள் தயாரிக்கும் இந்த எளிதில் மக்கும் பாலீதின் பைகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதவை. இவற்றை தீயிட்டு எரித்தால் சாம்பலாகும், சுடுநீரில் கரைத்தால் எளிதில் கரைந்து போகும். எதிர்பாராதவிதமாக கால்நடைகள் எங்கள் பைகளைச் சாப்பிட்டாலும், இவை இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்படுவதால் அவற்றிற்கு எந்த உடல்நலப் பாதிப்பும் ஏற்படாது,”  என்று சிபி நம்பிக்கையுடன்  கூறுகிறார்.

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இந்தப் பைகள் கூறப்பட்டாலும், தயாரிப்புச் செலவு அதிகமாக இருப்பதால்  இவற்றின் விலையும் சற்று அதிகமாக உள்ளது. ஆனால், எதிர்காலத்தில் இவற்றின் விலை நிச்சயம் குறையும் என்கிறது ரீஜெனோ.

கோவை மாநகராட்சியுடன் இணைந்து தங்களது பைகளை மக்களுக்கு ரீஜெனோ அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தப் பைகள் ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், இந்தியாவில் விரல்விட்டு எண்ணிவிடும் அளவிற்கே இதன் அறிமுகம் உள்ளது. தென்னிந்தியாவில் பெங்களூருவிற்குப் பிறகு இந்தப் பைகளை அறிமுகப் படுத்தும் முதல்நகரம் கோவையே ஆகும்.

விரைவில் ஆன்லைன் ஸ்டோர் ஆரம்பித்து, இந்தப் பைகளின் விற்பனையை விரிவுப் படுத்த  திட்டமிட்டுள்ளதாக சிபி தெரிவித்தார். அதன் மூலம் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் சில்லறை விலையில் இந்தப் பைகளை குறைந்த விலையில் எளிதாக பெற முடியும் என்கிறார் சமூக அக்கறைக் கொண்ட தொழில்முனைவரான சிபி.

நன்றி: yourstory

மேலும் விவரங்களுக்கு – Regeno


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *