காரைக்குடியில் திராட்சை சாகுபடி செய்து சாதித்தவர்..

கட்டடக் கலையில் பெயர் பெற்ற காரைக்குடி மெல்ல மெல்ல விவசாய விருத்தியையும் எட்டி வருகிறது. செம்மண், களிமண், உலர் மண், உலர் களி மண் என செட்டிநாட்டின் ஊருக்கேற்ப மண் வகை மாறுபட்டாலும், பெரும்பாலும் இருப்பது செம்மண் கலந்த சரளை மண் தான்.மண்வெட்டி கொண்டு வெட்டினால், கல் பூமியில் விவசாயம் எவ்வாறு கால் பதிக்கும் என பலர் சந்தேகிப்பர்.
சந்தேகங்களை தவிடு பொடியாக்கி விவசாய உற்பத்தியில் மெல்ல, மெல்ல தன் இலக்கை எட்டி வருகிறது காரைக்குடி.
திண்டுக்கல், தேனிக்கு மட்டுமே உரித்தான பன்னீர் திராட்சை விவசாயம், தற்போது காரைக்குடியில் கால் பதித்திருப்பதன் மூலம் அடுத்த கட்ட விவசாய புரட்சிக்கு வித்திட்டுள்ளது. முதல் விவசாயத்திலேயே முப்போக திராட்சை விளைச்சலை எட்டியிருக்கிறார் காரைக்குடி விடுதலை அரசு.ஓ.சிறுவயல் அருகே பேயன்பட்டியில் 85 சென்டில் திராட்சை பயிரிட்டு தற்போது அறுவடையை எதிர்பார்த்து காத்துள்ளார்.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

அவர் கூறியதாவது:

  • ஆரம்பத்தில் வீட்டு உபயோகத்துக்காக, 12 பன்னீர் திராட்சை குச்சிகளை தேனியில் இருந்து வாங்கி நட்டு வளர்த்தேன்.
    நல்ல விளைச்சல் தந்தது. தற்போது திண்டுக்கல், தேனியிலிருந்து குச்சி வாங்கி வந்து 85 சென்டில் பயிரிட்டுள்ளேன்.
  • இது ஒரு பணப்பயிர். மூன்று மாதத்துக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். ஒரு செடி 10 முதல் 15 ஆண்டு வரை பலன் தரக்கூடியது. 10 ஆண்டு வரை முழு பலன் தரும். குச்சிகளை வாங்கி வந்து பதியம் போட்டால் 10 நாளில் கிளைகள் உற்பத்தியாகும். அதை நிலத்தில் நட வேண்டும்.
  • 10க்கு 10 இடைவெளியில் கல்லுக்கால் பந்தல் போட்டு 10 மி.மீ., நெடுங்கம்பியை கல்லுக்காலின் மத்தியில் வருமாறும், குறுக்கு கம்பியை அதற்கு ஊடாகவும் ஒரு அடிக்கு, ஒரு அடி இடைவெளி விட்டு பந்தல் போட வேண்டும். நிலத்தில், 2 அடி ஆழத்தில் குழி தோண்டி மரக்கிளைகளை போட்டு மட்க செய்து, மண்புழு உரம் இட வேண்டும், கடலை புண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கு கரைசலை 15 நாளுக்கு ஒரு முறை செடியின் தூர் பகுதியில் ஊற்ற வேண்டும்.
  • ஒரு செடிக்கு ஒரு லிட்டர் ஊற்ற வேண்டும். ஒரு மாத இடைவெளியில் மண்ணை கிளறி விட வேண்டும்.
  • மாட்டு எரு தேவைக்கேற்ப ஒன்றரை மாத இடைவெளியில் இட வேண்டும். ஆறு மாதத்தில் கொடி வந்து பூ பூக்க ஆரம்பித்து விடும். ஒரு ஏக்கருக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
  • ஒரு முறை முதலீடு தான். அதன் பிறகு உரம் மற்றும் தண்ணீருக்கான செலவு மட்டுமே. அதிக பட்சம் ஏக்கருக்கு எட்டு டன், குறைந்த பட்சம்
  • 5 டன் விளைச்சல் எடுக்கலாம்.
  • ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் பார்க்கலாம். தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்புக்கு 09443604406 .
– த.செந்தில்குமார், காரைக்குடி.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *