தென்னைக்கு இசைவான ஊடுபயிர் கோகோ!

“சாக்லேட் மரம்’ என அழைக்கப்படும் கோகோ-வை, தென்னைக்கு இசைவான ஊடுபயிராக சாகுபடி செய்து பயனடையலாம் என தோட்டக்கலைத் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, திருநெல்வேலி தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் டி. சி. கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோகோவின் தாவரவியல் பெயர் “தியோபுரோமா கோகோ’. இது, ஐஸ்கிரீம், கேக், சாக்லேட், ஊட்டச்சத்து பானங்களின் மூலப்பொருளாக விளங்குகிறது. இதனால், அதன் தேவை அதிகரித்துள்ளது.

Photo courtesy: Hindu
Photo courtesy: Hindu

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இசைந்த பயிர்

  • 50 சதவீத நிழலில் வளரும் தன்மை கொண்ட கோகோ, தென்னந்தோப்புகளில் ஊடுபயிராகப் பயிரிட மிகவும் ஏற்றது. 3 முதல் 45 ஆண்டுகள்வரை பலன் தரும். தென்னையின் நடுவே கோகோ பயிரிடுவதால் களைகள் கட்டுப்படும்; மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படும்; மண் அரிப்பு தடுக்கப்படும்.
  • கோகோ இலைகள் உதிர்ந்து மக்குவதால், மண்ணின் அங்ககச்சத்து ஹெக்டேருக்கு 1,000 முதல் 1,200 கிலோ வரை அதிகரிக்கும்.இவ்வாறு இசைவான பயிராக இருப்பதால், தென்னை மகசூல் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கிறது. தென்னந்தோப்பில் குளுமையான சூழ்நிலை உருவாகும்.
  •  கோகோ பழத்தின் “ஓடு’ உரமாகவும், கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது. கூடுதல் சிரமமன்றி கோகோ சாகுபடி செய்யலாம். ஹெக்டேருக்கு ரூ. 50 ஆயிரம் வரை கூடுதல் வருமானம் கிடைக்கும்.
  • மேலும், கோகோ கன்றுகளை வழங்கும் மாண்டலிசா இண்டியா புட் நிறுவனம், அன்றைய சந்தை விலைக்கே விளைபொருளைக் கொள்முதல் செய்வதால் விற்பதில் பிரச்னை இல்லை.

 சாகுபடி குறிப்பு

  • கிரையல்லோ, பாரஸ்டிரோ, டிரைனைடாரியா, சி.சி.ஆர்.பி-1 முதல் 7 வரையுள்ள ரகங்கள் சாகுபடி செய்யலாம். சாம்பல் சத்து நிறைந்த அங்ககச்சத்து மிகுந்த, கார அமிலத்தன்மை 6.6 முதல் 7.0 வரையிலான மண் வகை மிகவும் ஏற்றது.
  • கடல் மட்டத்திலிருந்து 1,200 மீட்டர் உயரம் வரையுள்ள பகுதியில் இது வளரும். 3 மீட்டருக்கு 3 மீட்டர் (10 அடிக்கு 10அடி) என்ற இடைவெளியில் பயிரிடலாம். தென்னையின் 2 மரங்களுக்கு இடையில் ஒரு கோகோ, இரண்டு வரிசைகளுக்கு இடையில் ஒரு கோகோ என நட வேண்டும். 1.5 அடிக்கு 1.5 அடி என்ற அளவில் குழியமைக்க வேண்டும்.

 உர அளவு

  • மூன்றாம் ஆண்டு முதல் செடிக்கு ஆண்டுக்கு யூரியா 220 கிராம், சூப்பர் பாஸ்பேட் 250 கிராம், மூரேட் ஆப் பொட்டாஷ் 240 கிராம் உரங்களை ஏப்ரல், மே மாதங்களில் ஒருமுறை, ஆகஸ்ட், செப்டம்பரில் ஒருமுறை என இருமுறை பிரித்து இட வேண்டும். முதல் ஆண்டில் இதில் 3இல் ஒரு பங்கும், 2ஆம் ஆண்டில் 3இல் 2 பங்கும் இட வேண்டும்.

 மானிய உதவி

  • முந்திரி, கோகோ மேம்பாட்டுக் கழக இயக்கக உதவியுடன், தோட்டக்கலைத் துறை ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்ககத்தின் கீழ் ஹெக்டேருக்கு ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள மானிய உதவியாக 500 கோகோ கன்றுகள், பராமரிப்பு மானிய உதவி ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை தென்னை சாகுபடியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *