தென்னையில் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்

தென்காசி : தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து செங்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் விளக்கியுள்ளார்.

தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இவ்வண்டு பெரியதாக கருப்பு நிறமாக 5 சென்டி மீட்டர் நீளமுள்ளதாக இருக்கும். அதன் தலையின் மேல் பாகத்தில் காண்டா மிருகத்தின் கொம்பு போன்று ஒரு பாகம் இருக்கும். இந்த கொம்பு பெண் வண்டில் சிறியதாகவும், ஆண் வண்டில் பெரியதாகவும் இருக்கும். தாய் வண்டு நீள் வட்ட வடிவமான வெள்ளை நிற முட்டைகளை உரக்குழிகளில் 5 முதல் 15 செ.மீ.ஆழத்தில் இடுகின்றன.

ஒவ்வொரு வண்டும் 140 முட்டைகள் வரை இடும். இதன் பருவம் 8 முதல் 18 நாட்கள் ஆகும். புழுக்கள் வெள்ளை நிறமாக, உருண்டையாக, தலைப்பாகம் பழுப்பு நிறமாக இருக்கும். இவை ஒரு அடி ஆழத்தில் உரக்குழிகளில் இருந்து கொண்டு மக்கிய குப்பைகளை உண்டு வாழ்கிறது. இதன் பருவம் 100 முதல் 182 நாட்கள் ஆகும். முழு வளர்ச்சியடைந்த புழு உரக்குழியினுள் கூட்டு புழுவாக மாறுகிறது. இவ்வண்டின் வாழ்க்கை சுற்று 4 முதல் 8 மாதங்கள் வரை ஆகும்.

இவ்வண்டு தென்னை மர உச்சியில் தென்னை மட்டைகளுக்கு இடையே குருத்து இலைகளை குடைந்து சேதம் செய்யும். இவ்வாறு வண்டு போகும் துளைகளால் குருத்து இலை விரிந்து பின் வரிசையாக காணப்படும். விசிறி போன்ற வடிவில் இலைகள் வெட்டப்பட்டு இருக்கும். தென்னம் பாளைகளும் துளைக்கப்பட்டு குருத்துகள் காய்ந்து விடும். தாக்கப்பட்ட மரம் பலம் இழந்து வளர்ச்சி குன்றி காணப்படும்.

இவற்றை கட்டுப்படுத்த பட்டுப்போன மரங்களை அகற்றி அழித்து விட வேண்டும். இவ்வண்டின் பல பருவங்கள் எருக்குழியில் காணப்படுவதால் எருக்குழியிலிருந்து எருவை எடுக்கும் போது அதில் காணப்படும் வண்டின் முட்டை, புழுக்கள், கூட்டுப்புழு ஆகியவற்றை சேகரித்து அழித்து விட வேண்டும். கோடையில் பருவ மழை பெய்தவுடன் விளக்கு பொறிகளை வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். மண் பானைகளை வாய்ப்பகுதி மட்டும் பூமிக்கு மேல் தெரிவது போல் தென்னந்தோப்புகளில் புதைத்து அதனுள் ஆமணக்கு புண்ணாக்கை தண்ணீரில் ஊற வைப்பதன் மூலம் வண்டுகளை ஈர்த்து அழிக்கலாம்.

தென்னையின் பசுந்தண்டுகளையும், இலை குருத்துகளையும் தென்னந்தோப்புகளில் புதிய கன்னில் வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். மரத்திற்கு 250 கிராம் வீதம் மாலத்தயான் பவுடருடன் சம அளவு மணல் கலந்து குருத்து மட்டைகளுக்கு இடையிலுள்ள இடுக்குகளில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இட வேண்டும். இவ்வாறு கட்டுப்பாட்டு முறைகளை முழுமையாக கடை பிடித்தால்தான் காண்டாமிருக வண்டினை அறவே ஒழிக்க முடியும் என வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் அறிக்கையில் கூறியுள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “தென்னையில் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்

  1. Sonai says:

    எனது தென்னைமரத்தில் குருத்தில் பூச்சிகள் இருக்கிறது அதற்கு என்ன செய்ய வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *