தென்னையை தாக்கும் நத்தை புழு

கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் தென்னையை தாக்கி வரும் நத்தை புழுக்களை விவசாயிகள் உழவியல் முறை மற்றும் வேதியியல் முறைகளை கையாண்டு அழிக்கலாம்.
வேளாண் இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:

  • கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி, பெண்டரஅள்ளி, புலியூர், மஞ்சமேடு, பாரூர், கீழ்குப்பம், துரைப்பட்டி, பாப்பானூர், மோட்டுக்கரை , ஆட்டுகாரனூர் ஆகிய கிராமங்களில் உள்ள தென்னை மரங்களில் நத்தை புழுக்கள் எனப்படும் எரி பூச்சி தாக்குதல் தற்போது பரவலாக காணப்படுகிறது.
  • தமிழகத்தில் முதன் முறையாக இந்த பகுதியில் நத்தை புழுக்களின் தாக்குதல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • நத்தை புழுக்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறம் வெள்ளை கோடுகளுடன், நான்கு வரிசை ரோமங்களுடன் காணப்படும்.
  • இது மனித உடலில் பட்டால் அரிக்கும் தன்மை கொண்டது.
  • இந்த புழுக்கள் தென்னை ஓலைகளை சுரண்டியும், கடித்தும் சாப்பிட்டு மிகப்பெரிய சேதத்தை உருவாக்கி இதன் மூலம் ஓலைகள் காய்ந்து காணப்படும்.
  • இதனால், பச்சையம் முழுவதும் சுரண்டப்பட்டு மரத்தின் வளர்ச்சி குன்றி விளைச்சல் முழுவதும் பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்படும்.
  • இந்த புழுக்களை விவசாயிகள் விளக்கு பொறி, உழவியல் முறை மற்றும் வேதியியல் முறையில் அழிக்கலாம்.
  • விளக்கு பொறிகளை வைத்து தாய் அந்து பூச்சிகளை கட்டுப்படுத்த இரவு, 7 மணி முதல், 11 மணிவரை தென்னந்தோப்புகளில் ஏக்கருக்கு மூன்றிலிருந்து ஐந்து பொறிகள் வைத்து அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம. இதனால், இனப்பெருக்கம் முழுவதும் குறைந்துவிடும்.
  • உழவியல் முறையில் நிலங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • காய்ந்த ஓலைகள், மட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும். நிலங்களை உழவு செய்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • வேதியியல் முறையில் ஒரு லிட்டர் தண்ணீரில் டைகுளோர்வாஸ் இரண்டு மில்லி அல்லது மோனோகுரோட்டோபாஸ் இரண்டு மில்லி கலந்து அத்துடன் பூஞ்சான கொல்லி மருந்து காப்பர் ஆக்சி குளோரைடு, 2.5 கிராம் கரைத்து ஒட்டும் திரவத்துடன் தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தலாம்.
  • இந்த மருந்துகள் அனைத்தும் தனியார் உரம் மற்றும் பூச்சி மருந்து கடைகளில் விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விவரங்கள் அறிய விரும்புவோர் வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள் மற்றும் களப்பணியாளர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *