‘நமக்கு நாமே’ நாமே பறித்து கொள்ளலாம் தேங்காய்

ஒரு பக்கம் தென்னை மரங்கள் அதிகரித்து வந்தாலும், அவற்றில் ஏறித் தேங்காய் பறிப்பதற்கோ, மரத்தின் உச்சியில் மருந்து வைப்பதற்கோ தேவைப்படும் மரம் ஏறத் தெரிந்த ஆட்கள் குறைந்து வருகிறார்கள். இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் விதமாக வீட்டுக்கு வீடு, தோப்புக்குத் தோப்பு அந்தந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே மரம் ஏறித் தேங்காய் பறிக்கும், மருந்து வைக்கும் பணியைச் செய்யத் தற்போது பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது. இதில் பெண்களும் அதிகம் பயிற்சி பெற்றுவருவது உற்சாகமான செய்தி.

Courtesy: Hindu
Courtesy: Hindu

தென்னை வளர்ச்சி வாரியம்

தென்னை விவசாயத்தை ஊக்கப்படுத்தவும், முழுமையான பலன்களைப் பெறவும், புது விவசாயத் தொழில்நுட்பங்கள் மூலம் விளைச்சலையும் உற்பத்தியையும் பெருக்கிக்கொள்ள 30 ஆண்டுகளுக்கு முன்பு தென்னை வளர்ச்சி வாரியம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம் தென்னை விவசாயம் தொடர்பான ஆலோசனைகள், தொழில்நுட்பங்கள், பயிற்சிகள், அரசு மானியங்கள் வழங்கப்பட்டு வந்தன.

அந்தந்தப் பகுதி வேளாண் அலுவலர்கள் மூலம் இவை செயல்படுத்தப்பட்டுவந்தன. இந்தச் செயல்பாடுகள் மூலம் கடந்த காலத்தில் பெரிய வளர்ச்சி இல்லாத காரணத்தாலும், விவசாயிகளிடம் திட்டத்தைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் ஆள் பற்றாக்குறை நிலவுவதாலும், முறைகேடுகள் அதிகரித்ததாலும் செயல்பாட்டு முறைகள் மாற்றப்பட்டன.

தென்னை வாரியப் பணிகள் விவசாயிகளுக்கு நேரடியாகச் சென்று சேரும் வகையில், தென்னை உற்பத்தியாளர்கள் சங்கங்கள் (சொசைட்டிகள்) மூலமாகவே திட்டத்தைச் செயல்படுத்தும் ஏற்பாட்டை 2013-ம் ஆண்டில் தென்னை வளர்ச்சி வாரியம் செய்தது. அந்த வகையில் நான்கு சங்கங்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு, 10 கூட்டமைப்புகளை உள்ளடக்கிய ஒரு தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனம் போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இதுபோல 13 நிறுவனங்கள் உள்ளன. அரசின் தென்னை சம்பந்தப்பட்ட மானியங்கள், தொழில்நுட்பங்கள், பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இந்த நிறுவனங்கள் தென்னை விவசாயிகளுக்கு நேரடியாகக் கொண்டு செல்லத் தொடங்கியுள்ளன. அதாவது தென்னைக்கு உரிய மண் பரிசோதனை, நோய்கள், மருந்து பொருட்கள், உரம், மண்புழு உருவாக்கும் குடில் உள்ளிட்ட அரசுத் திட்டங்களை விவசாயிகளிடம் நேரடியாகக் கொண்டு சேர்ப்பதே இந்த நிறுவனங்களின் பணி. அதில் ஒன்றாக தென்னை மரம் ஏறும் பயிற்சியும் கூடுதல் வேகம் பெற்றுவருகிறது.

ஆள் பற்றாக்குறை

இதுகுறித்து உடுமலைப்பேட்டை தென்னை விவசாயிகள், உற்பத்தியாளர்கள் நிறுவனத் தலைவர் எஸ். செல்வராஜ் பகிர்ந்துகொண்டது:

திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இதுபோல மூன்று நிறுவனங்கள் உள்ளன. அதில் எங்கள் நிறுவனமும் ஒன்று. இதில் 1,717 தென்னை விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். தென்னை நாற்றுப்பண்ணை உருவாக்கம், கருப்பட்டி, இளநீருக்கு வெளிநாட்டு ஏற்றுமதிக்கான வாய்ப்பு, நீரா (பதநீர்) பதப்படுத்திப் பாட்டிலிங் செய்வது, அதற்குரிய ஆய்வகம் என்பது உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விஷயங்களை, அரசு மானியங்களுடன் இந்த நிறுவனம் செய்துவருகிறது.

அதில் ஒன்றாகத்தான் தென்னை மரம் ஏறும் பயிற்சியை அளித்து வருகிறோம். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. ஒரு ஹெக்டேருக்கு 175 மரம் வீதம் கணக்கிட்டால், கிட்டத்தட்ட 85 லட்சம் மரங்கள் இருக்கும். ஆனால் மரம் ஏறித் தேங்காய் பறிப்பவர்கள், மரத்தின் உச்சிக்குச் சென்று மருந்து வைப்பவர்கள் எனப் பார்த்தால், விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் இருக்கிறார்கள்.

மரம் ஏறும் பயிற்சி

குறிப்பாக, உடுமலையில் நீரா எடுக்க 100 பேர் உரிமம் பெற்றுள்ளனர். கருப்பட்டி காய்ச்சும் ஆலைகளும் அதே அளவுக்கு உள்ளன. ஆனால் தென்னை மரம் ஏறத் தெரிந்தவர்களோ மிகக் குறைவாகவே உள்ளனர். தென்னை மரம் ஏறும் பயிற்சிக்கு ஆறு நாட்கள் போதும். இதில் 20 பேர் கொண்ட குழு பயிற்சி பெறுவதற்கு ரூ. 56,500 மானியத்தைத் தென்னை வளர்ச்சி வாரியம் வழங்குகிறது. அதை வைத்துக் கடந்த மூன்று ஆண்டுகளில் தேவனூர்புதூர், புங்கம்புத்தூர், வீரல்பட்டி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ஊர்களில் பயிற்சியை வழங்கியுள்ளோம்.

இதுவரை 500 பேர் தென்னை மரம் ஏறும் பயிற்சியை முழுமையாகப் பெற்றுள்ளார்கள். இதில் 60 பெண்களும் அடக்கம். இந்த ஆண்டில் மேலும் 200 பேருக்குப் பயிற்சியை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு மரம் ஏறும் கருவியும் இலவசமாகத் தரப்படுகிறது.

இதன்மூலம் தென்னை மரத்திலிருந்து தேங்காய் பறித்துப் போட, இளநீர் பறித்துப்போட கூலியாட்களை எதிர்பார்த்துக் காத்திராமல் விவசாயக் குடும்பங்களில் உள்ளவர்களே ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள்” என்றார்.

தென்னை மரம் ஏறுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு மரத்துக்கு ரூ. 25 கூலியாக இருந்தது. அது தற்போது ரூ.50 ஆக ஏறியுள்ளது. கூலி கொடுத்து கட்டுப்படியாகாத விவசாயிகளும், வேறு வேலை தேடும் கூலிக்காரர்களும், இந்தப் பயிற்சியில் ஆர்வமாக ஈடுபட்டுவருகிறார்கள்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *