பதநீர் செய்து லாபம் பார்க்கும் பொறியிலாளர்!

விவசாயப் பொருட்களை மதிப்பு கூட்டி விற்கிறபோதுதான், அதற்கான உழைப்பின் பலன் முழுமையாகக் கிடைக்கும் என்பது அனுபவ உண்மை. அந்த முயற்சிகளில் இறங்குகிறபோது விவசாயிகளும் தொழில்முனைவோராக மாறுகின்றனர். அந்த வகையில் தென்னை விவசாயிகள் பலரும் மதிப்புக் கூட்டல் தொழில்முனைவோராக உள்ளனர். அதில் ஒருவர்தான் உடுமலைப்பேட்டை சித்தார்த். தென்னை பதநீரிலிருந்து சர்க்கரை தயாரிப்பில் ஈடுபட்டுவரும் இவரது அனுபவம் பார்ப்போமா?

நான் பொறியியல் படிப்பும், என் தம்பி கௌதம் எம்பிஏவும் படித்துவிட்டு கோவையில் வேலை செய்து கொண்டிருந்தோம். எங்களது நிலத்தில் தென்னை விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் அதன் பலன் எங்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. தென்னையில் பலரும் பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் நாமும் ஏதாவது தயாரிப்பில் இறங்கலாம் என யோசித்தோம். அதற்காக தென்னை சார்ந்த தயாரிப்புகள் குறித்த தேடலில், தென்னைச் சர்க்கரை தயாரிக்கலாம் என முடிவெடுத்தோம். தென்னையிலிருந்து பதநீர் எடுத்து அதிலிருந்துதான் இந்த சர்க்கரை தயாரிக்க முடியும். இந்த முயற்சிக்கு தென்னை மேம்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களும் கிடைத்தன.

சோதனை முயற்சியாக முதலில் 10 மரங்களில் மட்டும் பதநீர் எடுத்தோம். தொடங்கினோம். நாட்டுச் சர்க்கரைப் போலத்தான் இதன் தயாரிப்பு முறை என்றாலும், தென்னம் பதநீருக்கான பக்குவம் வேறு என்பது எங்களுக்கு பிடிபட ஒரு ஆண்டு ஆனது. பதம் கொஞ்சம் முன் பின் ஆனாலும் நாம் எதிர்பார்க்கும் தரம் கிடைக்காது. பாரம்பரிய தொழில்நுட்பம்தான் என்றாலும், நவீன சாதனங்களையும் பயன்படுத்தினோம். முக்கியமாக யாரிடமும் போய் கற்றுக் கொள்ள முடியாத சூழலில் நாங்களே எல்லா தவறுகளையும் செய்து அதிலிருந்து கற்றுக் கொண்டோம்.

ஆரம்பத்தில் இதற்கான வாய்ப்புகள் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள கோயம்புத்தூரில் முக்கிய கடைகளில் இதை விற்பனைக்கு கொண்டு சென்றோம். தொடர்ச்சியாகக் கிடைக்குமா என்பதும், பெரிய உற்பத்தியாளரா என்பதும் முதல் கேள்வியாக இருந்தது. இதற்கு பிறகு உற்பத்தியை அதிகப்படுத்தியதுடன் டெட்ரா பேக் முறையில் பேங்கிங்கிலும் நவீன வடிவம் கொடுத்தோம். தற்போது கோயம்புத்தூரிலேயே ஆர்கானிக் கடைகள் மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றுக்கு தொடர்ச்சியாக கொடுத்து வருகிறோம். தற்போது ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்தும் வருகிறோம்.

Courtesy: Hindu

தொடக்க முயற்சிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தென்னம்பதநீர் எடுப்பதை 60 மரங்களுக்கு என அதிகரித்தோம். இதிலிருந்து சேகரிக்கப்படும் பதநீரைக் கொண்டு மாதத்துக்கு 400 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். சராசரியாக இதன் விலை தற்போது ரூ.400 வரை விற்பனை ஆகிறது. எல்லா வகையிலான செலவுகள் போக விவசாயிகளுக்கு லாபம் நிச்சயம் என்பதை எங்களது அனுபவத்திலிருந்தே சொல்ல முடியும்.

முதலில் எங்கள் வேலைகளினூடே பகுதி நேரமாக இதற்கான வேலைகளைச் செய்தோம். தற்போது முழுமையாக கவனம் செலுத்துகிறோம்.

இந்த தொழிலில் இறங்க அதிக தென்னைமரங்கள் கொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. குறைந்தபட்சம் 10 மரங்கள்கூடபோதும். அந்தந்த பகுதியிலேயே தொடங்கலாம். ஆனால் பதநீர் இறக்குவதற்கான அனுமதி, தென்னை வாரிய வழிகாட்டுதல்கள் தேவை. தவிர உணவுதர சான்றிதழும் வாங்க வேண்டும்.

இப்போது தென்னை பதநீர் இறக்க 5 நபர்களும், உற்பத்தியில் ஐந்து நபர்களும் உள்ளனர். எங்களது இந்த முயற்சிகளுக்கு வீட்டில் உள்ளவர்களது முழு ஒத்துழைப்பும் கிடைக்கிறது. தேங்காய், இளநீர் விற்பனை மூலம் கிடைக்காத வருமானம் இதன் மூலம் கிடைப்பதால் அப்பாவும் உற்சாகம் தருகிறார்.

அடுத்த தலைமுறையினர் விவசாயத்தில் ஈடுபடும்போது அதை வேறு வகையில் கொண்டு செல்ல முடியும் என்பதுதான் எங்கள் அனுபவத்தில் மூலம் சொல்ல வருவது என்றார். எல்லா பகுதிகளிலும் இளைஞர்கள் இந்த வகையில் முயற்சித்தால் மதிப்பு கூட்டு தொழிலிலும் மகத்தான வருமானம் பார்க்கலாம்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *