புதுக்கோட்டையில் தென்னைப் பண்ணையில் ஊடுபயிராக மிளகு!

தென்னை மரங்களுக்கிடையே மிளகை ஊடுபயிராகச் சாகுபடி செய்து சாதனை செய்து வருகிறார்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள்.

மிளகு

நமக்கெல்லாம் மிளகு என்றாலே கேரள மாநிலத்தில் மட்டுமே விளையும் பொருள் என்று நினைப்பு இருக்கிறது. தமிழ்நாட்டை கணக்கில் எடுத்துக்கொண்டால், மலைகள் சூழ்ந்த, கேரளாவைப்போலவே இருக்கும் தேனி மாவட்டத்தைத் தாண்டி, மிளகு குறித்து நாம் யோசிக்கவே மாட்டோம். ஆச்சர்யமாக இந்த மிளகு சாகுபடி பலவருடங்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடியுமா?  `புதுக்கோட்டையில் மிளகா? சும்மா, கதை விடாதீங்க’ என்றுதானே கேட்கத் தோன்றும். நாமும் அப்படித்தான் கேட்டோம். ஆனால், நேரில் பார்த்தப் பிறகு வாயடைத்துப்போனோம். தென்னை மரங்களையும் குமிழ் மரங்களையும் சுற்றிச்சுற்றி மிளகு வளைந்து, விளைந்து கிடக்கும் காட்சி அடடா, பொன்னு விளையிற பூமின்னு சும்மாவா சொன்னாங்க புதுக்கோட்டை மாவட்டம் மண்ணை. இப்படிப்பட்ட மண்ணை ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேகேல் போன்ற கனிமங்களை எடுக்கிறோம் என்று கூறி, தோண்டி துவம்சம் செய்தால், எந்த விவசாயிதான் பொறுத்துக்கொள்வான்? இந்த மிளகு சாகுபடி ஆலங்கூடி வட்டத்தில் பரவலாகக் காணப்படுகிறது.

இங்குள்ள சேந்தன்குடி கிராமத்தில் செந்தமிழ்ச் செல்வன் தோட்டத்திலும் வடகாடு என்ற கிராமத்தில் உள்ள பால்சாமி மற்றும் அனவயல் பட்டிபூஞ்சை ராஜாகண்ணு மற்றும் திருவரங்குளம் பகுதியிலுமாக மொத்தம் 30-க்கு மேற்பட்ட விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் மிளகு பயிர் செய்துவருகின்றனர்.

இதில், ராஜாகண்ணு என்பவர் கடந்த வருடம் தனது தோட்டத்தில் 400 கிலோ அறுவடை செய்திருக்கிறார். ஒரு  ஏக்கரில் மிளகு பயிரிட்டு இந்தப் பலனை எடுத்திருக்கிறார். கடந்த வருடம் மிளகின் மார்க்கெட் விலை கிலோ ரூபாய் 1,000-த்துக்கு விற்பனை செய்யப்பட்டது. அய்யாக்கண்ணு தனது தோட்டத்தில் விளைந்த மிளகை ரூபாய் 800-க்கு விற்பனை செய்திருக்கிறார். மிளகில் சில வகைகள் இருக்கின்றன. அவற்றில், கரிமுன்டா, பன்னியூர் ஆகிய இரண்டு ரகங்களும் இந்தப் பகுதியில் நல்லமுறையில் காய்க்கின்றது. அதனால், அந்த ரகங்களையே தொடர்ந்து இப்பகுதி விவசாயிகள் பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் மிளகு பயிரிடப்படுவதைக் கேள்விப்பட்டு வியந்த கோவை வெள்ளியங்கிரி ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்த விவசாயிகள் குழுக்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்டவர்கள் சமீபத்தில் நேரில் வந்து பார்வையிட்டனர்.

அத்துடன் இந்தப் பகுதியில் மிளகு எப்படிப் பயிரிடப்படுகிறது? அவற்றின் விளைச்சலுக்கு இடப்படும் இயற்கை உரங்கள் என்ன? என்பது பற்றியெல்லாம் ஈஷா விவசாயிகள் குழுவுக்கு வடகாடு பால்சாமி  என்பவரது தோட்டத்தில் பயிற்சி முகாமும் நடைபெற்றது. இது குறித்து பாக்யராஜ் என்பவர் பேசும்போது, “முப்பது வருடங்களுக்கு முன்பு சபரிமலைக்கு எங்கள் பகுதியிலிருந்து சென்ற ஒருவர், அங்கிருந்த மிளகுச்செடிகளை எடுத்துவந்து அவரது தோட்டத்தில் பயிரிட்டிருக்கிறார். அப்போதே அவரிடம், மிளகெல்லாம் நம்ம மண்ணுக்குத் தலையெடுக்காதுப்பானு நிறைய பேர் கூறி இருக்கிறார்கள். ஆனால், அதெல்லாம் பொய்யாகி, இந்த மண்ணில் மிளகு தளதளன்னு வளர ஆரம்பிச்சுடுச்சு. அப்போ ஆரம்பிச்ச மிளகு சாகுபடி இப்போ வரைக்கும் தங்குதடையின்றி வளர ஆரம்பிச்சுடுச்சு. எங்கள் பகுதியில் வெற்றிகரமாக மிளகு பயிரிடுவதை நேரில் பார்த்துவிட்டு, மிளகு கன்றுகளை வாங்கிச் செல்கிறார்கள். அத்துடன் தமிழகம் முழுவதுமிருந்து கன்றுகள் கேட்டு ஆர்டர் வருகிறது. இது முற்றிலும் இயற்கை வேளாண்மை முறையில் பயிரிடுகிறோம்”  என்றார்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “புதுக்கோட்டையில் தென்னைப் பண்ணையில் ஊடுபயிராக மிளகு!

Leave a Reply to லட்சுமிஷி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *