மீண்டும் பரவும் "ஈரியோஃபைட்"

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்னையில் மீண்டும் ஈரியோஃபைட் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால், அதனை கட்டுப்படுத்தும், “அசாடிராக் சின்’ மருந்தை தென்னை விவசாயிகளுக்கு, தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதிகளான காவேரிப்பட்டணம், மாதேப்பட்டி, நெடுங்கல், அரசம்பட்டி ஆகிய பகுதிகளில், அதிக அளவில் தென்னை மரங்கள் உள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும், மொத்தம், 20 லட்சத்துக்கு மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளது. கடந்த, 15 ஆண்டுக்கு முன், மாவட்டத்தில் உள்ள தென்னை மரங்களில் ஈரியோஃபைட் நோய் தாக்குதல் ஏற்பட்டது.

நோய் தாக்கிய மரங்களில், தேங்காய்களின் பருமன் குறைந்து கடும் விலை வீழ்ச்சி அடைந்தது. நோயை கட்டுப்படுத்த மரங்களுக்கு வேர் மூலம் செலுத்தப்படும் “அசாடிராக்சின்’ என்ற மருந்து, அப்போது, விவசாயிகளுக்கு அரசு இலவசமாக வழங்கியது. இதனை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தியதால், நோய் தாக்குதல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு முதல் தென்னையில் மீண்டும் ஈரியோஃபைட் நோய் தாக்குதல் ஏற்பட்டது. நோயை கட்டுப்படுத்தும் அசாடிராக்சின் மருந்தை அரசு இலவசமாக வழங்காமல், கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன்பு, 50 சதவீத மானியத்தில் வழங்க முடிவு செய்து, இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, சுமார், 8 லட்சத்து, 50 ஆயிரம் மதிப்புள்ள, 1,200 லிட்டர் அசாடிராக்சின் மருந்து வழங்கியது. ஒரு லிட்டர் அசாடிராக்சின் மருந்தின் விலை, 700 ரூபாய் ஆகும்.

விலை அதிகமாக இருந்த கராணத்தால், பல விவசாயிகள் இந்த மருந்தை வாங்க ஆர்வம் காட்டவில்லை. மேலும், ஒரு சில விவசாயிகள் மட்டும், இந்த மருந்தை வாங்கி தோட்டங்களில் உபயோகித்தனர். பொதுவாக காற்றில் பரவும் ஈரியோஃபைட் நோய் ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாட்டு முறைகளை அனைத்து விவசாயிகளும் சேர்ந்து செய்தால் தான் நோய் கட்டுக்குள் வரும். விவசாயிகள் விலை கொடுத்து வாங்கி மருந்தை உபயோகிக்காததால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் மீண்டும் ஈரியோஃபைட் நோயின் தாக்குதல் அதிகரித்து, தென்னை மரங்கள் அழிந்து வருகிறது. எனவே, தமிழக அரசு தென்னை விவசாயிகளுக்கு, “அசாடிராக்சின்’ மருந்தை இலவசமாக வழங்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *