நிலக்கடலையை பிரித்தெடுக்கும் இயந்திரம்

எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலையை தரத்துடன் பிரித்தெடுக்க இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டலாம் என டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.சுந்தரராஜ் தெரிவித்தார்.

தமிழகத்தில் நிலக்கடலையானது 25 சதம் மானாவாரியாகவும், 75 சதம் இறவையிலும் சாகுபடி செய்யப்படுகிறது.

நிலக்கடலையை அறுவடை செய்வதற்கு ஆள்கள் பற்றாக்குறையாலும், கிடைக்கும் ஆள்களுக்கு அதிக கூலி கொடுக்கும் நிலைக்கும் விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.இதனால் அவர்கள் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்.

தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகளிடம் அறுவடை செய்த பயிரிலிருந்து நிலக்கடலையைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் குறித்து செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டு வருகிறது.

  • இந்த இயந்திரத்தின் மூலம் அறுவடைக்குப் பிறகு கடலைகளை தனியாகப் பிரிக்கப் பயன்படுத்தப்படும் வேலை ஆள்களின் தேவையைப் பாதியாக குறைக்க முடியும். மேலும், கிராமப்புற விவசாயிகள், பெண்கள் இந்த இயந்திரத்தை எளிதாக கையாளலாம்.
  • ஒரு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை செடிகளைப் பிடுங்கி, அதிலிருந்து கடலைகளை தனியாகப் பறித்து எடுக்க சுமார் 40 ஆள்கள் தேவைப்படுவர்.
  • தற்போதைய நிலையில், ஒரே நேரத்தில் இவ்வளவு எண்ணிக்கையிலான ஆள்கள் கிடைப்பது கடினம். மேலும், வேலை ஆள்களுக்கு கூலியாக ரூ.4,800 வரை செலவாகிறது.
  • இந்த இயந்திரத்தின் மூலம் நிலக்கடலைச் செடிகளை மட்டும் நிலத்திலிருந்து வேலை ஆள்களைக் கொண்டு அறுவடை செய்ய வேண்டும்.அதற்கு சுமார் 15 பேர் தேவைப்படுவார்கள்.
  • பின்னர், இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி நிலக்கடலை காய்களை மட்டும் தனியாகப் பிரிக்க 8 பேர் போதுமானது. இவ்வாறு செய்யும்போது ஒரு ஏக்கருக்கு ரூ.2,670 மட்டுமே செலவாகிறது. காய்கள் தனியாகவும், கொடி தனியாகவும் கிடைக்கப்பெறும்.
  • இந்த இயந்திரத்தை 8 மணி நேரம் தொடர்ந்து இயக்கினால் 1.5 யூனிட் வரை மின்சாரம் செலவாகும். நிலக்கடலை மணிகளைப் பிரிக்கும்போது கடலைகள் உடையாது. இந்த இயந்திரத்தின் விலை ரூ.22 ஆயிரம் ஆகும்.
  • மேலும் விவரங்களுக்கு டி.சுந்தர்ராஜ், திட்ட ஒருங்கிணைப்பாளர், டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் மையம், எலுமிச்சங்கிரி கிராமம், கிருஷ்ணகிரி என்ற முகவரியிலோ அல்லது 09443888644 என்ற கைபேசி எண்ணிலோ அல்லது 04343296039, 04343201030 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *